காற்று உலகெங்கும் பரவி இருந்தாலும் ஒரே தன்மையில் இல்லை. சில நேரங்களில் அல்லது சில இடங்களில் வலிமை குறைந்தும் வேறு சில நேரங்களில் அல்லது இடங்களில் வலிமை மிகுந்தும் காணப்படுகின்றது.
கப்பல் தளபதி பிரான்சிசு பியூஃபோர்ட் (Sir Francis Beaufort : 1774 –1857) என்னும் ஐரீசு நாட்டு நீர்ஆராய்வாளர் 1806ஆம் ஆண்டில் காற்று வீசும் வலிமைக்கேற்ப அதனை வகைப்படுத்தினார். அவ்வாறு காற்று வீசும் விரைவிற்கேறப்ப வீச்சு எண்களையும் பின்வருமாறு வரையறுத்தார்.
காற்றின் வகைகளாகப் பிங்கல நிகண்டு (23 & 24) , வங்கூழ், மருத்து, சலனன், வாடை, வளி, கோதை, வாதம், கூதை, வேற்றலம், கால், ஒலி, உயிர், காலிலி, விண்டு, நீளை, உலவை, கொண்டல், கோடை, நிழலி, உயிர்ப்பு எனப் பலச் சொற்களைக் குறிப்பிடுகின்றது.
உயிரினங்களுக்கு உயிர்ப்பு அளிப்பதால் உயிர் அல்லது உயிர்ப்பு என்றும் ஓரிடத்தில் நிற்காமல் உலவிக் கொண்டு இருப்பதால் உலவி என்றும் கால் இல்லாமல் அலைவதால் காலிலி என்றும் பொருத்தமாகக் கூறியுள்ளனர். தமிழ் விண்டு என்பதுதான் ஆங்கிலத்தில் wind என மாறியதோ? மேலும், தெற்கில் இருந்து வீசுவதைத் தென்றல் வடக்கில் இருந்து வீசும் வாடைக்காற்றை வாடை, மேற்கில் இருந்து வீசும் வெப்பக் காற்றைக் கோடை, கிழக்கில் இருந்து வீசுவதைக் கொண்டல் என்றும் வரையறுத்துள்ளனர்.
குடக்காற்று என்பதும் மேற்கில் இருந்து வீசும் காற்றாகும். பனிக்காற்றானது கூதிர், ஊதை, குளிர் என மூவகைப்படும்.
குளிர்ந்த காற்றானது சாளரங்கள் வாயிலாக வீட்டிற்குள் நுழைவதைச்
சில்காற்று இசைக்கும் பல்புழை நல்லில் என மதுரைக் காஞ்சி (358) குறிப்பிடுகிறது.
கடுங்காற்றால் கப்பல் சிதைந்ததைக்
கடுங்காற்று எடுப்பக் கல்பொருது உரைஇ, என மதுரைக் காஞ்சி (378) கூறுகிறது.
பெருமலையைப் புரட்டுவது போன்ற பெருங்காற்று வீசியதைப்
பெருமலை மிளிர்ப்பன்ன காற்று எனக் கலித்தொகை: (45: 4) கூறுகிறது.
கப்பலைக் கவிழ்க்கும் சுழல் காற்றினைக்
கால்ஏ முற்ற பைதரு காலை,
கடல்மரம் கவிழ்ந்தென
என்று நற்றிணை (30: 7-8) கூறுகிறது.
அகன்ற கடற் பரப்பைக் கலங்கடிக்கும் காற்று குறித்துத்
துளங்குநீர் வியலகம் கலங்கக் கால்பொர என்று பதிற்றுப்பத்து (51) கூறுகிறது.
பெருமலையில் கடுங்காற்றுச் சுழன்றடிப்பதைக்
கடுங்காற்று எடுக்கும் நெடும்பெருங் குன்றத்து என அகநானூறு (258 : 6) கூறுகிறது.
நிலப்பரப்பில் சுழன்றடிக்கும் கடுங்காற்று குறித்துக்
கடுங்கால் கொட்கும் நன்பெரும் பரப்பின் எனப் பதிற்றுப்பத்து ( 17 : 12) கூறுகிறது.
கடற்கரை மணலை அள்ளித் தூவும் குளிர்ந்த காற்றை
நெடுநீர் கூஉம் மணல்தண்கான் எனப் புறநானூறு (396 : 5) கூறுகிறது.
மேலும் பலவகைக் காற்று குறித்து நாம் சங்க இலக்கியங்கள் மூலம் அறியலாம்.
19 ஆம் நூற்றாண்டில் கண்டறிந்த காற்றின் வகைகளை ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பழந்தமிழர்கள் உணர்ந்து வகைப்படுத்தியுள்ளனர் என்பது காற்றறிவியலில் சிறந்திருந்தனர் என்பதை உணர்த்துகின்றது அன்றோ?
|
No comments:
Post a Comment