Wednesday, December 21, 2011

சசிகலா மூலம் பதவி பெற்றவர்கள் பட்டியல் ரெடி தமிழகம் முழுவதும் போலீஸ் அதிகாரிகள் மாற்றம்?

சசிகலா தயவில் பதவி பெற்ற போலீஸ் அதிகாரிகளின் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. முதல்வரின் பரிசீலனைக்குப் பிறகு பெரிய அளவில் டிரான்ஸ்பர் இருக்கும் என்று கூறப்படுகிறது. 


முதல்வர் ஜெயலலிதாவுக்கும், அவரது தோழி சசிகலாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், சசிகலா, அவரது கணவர் நடராஜன் மற்றும் அவர்களது உறவினர்கள் என்று 14 பேர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். அவர்களோடு எந்த தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என்று ஜெயலலிதா அறிவித்தார். அதை தொடர்ந்து சசிகலா மற்றும் அவரது கணவர் நடராஜன், உறவினர்களின் வீடுகளை உளவுத்துறை போலீசார் கண்காணிக்கத் தொடங்கியுள்ளனர். 

சசிகலா, நடராஜன் வெளிநாடு செல்ல வாய்ப்பு இருப்பதாக தகவல் பரவியதால், ஏர்போர்ட்டையும் போலீசார் கண்காணித்து வந்தனர். இந்தநிலையில் முதல்வர் ஜெயலலிதாவை டிஜிபி ராமானுஜம் நேற்று சந்தித்துப் பேசினார். அப்போது சசிகலா மற்றும் நடராஜன், அவரது உறவினர்கள் ராவணன், எம்.ராமச்சந்திரன் ஆகியோர் மூலம் பதவி பெற்றவர்களின் பட்டியலை உடனே தயாரிக்கும்படி முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார். அதன்பின்னர் டிஜிபி ராமானுஜம், நிர்வாகப் பிரிவு கூடுதல் டிஜிபி ராஜேந்திரன், உளவுத்துறை ஐஜி தாமரைக்கண்ணன் ஆகியோர் நேற்று இரவில் தீவிர ஆலோசனை நடத்தினர்.

அதில், அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் மேற்கு மண்டலத்தில் கமிஷனராக இருந்து, இப்போது மத்திய மண்டலத்துக்கு மாற்றப்பட்ட போலீஸ் அதிகாரி, மத்திய மண்டலத்தில் கடந்த ஆட்சியின்போது நியமிக்கப்பட்டு, இப்போது அதே பதவியில் தொடர்ந்து நீடிக்கும் போலீஸ் அதிகாரி, சென்னையில் துணை கமிஷனராக இருந்து, இப்போது மேற்கு மண்டலத்தில் எஸ்பியாக உள்ள போலீஸ் அதிகாரி, சென்னையில் ஒரு இணை கமிஷனர், கடந்த ஆட்சியின்போதும், இப்போதும் வடக்கு மண்டலத்தில் ஒரே மாவட்டத்தில் பணியாற்றும் எஸ்பி, மேற்கு மண்டலத்தில் கலெக்டர் மற்றும் அவரது மனைவியான போலீஸ் அதிகாரி ஆகியோரது பெயர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளதாக தெரிகிறது. இந்தப் பட்டியல் நேற்று இரவே போயஸ் கார்டனுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. முதல்வரின் பரிசீலனைக்குப் பிறகு இன்று அல்லது இன்னும் ஓரிரு நாளில் தமிழக அளவிலான டிரான்ஸ்பர் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கார்டனில் அதிரடி தொடர்கிறது

ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கம்ப்யூட்டர் பிரிவில் மேலாளராக வேலைபார்த்த சசிகலாவின் உறவினர் குமாரவேல் நீக்கப்பட்டுள்ளார். அதேபோல, போயஸ் கார்டனில் பணிபுரிந்து வந்த சசிகலாவின் உறவினர் குமார், தாமரை ஆகியோரும் நீக்கப்பட்டுள்ளனர். போயஸ் தோட்டத்துக்கு வரும் புகார் மனுக்களை வாங்கும் வேலையை குமார் செய்து வந்தார். வரவு-செலவு கணக்குகளை தாமரை பார்த்து வந்தார். இவர்கள் நீக்கப்பட்டதை அடுத்து, கட்சிக்கு தொடர்புடைய இதர அலுவலகங்களில் வேலை பார்க்கும் சசிகலாவின் உறவினர்கள் கலக்கத்தில் உள்ளனர்.

No comments:

Post a Comment