Tuesday, March 8, 2011

விண்டோஸ் 7:32/64 பிட்


தான் விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கு மாற இருப்பதாகவும், அதில் உள்ள 32 மற்றும் 64 பிட் சிஸ்டங்களில் எதனைப் பயன்படுத்த வாங்க வேண்டும் என முடிவு செய்திட முடியவில்லை என கோயம்புத்தூரிலிருந்து வாசகர் ஒருவர் கேட்டுள்ளார். இவற்றிற்கிடையே உள்ள வேறுபாடு என்னவென்றும், தனக்கு வீட்டு பயன்பாட்டிற்கும், தன் சிறிய தொழிற்சாலையின் பயன்பாட்டிற்கும் எதனை வாங்கலாம் எனக் கேட்டுள்ளார். 
இந்த சந்தேகம் பலருக்குத் தற்போது வந்துள்ளது. விண்டோஸ் 7 சிஸ்டத்திற்கு மாற்றிக் கொள்வது என்று முடிவெடுக்கையில் தோன்றும் அடிப்படைக் கேள்வி இதுதான். ஏற்கனவே மாறிய பலர், இப்படி ஒரு வேறுபாடு உள்ளதா? அப்படி யானால் என் கம்ப்யூட்டரில் என்ன போட்டுள்ளனர் என்றும் கேட்டு வருகின்றனர்.

நீங்கள் எந்த பிட் (32/64) சிஸ்டத்தினை இன்ஸ்டால் செய்து பயன்படுத்தினாலும், விண்டோஸ் ஒரே மாதிரியாகத் தான் தோன்றும். இருப்பினும் சில முக்கிய வேறுபாடுகள் இதில் இருக்கத்தான் செய்கின்றன. குறிப்பாக, புதிய ஹார்ட்வேர் அல்லது சாப்ட்வேர் ஒன்றை இணைக்கையில் கிடைக்கும் அனுபவத்தில் இதனைத் தெரிந்து கொள்ளலாம்.
இந்த "பிட்' என்பது என்ன?
64 அல்லது 32 பிட் என்று சொல்கையில், பிட் என்பது, ஒரே நேரத்தில், கம்ப்யூட்டர் கையாளும் தகவல்களைக் குறிக்கிறது. இந்த எண் பைனரி எண் ஆகும். நாம் வழக்கமாகப் பயன்படுத்தும் 1,2,3, என்ற டெசிமல் எண்கள் இல்லை. எனவே 32க்கும் 64க்கும் உள்ள வித்தியாசம், முதல் எண்ணை இரண்டால் பெருக்கிக் கிடைப்பது இல்லை. 64 பிட் கம்ப்யூட்டர், 32 பிட் கம்ப்யூட்டர் கையாளும் தகவல்களைக் காட்டிலும் ஏறத்தாழ 400 கோடி மடங்கு அதிகமாகவே கையாளும். அவ்வளவு வேகமா? என்று கேட்க வேண்டாம். இது வேகத்தைக் குறிக்க வில்லை. இரண்டும் ஒரே வேகத்தில் தான் இயங்கும். இரண்டிற்கும் இடையே உள்ள வேறுபாடு, அது கையாளும் தகவல்களின் அடர்த்தியில்தான் உள்ளது. 64 பிட் கம்ப்யூட்டர், மிகப் பெரிய அளவிலான ஸ்ப்ரெட் ஷீட்களைக் கையாளும் திறன் கொண்டிருக்கும். கேம்ஸ் பயன்படுத்துகையில் தரப்படும் கிராபிக்ஸ் சிறப்பான தோற்றத்தில் அமையும். அதனால் தான், அறிவியல் பணிகளுக்கான கம்ப்யூட்டர்கள், பல ஆண்டுகளுக்கு முன்பே 64 பிட் சிஸ்டத்தில் அமைக்கப்பட்டன. 
64 பிட் சிஸ்டம் தரும் மிக முக்கிய நன்மை என்னவெனில், கம்ப்யூட்டர் பயன்படுத்தும் மெமரி, அதிக அளவில் அமைந்திருக்கும். 32 பிட் மாடல் கம்ப்யூட்டரின் மெமரி 4 ஜிபி வரை தான் இருக்கும். இது வந்த புதிதில் மிக அதிகமாகத் தோன்றினாலும், இப்போது பயன்படுத்தும் சாப்ட்வேர் தொகுப்புகள், கேம்ஸ் ஆகியவை, 4 ஜிபி மெமரியினைப் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. கடந்த மூன்று ஆண்டுகளாகவே, ஹோம் கம்ப்யூட்டர்களில் 64 பிட் பயன்பாடும் தரப்படுகிறது. 2004 ஆம் ஆண்டிலேயே, ஏ.எம்.டி. நிறுவனம் ஏத்லான் 64, சிப்பினை வெளியிட்டது. தொடர்ந்து இன்டெல் நிறுவனம் வெளியிட்ட 64 பிட் சிப்கள் லேப்டாப் கம்ப்யூட்டர்களில் பயன் படுத்தப்பட்டன. இப்போது ஹோம் கம்ப்யூட்டர்களிலும் இவை வந்து விட்டன. 
தொடக்கத்தில் பெரிய வேறுபாடு தெரியவில்லை என்றாலும், ஏற்கனவே பழக்கத்தில் இருந்த சாப்ட்வேர் புரோகிராம்கள், பிரிண்டர் மற்றும் சவுண்ட்கார்ட் போன்ற துணை சாதனங்கள், 64 பிட் சிப்களுடன் இணைந்து செயல்பட மறுத்தன. ஆனால், இப்போது அனைத்து சாதனங்களும் 64 பிட் இயக்கத்திற்கும் இணையாக இயங்கும்படி அமைக்கப் பட்டுக் கிடைக்கின்றன. விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டம் பழக்கத்தில் வந்துள்ளதால், இந்த மாற்றம் முழுமையாக நமக்குக் கிடைத்து வருகிறது. 
நீங்கள் விண்டோஸ் 7 சிஸ்டத்திற்கு மாறுகையில் 64 பிட் சிஸ்டத்திற்கு மாறிக் கொள்வதில் தவறில்லை. ஆனால், புதிய ஹார்ட்வேர் எதனையேனும் இணைக்கையில், அதன் ட்ரைவர் புரோகிராம்கள், 64 பிட் இயக்கத்திற்கேற்ற வகையில் அமைக்கப் பட்டுள்ளனவா என்று கண்டறிந்து பயன்படுத்த வேண்டும். (ஒரு ட்ரைவர் புரோகிராம் என்பது, விண்டோஸ் சிஸ்டம் ஹார்ட்வேருடன் தொடர்பு கொள்ளப் பயன்படுத்தும் ஒரு புரோகிராம் ஆகும்.) விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டத்திலும் 64 பிட் பதிப்பு இருந்தது. ஆனால் அது அவ்வளவாகப் பிரபல மாகாததால், ஹார்ட்வேர் சாதனங்களை உருவாக்கிய பல நிறுவனங்கள், 64 பிட் திறனுக்கேற்ற ட்ரைவர்களைத் தயாரித்து வழங்கவில்லை. 
ஆனால், இப்போது அனைத்து சாதனங்களும், 64 பிட் திறனுக்கான ட்ரைவர்களைக் கொண்டுள்ளன. இதனை, அந்த ஹார்ட்வேர் சாதனத்தினைத் தயாரித்து வழங்கும் நிறுவனத்தின் இணைய தளம் சென்று தெரிந்து கொள்ளலாம். 
ஹோம் கம்ப்யூட்டர்களைப் பொறுத்த வரை, 64 பிட் சிஸ்டம் பயன்படுத்துவதில் கிடைக்கும் பெரிய அளவிலான பயன், அந்தக் கம்ப்யூட்டரில் 4ஜிபிக்கும் மேலான அளவில் மெமரி கிடைக்கும் என்பதே. இது பொதுவான பயன் பாட்டிற்கு அதிகமாகத் தோன்றினாலும், இன்றைய அளவில் வரும் பல புரோகிராம்கள், கிராபிக்ஸ் இணைந்த விளையாட்டுத் தொகுப்புகள், அதிக அளவில் மெமரியைப் பயன்படுத்து கின்றன. எனவே, 4 ஜிபிக்கு மேலாக மெமரி இருந்தால், பல புரோகிராம்களை ஒரே நேரத்தில் திறந்து பயன்படுத்துவது எளிதாக அமையும். மேலும் விண்டோஸ் 7 சிஸ்டம் தன் இயக்கத்திற்கே அதிக மெமரியை எடுத்துக் கொள்கிறது என்பதனையும் இங்கு நினைவில் கொள்ள வேண்டும். 
கம்ப்யூட்டரில் மெமரி அளவு குறைவாக இருப்பின், கம்ப்யூட்டர் மெதுவாக இயங்கும். இதனை நாம் அதிக புரோகிராம்களை ஒரே நேரத்தில் திறந்து வைத்து இயக்குகையில் அறியலாம். நவீன முப்பரிமாண கேம்ஸ்களை இயக்குகையில், இதனை அறியலாம். இந்த கேம்ஸ்கள், மெமரியில் அதிகப் பங்கினைக் கேட்கும். எனவே மற்ற புரோகிராம்களை நாம் இயக்கவே முடியாது. 4ஜிபி அளவு இதற்கு ஈடு கொடுக்க முடியாது. எனவே, அதிக மெமரியினை அனுமதிக்கும் 64 பிட் சிஸ்டம் நமக்கு சிக்கலைத் தருவதில்லை. புதியதாகக் கம்ப்யூட்டர் வாங்குபவர் களுக்கு, கம்ப்யூட்டர் தரும் நிறுவனங்கள், பெரும்பாலும் 64 பிட் சிஸ்டங்களையே வழங்குகின்றன. நீங்கள்,உங்கள் பழைய கம்ப்யூட்டரில், புதிய விண்டோஸ் 7 தொகுப்பினை இன்ஸ்டால் செய்வதாக இருந்தால், கம்ப்யூட்டரின் திறன் அறிந்து மேற்கொள்ள வேண்டும். 



No comments:

Post a Comment