“காசம், புகைச்சல், கருவிழிநோய், வாதமனல்,
கூசும் பிலிகங்கு தாங்குரநோய், - பேசில் ஐயா!
என்னங்காண் இப்படிவம் ஏம்மாம், செப்பலென்னாப்
பொன்னாங் காணிக் கொடியைப் போற்று.”
இதன் பொருள் : பொன்னாங்கண்ணியினால் விழியைப் பற்றிய வாதகாசம், தும்பிர ரோகம், கிருஷ்ண மண்டல ரோகம், வாத தோஷம், தேகச்சூடு, பீலிகம், மூலரோகம் இவை போகும். உடலில் பொன்னிறம் உண்டாகும்.
வளரும் இடம்: இதில் பல வகைகள் உண்டு. வயல் பொன்னாங்கண்ணி, சீமைப் பொன்னாங்கண்ணி, குரோட்டான்ஸ் பொன்னாங்கண்ணி எனப் பல வகைகள் உண்டு.
இவைகளில் வயல் பொன்னாங்கண்ணியே மிகவும் சத்து நிறைந்த ஒன்று. வயல்வரப்புக்களில், நீர் சூழ்ந்த இடங்களில் நிறைய முளைத்துக் கிடக்கும். சிறு கொடியாய் ஒரு அடி ஒன்றைரை அடி தூரம் ஓடித் தரையோடு ஒட்டிக் கிடக்கும். இலைகள் கத்தி போல் அரை அங்குலம் முதல் ஒரு அங்குல நீளம் கொண்டதாய் இருக்கும்.
விளக்குமாற்றுக் குச்சியின் தடிப்புடன் இதன் தண்டுகள் இருக்கும்.
இலைகளின் இடையில் நெல் பொரி மலர்ந்த்து போல் பூக்கள் நிறைய பூத்து இருக்கும். இது வயல் வரப்புகளில் நிறைய காணப்படும்.
சமையல் பொன்னாங்கண்ணி. குத்துச்செடி போல் அரை அடி முதல் முக்கால் அடி உயரம் வரை வளர்ந்து இருக்கும். இது சமைத்துச் சாப்பிட மிக மதுரமான சுவையுடன் இருக்கும்.
இதையே பெரும்பாலும் காய்கறிக் கடைகளில் விற்கின்றனர். இதன் இலைகளின் இடையில் வயல் பொன்னாங்கண்ணியில் பூ உள்ளது போல் இருக்காது.
வயல் பொன்னாங்கண்ணியைவிடப் பயிர் செய்ய இதுவே உகந்தது.
பயிர் செய்யும் முறை : வல்லாரைக்கு எரு இடுதல் போல் இதற்கும் இட வேண்டும்.
கரும்பு நடும் வரப்புபோல் வல்லாரைக்கு வரப்பு எடுக்க வேண்டும், ஆனால் பொன்னாங்கண்ணிக்கு நிலம் சமதரையாகவே இருக்க வேண்டும். வல்லாரைக்கு விடுவது போல் தண்ணீர் விட வேண்டியது இல்லை.
ஆரம்பத்தில் அரை அடிக்கு ஒரு பொன்னாங்கண்ணிக் கொடியை நட வேண்டும். இரண்டு மூன்று கணு உள்ளதாய்க் கொடி இருக்க வேண்டும்.
ஒரு கணு தரையின் உள்ளும். ஒரு கணுவோ இரண்டு கணுக்களோ தரையின் மேலும் இருக்க வேண்டும். ஒரு மாதத்தில் செழித்து வளர ஆரம்பிக்கும்.
இந்தக் கொடியை வேரோடு பிடுங்காமல் அறுத்து எடுத்துப் பயன்படுத்த வேண்டும்.
இதைச் சாம்பார் செய்து சாப்பிட மிக நன்றாய் இருக்கும். வாரத்திற்கு இரண்டு முறையாவது சாம்பார் செய்து சாப்பிடுவது மிக நல்லது. கூட்டாகவும் செய்து சாப்பிடலாம்.
மருந்து செய்முறைகளும் – நீங்கும் நோய்களும் :
1. சூரணம் : வல்லாரை இலையைப் பறிப்பது போல் பறித்து மண், தூசு போக மென்மையாக அலச வேண்டும். தண்டுகளையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். நிழலில் பரவலாகப் போட்டுக் காய வைக்க வேண்டும். தினம் இரண்டு மூன்று முறை புரட்டி விடவேண்டும். ஒரு வாரத்தில் காய்ந்து விடும்.
பிறகு இடித்துத் தூளாக்க வேண்டும். இதனுடன் வேறு மூலிகைகளையோ, கடைச் சரக்குகளையோ சேர்க்க வேண்டியது இல்லை. காலை 6 மணிக்கும், மாலை 4 மணிக்கும் அரை தேக்கரண்டி முதல் ஒரு தேக்கரண்டி வரை சாப்பிடலாம். உடன் பால் குடிப்பது மிகவும் நல்லது.
உடல் குளிர்ச்சி அடையும். கண்பார்வை தெளிவடையும். நீண்ட நாட்கள் சாப்பிடக் கண்ணில் உள்ள அனைத்து நோய்களும் நீங்கும். கைகால்களில் உள்ள எரிச்சல் சுத்தமாய் நீங்கும். உடல் பொன்னிறம் அடையும்.
தேவையான அளவு பருப்பு வேக வைக்கவும். தக்காளி தேவையான அளவு அரிந்து வைத்துக் கொள்ளவும். வெங்காயம் தேவையான அளவு நறுக்கி வைத்துக் கொள்ளவும். வெங்காயத்தை எண்ணெயில் நன்கு வதக்கவும். பின் தக்காளியும் போட்டு வதக்கவும். சிவந்ததும், அதில் தேங்காய், சீரகம் அரைத்த விழுதைக் கலக்கவும். மிளகாய்ப்பொடி, உப்பு தேவையான அளவு கலந்து கொள்ளவும்.
கடுகு தாளித்து அனைத்தையும் கொட்டி நன்கு கொதிக்க விடவும். நல்ல சாம்பார் தயாராகி விட்டது. சாப்பிட வேண்டியதுதான்.
2. பொன்னாங்கண்ணித் தைலம் :
1. பொன்னாங்கண்ணி இலைச்சாறு
2. தாமரைக் கிழங்குச்சாறு
3. நிலப்பனங் கிழங்குச்சாறு
4. விலாமிச்சம் வேர்ச்சாறு
5. எலுமிச்சம் பழச்சாறு
6. செவ்விளநீர்
7. பசும்பால்
8. நல்லெண்ணெய்
வகைக்குப் படி ஒன்று; இவைகளை ஒன்று கூட்டி இருப்புச் சட்டியில் விடவும். இதில், 1. சந்தனம், 2. நெல்லி வற்றல், 3. சீரகம், 4.ஏலம், 5.கோஷ்டம், 6. அதிமதுரம் வகைக்கு 5 கிராம் பொன்வறுவலாகத் தனித்தனியே வறுத்து ஒன்று கூட்டிப் பால்விட்டு அரைத்துக் கலக்கவும்.
இளந்தீயாக எரித்து நான்காம் நாள் எண்ணெயை இறக்கவும். இதைத் தலையில் தேய்த்துக் குளித்து வரவும்.
பித்தசுரம், பித்த மயக்கம், வாந்தி, எரிச்சல், தலை பாரம் நீங்கும். பித்த ரோகங்களைச் சமனப்படுத்தும்.
நிலப்பனங்கிழங்குச் சாறு, விலாமிச்சம் வேர்ச்சாறு கிடைக்கவில்லை என்றால் கடையில் காய்ந்து உள்ளதை வாங்கிக் கஷாயம் வைத்துச் சேர்த்துக் கொள்ளலாம். எல்லா நாட்டு மருந்துக் கடைகளிலும் கிடைக்கும்.
மேலே கூறிய சாறுகள் சேர்க்க இயலவில்லை என்றால்
1. பொன்னாங்கண்ணிச்சாறு
2. தாமரைக் கிழங்குச்சாறு
3. இளநீர்
4. பசும்பால்
மட்டும் சேர்த்துக் கொண்டு இத்துடன் கடைச் சரக்குகளை அரைத்துப் போட்டும் எரித்துக் கொள்ளலாம். இதுவும் வேலை செய்யும்.
3. பொன்னாங்கண்ணிக் கிருதம் :
1. பொன்னாங்கண்ணிச் சாறு 1 லிட்டர்
2. பொற்றலைக் கையாந்தகரைச் சாறு 1 லிட்டர்
3. பசும்பால் 1 லிட்டர்
4. பசுநெய் 1 லிட்டர்
இவைகளை ஒன்று சேர்த்து இரும்புப் பாத்திரத்தில் கொட்டி அடுப்பில் வைக்கவும்.
இதில் 75 கிராம் அதிமதுரத்தை அரைத்துக் கலக்கவும். நான்கு நாள் வரை சிறு தீயாக ஒவ்வொரு மணி நேரம் எரிக்கவும். ஐந்தாம் நாள் சிறு தீயாக எரித்துத் தண்ணீர்ப் பசை முற்றும் நீங்கியதும் இறக்கவும்.
அப்போது ஜாதிக்காய், ஜாதிப்பத்திரி, கோரோசனை, சீனாக்கற்கண்டு வகைக்கு ஐந்து கிராம் அரைத்து எண்ணெயில் போட்டு மூடி வைக்கவும். பின்பு வடிகட்டி அடைத்து வைக்கவும்.
இதில் தினம் காலை மாலை ஒரு சிறு கரண்டி வீதம் அதாவது 10 மில்லி கிராம் வீதம் சாப்பிடவும்.
அரை மண்டலம் அல்லது ஒரு மண்டலம் சாப்பிடவும். இதனால் பெண்களுக்கு உண்டாகும் வெட்டைச் சூடு உடன் நீங்கும். வெட்டைச் சூட்டால் குழந்தைகட்கு உடல் காங்கை, உடல்எரிவு, கணச்சூடு நீங்கும்.
இந்த நெய்யைக் குழந்தைகட்குத் தந்து வந்தால் காங்கை, உடல்எரிவு நீங்கிக் கணச்சூடு குறைந்து குழந்தை உடல் நன்கு பலப்படும். இது ஒரு அருமையான நெய்.
|
No comments:
Post a Comment