“அக்கர நோய் மாறும், அகலும் வயிற்றிழிவு,
தக்க வயிற்றுக் கடுப்புத் தானேரும் – பக்கத்தில்
எல்லாரையும் மருந்தென் றேயுரைத்து, நன் மனையுள்
வல்லாரையை வளர்த்து வை.”
இதன் பொருள் : வல்லாரையால் நாவில் ஏற்படும் நோய்களும், மலக்கழிச்சலும் ரத்தக் கிரகணியால் பிறக்கின்ற கடுப்பும் நீங்கும்.
உலகில் எத்தனையோ முக்கிய மூலிகைகள் உள்ளன. ஆனால் ஒவ்வொரு மூலிகையும் ஒவ்வொரு விதத்தில் உயர்வானதாகவே இருக்கும்.
கீழாநெல்லி மஞ்சள் காமாலையை எடுக்கும். முருங்கை விதை விந்துவைக் கட்டி வலிமையை உண்டாக்கும்.
கீழாநெல்லி போல் முருங்கை விதை வேலை செய்யாது. இதேபோல் ஒவ்வொரு பச்சிலையும் ஒவ்வொரு விதத்தில் வேலை செய்யும்.
ஆகையால் இதுதான் உயர்ந்த பச்சிலை என்று கூற முடியாது.
இது ஒரு பொதுக் கருத்து. ஆனால் இதற்கு விதிவிலக்கு போல் ஒரு பச்சிலை உண்டு. அது தான் ‘வல்லாரை’.
இதன் மற்ற தமிழ்ப் பெயர்களே இதன் குணத்தைக் கூறும்.
1) மதிவல்லி
2) வீரிய தேசு
3) அசுர சாந்தினி
4) விவேக வல்லி
5) நயன வல்லி
6) குணசாலி
7) குணத்தி
என்பனவாம்.
இன்னும் பல பெயர்கள் உண்டு.
அரபியில் இதன் பெயரும், அதன் பொருளும் உன்னதமானவை.
- வரகுக் கஹப் – (தங்க இலை = தங்கச் சத்துள்ள மூலிகை)
- வரகுக் கிஹன் = (அறிவின் இலை = அறிவைப் பெருக்கிக் கூர்மைப்படுத்தும் பச்சிலை)
- வரகுத்தம் = (இரத்த இலை = இரத்தத்தைத் தூய்மை செய்யும் பச்சிலை)
- வரகுசிஹத் = (ஆரோக்கிய இலை = ஆரோக்கியத்தை உண்டாக்கி அதனைப் பெருக்கும் மூலிகை)
- வரகுல் கமர் = (சோமவல்லி = முழு நிலவைப் போன்ற மூலிகை).
நம் முன்னோர்கள் அறிவையும், நினைவாற்றலையும் பெருகச் செய்ய சில பச்சிலைகளைக் கண்டுபிடித்துள்ளனர். இவைகளில் இந்த வல்லாரை முக்கியமான ஒன்று. சாதாரணமாகவும், எல்லா இடத்திலும் எளிதாகக் கிடைக்கக்கூடிய ஒன்று.
சிறந்த நூலாசிரியர்களும், சான்றோர்களும் இளவயதில் இதைச் சாப்பிட்டமையால் தாங்கள் கற்றவைகளை மறக்காமல் இருந்து அநேக நுட்ப நூல்களை எழுதும் ஆற்றலைப் பெற்றுள்ளனர்.
சமஸ்கிருதத்தில் மருத்துவ முறைகளை ஏராளமாக எழுதிக் குவித்த ‘தன்வந்திரி பகவான்’ என்னும் சித்தர், தன் சீடர்களுக்கு நினைவாற்றலையும், அறிவாற்றலையும் வளர்க்க வல்லாரை சம்பந்தப்பட்ட மருந்துகளைச் செய்து தந்துள்ளார் என அறிய முடிகிறது.
எனக்கு ஒரு பெண் குழந்தை உண்டு. அது கருவில் இருந்தபொழுது என் மனைவி வல்லாரையைச் சாப்பிட்டு வந்தார். வீட்டில் வல்லாரை வளர்த்து வந்தேன். குழந்தை பிறந்த பிறகு வல்லாரையைப் பல மாதங்கள் வரை தந்து வந்தேன். இப்பொழுது என் மகள் M.B.B.S. முடித்து அமெரிக்காவில் M.S. படித்து முடித்து இப்பொழுது M.D. பயில்கின்றார்.
வல்லாரையின் பயனை நன்கு அனுபவித்தவன் நான்.
“வல்லாரை தின்றால் எல்லாரையும் வெல்லலாம்” என்பது பழமொழி.
வளரும் இடம்: சிறு கொடி வகையைச் சேர்ந்த இது வயல் வரப்புகளிலும் வாய்க்கால் ஓரங்களிலும் வளரும். தண்ணீர் ஓரங்களிலும் செம்மண் நிலங்களிலும் நன்கு வளரக் கூடியது. பத்து நயா பைசா அளவில், இலையின் ஓரங்கள் தேங்காய்த் துருவல்போல் இருக்கும்.
பயிர் செய்யும் முறை : வீட்டில் குளிக்கும் நீர், கைகால் கழுவும் நீர் ஓடும் பகுதிகளில் நட்டு வைத்தால் நன்கு வளரும். இந்த இடங்கள் அசுத்தமாய் இருக்கும். ஆகையால் மனம் சிறிது அசூயைப்படும்.
எனவே தனியாக 3 அடி அகலம், 4 அடி நீளம் கொண்ட இடத்தை நன்கு மண்வெட்டியால் கொத்திவிட வேண்டும். ½ அடி ஆழத்தில் பசும் தழைகளையும், சாணத்தையும், மட்கிய எருவையும் போட்டுக் கிளறி மூட வேண்டும்.
பின்பு கரும்பு நட வரப்பு கட்டுதல் போல் கட்ட வேண்டும். பள்ளத்தில் நீர் நிற்க வேண்டும். நீர் நிற்கும் பள்ளத்தில் நடாமல் வரப்பின் நடுப்பகுதியில் வல்லாரைக் கொடியை வரிசையாக நட வேண்டும். ஒரு அடி இடைவெளி இருக்க வேண்டும்.
தண்ணீர் எப்போதும் பள்ளத்தில் நிற்பது போல் பார்த்துக்கொள்ள வேண்டும் அல்லது ஈரமாவது இருக்க வேண்டும்.
பத்து அல்லது பதினைந்து நாளில் வேர் விட்டு வளர ஆரம்பிக்கும். கொடிபோல் ஓடி மூன்று அங்குலம் முதல் நான்கு அங்குல தூரம் இடைவெளி விட்டு குத்துச் செடி போல் உருவாகும். அது நான்கு, ஐந்து இலைகளுடன் குத்துபோல் வளரும்.
மீண்டும் அதில் இருந்து கொடி போல் உருவாகி மீண்டும் இதேபோல் இலைகள் உருவாகும். இப்படியாக வளர்ந்து தரையில் படர்ந்து செல்லும். நாம் ஊற்றும் தண்ணீர் வளத்திற்கு ஏற்பத் தரை முழுதும் படர்ந்து, பச்சைப் பசேல் என வளரும்.
சில இடங்களில் இதன் இலைகள் வெளிறிய பச்சையும், மஞ்சளும் கலந்த வண்ணமுடன் காணப்படும். கழிவுநீர் நிற்கும் நிலப் பகுதிகளில் இது நன்கு வளரும்.
இதில் இலைகளை மட்டும் பறித்து எடுத்துக்கொள்ள வேண்டும். கொடி அடர்த்தியாக வளர்ந்து விட்டால் இடைஇடையே கொடிகளையும் சேர்த்துப் பறிக்கலாம். இலைகளுடன் இவைகளையும் சேர்த்துப் பறிக்கலாம். இலைகளுடன் இவைகளையும் பயன்படுத்தலாம். கெடுதல் இல்லை.
மீண்டும் அந்த வெற்றிடங்களில் சில நாட்களிலேயே வல்லாரை படர்ந்து வளர்ந்து விடும்.
எரு : நாம் வீடுகளில் கூட்டும் குப்பைக் கூளங்களையும், சாணியையும், காய்ந்த இலை, சருகுகளையும், பசும் தழைகளையும் போடலாம்.
இந்த வல்லாரையை வளர்க்க மிக நல்ல முறை ஒன்று உண்டு. இது சித்தர்கள் செய்யும் முறை. எரு போட்டு நிலத்தைப் பக்குவப்படுத்தும்போது சேங்கொட்டை 100 கிராம், நெல்லி வற்றல் 100 கிராம், தான்றிக்காய் 100 கிராம், கடுக்காய் 100 கிராம் இவைகளை நறுக்கிப் பூமியின் உள்ளே அரை அடி ஆழத்தில் போட வேண்டும். இந்த அளவு ஒரு அடி அகலம் இரண்டடி நீளம் உள்ள இடத்திற்குப் போதுமானது. மண்ணைக் கீழ் மேலாக நன்கு கிளறி விடவேண்டும்.
தண்ணீர் நிறைய விடவேண்டும். நான் வல்லாரை பயிர் செய்தபோது இவைகளைப் போட்டு எருவும் போட்டுத்தான் பயிர் செய்தேன். மேலே கூறிய சரக்குகள் மிகவும் குறைவான விலை உடையன. எல்லா நாட்டு மருந்துக் கடைகளிலும் கிடைக்கும்.
எந்தக் காரணம் கொண்டும் ரசாயன உரங்கள் போடக் கூடாது.
மருந்து செய்முறைகளும், நீங்கும் நோய்களும் :
மருந்திற்கு வல்லாரையைத் தயார் செய்யும் முறை : சிறிது காம்புடன் இலைகளைப் பறித்து எடுக்க வேண்டும். தூசு, மண் போகத் தண்ணீரில் போட்டு அலசி எடுக்க வேண்டும். நீண்ட நேரம் அலசக் கூடாது. தண்ணீர் போக உதறி, துணியின் மேல் காயப் போட வேண்டும்.
வெயில் படவே கூடாது. வெயில் பட்டால் வல்லாரையின் பெரும்பாலான சத்துக்கள் யாவும் அழிந்துவிடும். மின்விசிறியில் காய வைக்கலாம்.
6 அல்லது 7 நாட்களில் நன்கு காய்ந்து விடும். பின்னர் எடுத்துக் கண்ணாடிப் புட்டிகளில் இட்டு மூடி வைக்கவும். காற்று புக முடியாதபடி வைக்க வேண்டும்.
சுத்திமுறை : வல்லாரையில் சிறு தோஷம் உண்டு. அது போக வேண்டும் என்றால் பாத்திரத்தில் பசும்பாலைப் பாதி தண்ணீர் கலந்து ஊற்றி, துணியால் வேடு கட்டி இடியாப்பம் வேக வைப்பது போல் அவிக்க வேண்டும். முக்கால் பாகம் பால் சுண்டியதும் இறக்கி, வல்லாரையை எடுத்துக் காய வைத்துக் கொள்ளவும். காய்ந்த இலையைத்தான் அவிக்க வேண்டும்.
1. வல்லாரைச் சூரணம் : பாலில் அரைத்துக் காயவைத்த இலை 10 பங்கு; இதன் எடைக்குப் பத்தில் ஒரு பங்கு மிளகு.
மிளகை இரும்புச் சட்டியில் பொன் வறுவலாய் வறுத்துக்கொள்ள வேண்டும். பின் இரண்டையும் ஒன்றாய்க் கலந்து இடித்தோ அல்லது மிச்சியில் அரைத்தோ சலித்துக்கொள்ள வேண்டும்.
மருந்து தயாராகி விட்டது. இதில் கால் தேக்கரண்டி முதல் அரை தேக்கரண்டி வரை சாப்பிடலாம். பால் அல்லது தண்ணீர் உடன் சாப்பிடவும்.
காலை மணி 6-க்கும், மாலை மணி 4-க்கும் சாப்பிட வேண்டும்.
இந்த நாட்களில் பசும்பால், மோர், தயிர், வெண்ணெய் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
நீங்கும் நோய்கள் : ஆரம்ப யானைக்கால் நோய் நீங்கும். கால் மிகவும் பெரிதாய் இருந்தால் வடிவது வருடக் கணக்காய் ஆகும். ஆரம்ப நிலையில் உள்ளவர்களுக்கு 8 அல்லது 9 மாதங்களில் குணம் ஆகும். யானைக்கால் நோய்க்கு இதைவிடச் சிறந்த மருந்து இருப்பதாய்த் தெரியவில்லை.
இதனுடன் அலோபதி (ஆங்கில) மருந்தையும் உண்ணலாம்.
நினைவாற்றல் வளரும். தோல் நோய்கள் நீங்கும். மேலே பாடலில் கூறிய அனைத்துக் குணங்களும் ஏற்படும்.
சிறிய குழந்தைகளுக்கும் தரலாம். சிறிய மாத்திரையாகவோ, சிறிய கேப்சூலிலோ போட்டுத் தரலாம். குழந்தை ஆரோக்கியத்துடனும், அபரிமித அறிவாற்றலுடனும் வளரும்.
அரிப்பு : சிலருக்கு மருந்து சாப்பிட்ட 10 அல்லது 20 நாட்களில் அரிப்பு ஏற்படும். இப்படி அரிப்பு வந்தால் மருந்தை நிறுத்தி விடவும். பின் விளக்கெண்ணெய் வாரம் இருமுறை தேய்த்துக் குளிக்கவும். இப்படி நான்கைந்து முறை குளிக்க அரிப்பு அடங்கிவிடும். பிறகு பத்து நாள் விட்டு மீண்டும் சாப்பிடவும். இப்பொழுது அரிப்பு வராது.
வந்தால் மீண்டும் முன் போல் எண்ணெய் தேய்த்துக் குளிக்க அரிப்பு சுத்தமாய் நின்றுவிடும். பின் மருந்தைச் சாப்பிடலாம்.
இந்த நாட்களில் வயிறு பேதி சாப்பிடுவது மிகவும் நல்லது.
பொதுவாக மருந்தின் அளவு :
1. உலர்ந்த இலைத் தூள் வேளைக்கு 3 கிராம் முதல் 5 கிராம் வரை
உபயோகிக்கலாம்.
2. வல்லாரை சமூலத்தூளானால் 6 கிராம் முதல் 10 கிராம் வரை சாப்பிடலாம்.
3. பச்சை இலையானால் 3 கிராம் முதல் 5 கிராம் வரை சாப்பிடலாம்.
4. இலைச்சாறானால் 3 மில்லிகிராம் முதல் 5 மில்லிகிராம் வரை
சாப்பிடலாம்.
இதனைச் சில விதிமுறைகளின்படி சாப்பிட்டால் மிக நல்லது.
வல்லாரை சாப்பிட்டால் அது செரிக்கின்ற வரை வேறு எதுவும் சாப்பிடாமல் இருப்பது நல்லது.
இது செரிப்பதற்கு ஒரு மணி முதல் நான்கு மணி வரை ஆகும். உடலின் தன்மைக்கு ஏற்ப நேரம் மாறுபடும். இரண்டு மூன்று நாட்களிலேயே இதை உணர்ந்து கொள்ளலாம்.
இது சாப்பிடும் நாட்களில் உப்பு, புளி அறவே நீக்குதல் நல்லது. முடியாதவர்கள் புளி, கடுகு, நல்லெண்ணெய், மாமிசவகை, பறங்கிக்காய், பூசணிக்காய், பாகற்காய், அகத்திக்கீரை ஆகியவைகளை முடிந்த வரை நீக்கி உண்பது நல்லது.
மற்ற மூலிகை மருந்துகளுக்கு எல்லாம் கூறாத கட்டுப்பாடுகளும் உணவு முறைகளும் இதற்கு மட்டும் கூறும் காரணம், மகத்தான இதன் பலன்கள் அனைத்தையும் உடல் பெற வேண்டும் என்பதற்காகவே.
2. வல்லாரைக் கற்பம் : காடுகளிலும், மலைகளிலும், சமவெளிகளிலும் உள்ள மூலிகைகள் பல. இவைகளில் சித்தர்கள் மூலிகைகளைத் தேர்ந்து காய கற்ப மூலிகைகள் எனக் கூறுகின்றனர். நாம் மரணத்தின் மூலம் அழியவிடும் இந்த நம் மெய்யை (உடலை) அழியாதபடி காப்பவை இந்த மூலிகைகள். இவைகளில் வல்லாரையும் ஒன்று. எனவேதான் இதனை விரிவாகக் கூறவேண்டியதாயிற்று.
3. காக்காய் வலிப்பு, மூர்ச்சைக்கு :
1) தூய்மையான பாலில் செய்து உலர்த்திய வல்லாரைத் தூள்
2) வெள்ளருக்கத் தூள்
3) கோஷ்டத்தூள்
4) வசம்புத்தூள் (இதை சுட்டெரித்துச் சாம்பலாக்கிக் கொள்ள
வேண்டும்)
5) ஏல அரிசித்தூள்
வகைக்கு 50 கிராம் அரைத்துத் தூள் செய்து வைத்துக் கொள்ளவும். காலை 6 மணிக்கும் மாலை 4 மணிக்கும் சாப்பிட வேண்டும். வேளைக்கு 1 கிராம் அல்லது 2 கிராம் சாப்பிடலாம்.
இச்சாபத்தியம் இருந்தால் நல்லது. இதனால் கால், கை வலிப்பு (காக்காய் வலிப்பு) வெட்டி வெட்டி இழுக்கும் குதிரை வலிப்பு, மூர்ச்சித்து மயங்கி விழுதல் ஆகியவைகள் குணம் ஆகும்.
குறைந்தது 2-3 மாதங்களாவது சாப்பிட வேண்டும்.
4.மூளை பலப்பட : வல்லாரைச் சாறு 5 மில்லி கிராம் – பசும்பால் 250 மில்லி கிராம் கலந்து காலையில் சாப்பிட வேண்டும். பத்து நாள் சாப்பிட்டு – நிறுத்துக. 10 நாள் விட்டு மீண்டும் பத்து நாள் சாப்பிடுக. இப்படியே சாப்பிடுக. மூளை பலப்படும்.
5.வல்லாரைத் தைலம் : வல்லாரைத் தைலம் பெரும்பாலும் யாரும் பயன்படுத்துவது இல்லை. இது உயர்வான தைலம். எளிதாகச் செய்து கொள்ளலாம்.
1) வல்லாரைச் சாறு ஒரு லிட்டர்
2) நல்லெண்ணெய் அரை லிட்டர்
3) பசும்பால் ஒரு லிட்டர்
4) அதிமதுரம் 50 கிராம்
5) வெட்டிவேர் 50 கிராம்
6) விலாமிச்சம் வேர் 50 கிராம்
7) கிச்சிலிக் கிழங்கு 15 கிராம்
8) கோரைக் கிழங்கு 15 கிராம்
முன் மூன்று திரவங்களையும் கலந்து கொள்ளவும். மற்றவைகளைப் பசும்பால் விட்டு நன்கு அரைத்துக் கலந்து கொள்ளவும்.
அடுப்பில் வைத்து மூன்று நாள் இளஞ்சூடு காட்டவும். நான்காம் நாள் சிறு தீயாய் எரித்து, தண்ணீர்ச் சத்து நீங்கியதும் இறக்கவும்.
வடிகட்டிப் புட்டியில் வைக்கவும். இதனைத் தலையில் தடவிச் சீவிக் கொள்ளலாம். வாரம் இருமுறை தேய்த்துக் குளிக்கலாம். தலை, மூளை பலப்படும். மூளையின் பலக்குறைவால் உண்டாகும் தலைவலி, தலை மயக்கம், கிறுகிறுப்பு ஆகிய நோய்கள் தீரும்.
எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் நாளில் புளிப்பு மோர், பகலில் தூக்கம், புணர்ச்சி முதலியவைகளை நீக்கவும்.
6. அகத்தியர் வல்லாரைச் சூரணம் :
1) வல்லாரைத்தூள் 500 கிராம்
2) லவங்கம் 50 கிராம்
3) ஏல அரிசி 50 கிராம்
4) சாதிக்காய் 50 கிராம்
5) சாதிப்பத்திரி 50 கிராம்
6) மாசிக்காய் 50 கிராம்
7) தாளிசப் பத்திரி 50 கிராம்
8) கடுக்காய்த்தூள் 50 கிராம்
9) தான்றிக்காய் தோல் தூள் 50 கிராம்
10) நெல்லிக்காய் வற்றல் 50 கிராம்
11) நாட்டுச்சர்க்கரை ஒரு கிலோ
இலையைத் தவிர்த்த மற்ற எல்லா மருந்துப் பொருள்களும் எல்லா நாட்டு மருந்துக் கடைகளிலும் கிடைக்கும்.
கடுக்காய், தான்றிக்காய், நெல்லி வற்றல் மூன்றிலும் விதைகளை நீக்கிச் சதையை மட்டும் சேர்த்துக் கொள்ளவும்.
சர்க்கரை நீங்கலாக அனைத்தையும் இடித்துச் சலித்துக் கொள்ளவும். பிறகு சர்க்கரையைக் கலந்து இடித்து – அல்லது அரைத்து எடுத்து வைக்கவும்.
மருந்து தயாராகி விட்டது. இதை காலை மணி 6-க்கும், மாலை மணி 4-க்கும் சாப்பிடவும்.
வேளைக்கு 5 கிராம் போதுமானது. நெய், வெண்ணெய், பால் போன்றவற்றில் சாப்பிடலாம் அல்லது தண்ணீரில் கலந்தும் சாப்பிடலாம்.
மேநோய்கள் அனைத்தும் நீங்கும். உடலின் காந்தல், கைகால் எரிவு, கண் எரிவு, கண் புகைச்சல், வயிற்றெரிச்சல், ஈரல் எரிச்சல், நெஞ்செரிச்சல், பெண்களின் தீட்டுச் சம்பந்தப்பட்ட நோய்கள் எரிச்சல், உடலில் அரிப்பு போல் தோன்றும் கிரந்தி நோய்கள், நீர் குறையும் நோய்கள், நீர் எரிச்சல், மூலச்சூடு, நீரிழிவில் வரும் தொல்லைகள் நீங்கிக் கட்டுக்குள் வரும், நீரிழிவுக்கு ஆங்கில மருந்தும் சாப்பிட்டு வர வேண்டும். நினைவாற்றல் நன்கு வளரும். இங்ஙனம் மனிதனுக்குப் பயன்படுவதால்தான் வல்லாரையின் தன்மை கூற வந்தவர் –
“........ மருந்தென்றே உரைத்து நன்மனையுள்
வல்லாரையை வளர்த்து வை”
என்று கூறுகின்றார்.
|
No comments:
Post a Comment