“வாயின் அருசி வயிற்றுளைச்சல் நீடுசுரம்
பாயுகின்ற பித்தமும் என் பண்ணுங்காண் – தூய
மறுவேறும் காந்தளம் கை மாதே, உலகில்
கருவேப் பிலையருந்திக் காண்.”
இதன் பொருள் : கறிவேப்பிலையால் அரோசிகம், வயிற்று எரிச்சல், பழைய நீண்ட சுரம், பித்தம் ஆகிய அனைத்தும் போகும்.
வளரும் இடம் : இது சிறுமர வகுப்பைச் சார்ந்தது. தோட்டம் உள்ள எல்லா வீடுகளிலும் கறிவேப்பிலைச் செடி கண்டிப்பாய் இருக்கும். இது காட்டிலும் வளரும். அதன் மணம் சிறிது குறைவாக இருக்கும். 8 அடி முதல் 10 அடி வரை வளரக் கூடியது.
அண்மைக் காலங்களில் புன்செய்ப் பகுதிகளில் நிறைய பயிர் செய்து விற்று வருகின்றனர். விவசாயிகள் நல்ல லாபம் பெறுகின்றனர்.
நாற்பது ஐம்பது வருடங்களுக்கு முன்பு எல்லாம் இதைக் குறத்திகள் காடுகளில் பறித்துவந்து காட்டுக் கறிவேப்பிலை என விற்றுப் பிழைத்து வந்தனர். இப்பொழுது எல்லாம் விற்பது இல்லை.
இது பராசக்தி மரம் என்றும், சக்தி மரம் என்றும் அழைக்கப்படும். வேப்பமரத்தின் வகையைச் சேர்ந்தது.
1. வேம்பு
2. சர்க்கரை வேம்பு
3. மலை வேம்பு
4. நில வேம்பு
5. சிவனார் வேம்பு
6. கறிவேம்பு
என வேம்பில் பல வகைகள் உள்ளன. கறிவேம்பு என்பதே கறிவேப்பிலை. கசப்புச் சுவை இல்லாத இதனை ஏன் வேப்பிலை வகையில் சேர்த்தனர் என்பது ஆராய வேண்டிய ஒன்று. இதைப் பற்றிப் பின்னர் பார்ப்போம்.
பயிர் செய்முறை : இதைப் பயிர் செய்ய 2 அடி சதுரம் உள்ள இடமே போதுமானது.
அடியில் மூன்று நான்கு அடிவரை நேராக வளர்ந்து பின் இரண்டு மூன்று கிளைகள் விட்டு வளரக் கூடியது. தரையை ஒரு முழ ஆழம் கொத்தி ஒரு வாரம் ஆறவிட்டு மட்கிய எருவைப் போட்டு மண்ணைப் பரப்ப வேண்டும்.
பின் கறிவேப்பிலை விதைகளை ஒரு விரல் ஆழத்தில் தூவி லேசாக மேலே மண் போட்டுத் தண்ணீர் தெளிக்க வேண்டும். காலை மாலை நீர் ஊற்றுவது நல்லது.
ஒரு அடி உயரம் செடிகள் வளர்ந்ததும் ஒன்றை மட்டும் விட்டுவிட்டு மற்றவைகளைப் பிடுங்கி விடவும். நான்கு ஐந்து மாதங்களில் நன்கு வளர்ந்து பலன் தர ஆரம்பிக்கும்.
கறிவேப்பிலை மரத்தின் அடியில் நிறைய கன்றுகள் முளைத்து இருக்கும். அதைப் பறித்தும் நட்டும் பயிர் ஆக்கலாம். இதுவே நல்ல முறை.
இதற்கு நிறைய தண்ணீர் ஊற்ற வேண்டிய அவசியம் இல்லை.
மருந்து செய்முறைகளும் – நீங்கும் நோய்களும்.
- இளநரை : இளம் வயதில் சிலருக்கு நரை உண்டாகும். இதனைப் ‘பித்த நரை’ என்றும் கூறுவர். மயிர்க் கால்களின் அடியில் கசப்புச் சுவை உள்ளது. இந்தக் கசப்புச் சுவை குறைவதாலேயே முடி நரைக்கின்றது என்று அண்மையில் ஓர் ஆய்வாளர் கூறி உள்ளார்.
நம் தமிழ்நாட்டில் பழங்காலத்தில் இருந்தே பித்தநரைக்குக் கறிவேப்பிலையைச் சாப்பிட்டு வந்துள்ளனர் என்பதைச் செவிவழிச் செய்தியாகக் கேள்விப்படுகின்றோம்.
காலையில் 6 மணிக்கு ஒரு கைப்பிடி இலை – மாலையில் 4 மணிக்கு ஒரு கைப்பிடி இலை பறித்து வாயில் போட்டு மென்று தின்று பால் குடித்து வந்தால் இளம் வயதில் வந்த பித்தநரை மூன்று நான்கு மாதங்களில் கருத்துப் போகும்.
கறிவேப்பிலை சாப்பிடுவதால் முடியின் அடியில் தீர்ந்து போன கசப்பு மீண்டும் உருவாகிறது என்பதையும், இதனால் இளநரை போகிறது என்பதையும் நாம் உணர முடிகின்றது.
இக்காரணத்தினாலேயே இதை வேம்பின் வகையில் சேர்த்துள்ளார் என்பதை அறிய முடிகின்றது.
பித்தநரை உள்ளவர்கள் கறிவேப்பிலையை மூன்று மாதம் தின்று பயன் அடையலாம்.
தங்கள் முடியையும், உடலையும் நன்கு வைத்துக்கொள்ள தற்கால நாளிதழ்களிலும் வார-மாத இதழ்களிலும் நிறைய குறிப்புக்கள் வருகின்றன. தலைமுடி சம்பந்தமான பச்சிலை மருந்துச் சூரணங்கள் செய்யும்போது அத்துடன் கறிவேப்பிலையையும் காயவைத்துச் சேர்த்துக் கொள்ளலாம்.
2. கறிவேப்பிலைச் சூரணம் : கறிவேப்பிலை, மிளகு, சுக்கு, சீரகம், பெருங்காயம், இந்துப்பு சமமாக எடுத்துக் கொள்ளவும். பெருங்காயத்தைச் சுட்டுப் பொறித்துக் கொள்ளவும். மற்ற மிளகு, சுக்கு, சீரகம் மூன்றையும் தனித்தனியே பொன் வறுவலாக வறுத்துக் கொள்ளவும். கறிவேப்பிலையை வறுக்க வேண்டாம். பிறகு அனைத்தையும் ஒன்றுசேர்த்து கல் உரலில் இட்டு இடித்துத் தூளாக்கி, சிறு கண் சல்லடையில் சலித்து எடுத்துக் கொள்ளவும்.
இதில் ஒரு தேக்கரண்டி அல்லது தேவையான அளவு எடுத்து சுடுசாதத்தில் போட்டு நெய் ஒரு கரண்டி விட்டுப் பிசைந்து சாப்பிடவும்.
பேதி ஆவதையும், மலச் சிக்கலையும் இந்த ஒரு சூரணமே போக்கிவிடும். குடல் பலகீனம் போய்விடும்.
இது பசியைத் தூண்டி, பித்தத்தையும் உடல் சூட்டையும் தணித்து உடல்பலத்தை உண்டு பண்ணும். செரிமானம் இன்றி வாந்தி வருவது போன்ற நேரங்களில் கறிவேப்பிலை அந்தக் குறையை நீக்கும்.
3. துவையல் : இன்று நகரங்களில் உள்ள இரவு இட்லிக் கடைகளில் பெரும்பாலானவற்றில் கறிவேப்பிலைச் சட்டினி வைக்கிறார்கள். இதுவே கறிவேப்பிலைத் துவையல்.
கறிவேப்பிலையை எடுத்து நெய் அல்லது எண்ணெயில் வதக்க வேண்டும். மிளகாய் ஐந்து ஆறு எடுத்து எண்ணெயில் வறுக்க வேண்டும். தேவையான அளவு பழம்புளியைச் சுட்டும், தேவையான அளவு உப்பையும் சேர்த்துக்கொண்டு நன்கு அரைக்கவும். துவையல் தயாராகி விடும். முதலில் உணவுடன் துவையலைக் கலந்து நெய் ஊற்றிப் பிசைந்து மூன்று நான்கு பிடி சாப்பிடவும். இதனால் அஜீர்ணம், உஷ்ணத்தால் ஆகும் பேதி, குமட்டல், வாந்தி, வயிற்றுக் கோளாறு ஆகிய அனைத்தும் நீங்கும்.
|
No comments:
Post a Comment