முருங்கைக் காய் :
“சொல்லும்நோய் கட்கெல்லாம் தோஷம்இலை - ஐயம் அறும்
பல்லுயிர்க்கும் தாதுமிகும் பத்தியமாம் – வில்லார்
பெருங்கைக்கா மன்றுதிக்கும் பெண்ணே! நறிய
முருங்கைக்காய் தன்னை மொழி.”
இதன் பொருள் : கூறும் எல்லா நோய்களுக்கும் பத்தியக் காயாகும். இது கபத்தை நீக்கும். விந்துவைக் கட்டும்.
முருங்கைப் பிசின் :
“முந்து நீரைத்தடுக்கும் மோரைப் போலே ஒழுகும்
விந்தைத் தடிப்பித்து மேனிதரும் – தொந்தக்
கரியநிற வாயுதனைக் காதுவிடும். நாளும்
பெரிய முருங்கைப் பிசின்.”
இதன் பொருள் : முருங்கைப் பிசின் அதிகம் மூத்திரம் போவதை நிறுத்தும். மோர் போல் வரும் விந்துவைக் கெட்டிப்படுத்தும். வாயுவை நீக்கும்.
முருங்கைப் பூ :
“விழிகுளிரும் பித்தம்போம் வீறருசி ஏகும்
அழிவிந்துவும் புஷ்டியாகும் – எழிலார்
ஒருங்கையக லாக்கற் புடைவா ணகையே!
முருங்கையின் பூவை மொழி”
இதன் பொருள் :
முருங்கையின் பூவிற்கு விழி குளிரும். பித்தம் போகும். அரோசகம் போகும். விந்து வலிமை அடையும்.
முருங்கை இலை :
“செறி மந்தம் வெப்பம் தெறிக்கும், தலைநோய்,
வெறி மூர்ச்சை, கண்ணோய் விலகும் – மறமே
நெருங் கையிலை யொத்தவழி நேரிழையே! நல்ல
முருங்கை இலையை மொழி”
இதன் பொருள் :
முருங்கை இலைக்கு அக்கினி மந்தம், வெப்பம், தலைவலி, பித்த மூர்ச்சை, கண்நோய் இவைகள் போகும்.
வளரும் இடம் :
இதுவும் இன்ன இடம் என்று இல்லை. எல்லா இடங்களிலும் வளரும். மணற்பாங்கான இடங்களில் நன்கு வளரும்.
பயிர் செய்யும் முறை :
வீட்டின் முன் பகுதியில் வைக்க வேண்டியது இல்லை. இம்மரத்தை மட்டும் வீட்டின் பின்னேயோ அல்லது பக்கங்களிலோ வைப்பது நல்லது. இதன் கிளைகளை ஒடிக்க, ஒடிக்க நன்கு வளரும். கீரை பறிக்கும்போது கிளைகளை ஒடித்துப் பறிப்பதே நல்லது. இப்படி அடிக்கடி ஒடிப்பதால் பார்க்க அழகாக இருக்காது. எனவே தான் பின்பக்கமோ அல்லது வீட்டின் பக்கத்திலேயோ வைப்பது நல்லது என்றேன்.
எந்த இடத்தில் வைக்க வேண்டுமோ அந்த இடத்தை நன்கு கொத்திக் கிளறி அதில் கையின் மொத்த நீளமும் 5 அல்லது 6 அடி நீளமும் உள்ள கிளையை நட வேண்டும்.
தலைப்பகுதியில் சாணியை அப்பி வைக்கவும். தளிர்விட்டு முளைக்கும் வரை தண்ணீர் ஊற்றி வரவேண்டும். பத்து அல்லது பதினைந்து நாளில் கிளையில் முளை விட ஆரம்பிக்கும்.
கிளைகளை உடைக்க உடைக்க நன்கு வளரும். கீரை, காய்கள் நிறைய கிடைக்கும்.
இப்பொழுது விதை போட்டு விளைய வைக்கும் முருங்கை மரம் வந்துள்ளது. இது ஒரு குறுகிய காலப் பயிர். கத்தரி, வெண்டை, அவரை போன்றவைகளைப் பயிர் செய்வது போல் விவசாயிகள் இன்று முருங்கையையும் பயிர் செய்கின்றனர். இது வேளாண்துறையின் நல்ல வளர்ச்சியாகும்.
மருந்து செய்முறைகளும் – நீங்கும் நோய்களும் :
1.கீரை உணவு : ‘எல்லோருடைய வீடுகளிலும் கீரையைச் சமைப்பர். இதை அனைவரும் அறிவோம். அதிகம் வேக வைக்கக் கூடாது. சாம்பார் அல்லது குழம்பு வைக்கும்போது கடைசியில் கீரையைப் போட்டுக் கிண்டி இறக்கி விட வேண்டும். இதுவே நல்லது. வாரம் இரண்டு மூன்று முறை சாப்பிடுவது நல்லது.
2. சர்க்கரை வியாதிக்காரர்களுக்குக் கீரை துவட்டல் : சிலர் கீரை வதக்கல் என்றும் கூறுவர். கீரையை ஆய்ந்து எடுத்து அலசிக்கொள்ள வேண்டும். நான்கு கைப்பிடிக் கீரை என்றால் 40 கிராம் அளவிற்குச் சுத்தமான எள் புண்ணாக்கை எடுத்துக் கொள்ளவும்.
அடுப்பில் வதக்கும் சட்டியை வைத்து அதில் இரண்டு தேக்கரண்டி நல்ல எண்ணெய் விடவும். எண்ணெய் சூடானதும் சிறிது கடலைப் பருப்பைப் போடவும். மூன்று நான்கு மிளகாயைக் கிள்ளிப் போட்டு வறுக்கவும். இவற்றோடு உரித்த ஏழு எட்டுப் பல் பூண்டும், மிளகு 10 கிராம், சீரகம் சிறிதும் நசுக்கிப் போடவும். வறுத்துக் கொண்டே இருக்கவும். இதில் 50 கிராம் அளவிற்கு வெங்காயம் அரிந்து போட்டு வதக்கவும். பிறகு புண்ணாக்கைப் போட்டு கிண்டிவிடவும். பிறகு அலசி வைத்துள்ள கீரையைப் போட்டுக் கிண்டவும். தேவையான அளவு உப்பும் கீரையுடன் போட்டுக் கொள்ளவும். நன்கு கிளறி இறக்கவும்.
சிறிது நேரம் மூடி வைக்கவும். கீரை வதக்கல் தயாராகி விட்டது.
இது சர்க்கரை நோயாளிகளுக்குச் சிறந்த உணவு. சர்க்கரை நோய்க் கட்டுப் பாட்டுக்குள் வரும்.
3.விந்து வலிவுற : இன்றைய சராசரி உணவின் முறைகளாலும், கடின உடல் உழைப்பு இன்மையாலும் மனித உடல் தன் சக்தியை, பலத்தை இழந்து உள்ளது. ரசாயன உரங்களால் தயாராகும் உணவும் உடலைக் கெடுப்பதில் பெரும்பங்கு வகிக்கின்றது.
பெட்ரோல், டீசல் பயன்படுத்தும் வாகனங்களும், பெரிய சிறிய தொழிற்சாலைகளும் காற்றைச் சுத்தமாய்க் கெடுத்துவிட்டன.
குடல் ஜீரணித்து ஏற்றுக்கொள்ளும் உணவுகளும், சுவாசப்பை சுவாசித்து உயிர்ப்பைத் தரும் காற்றும் மாசுபட்டுவிட்டதால் உடலில் ஆண்களுக்கு உருவாகும் விந்தும், வலுவிழந்து கெட்டுவிட்டது.
விந்து நீர்த்துப் போய் இருப்பவர்களுக்குக் குழந்தை பிறக்காது.
இந்தக் குறைகளை நீக்கி, உயிர்ப்பிப்பதில் முருங்கை பெரும் பங்கை வகிக்கின்றது.
பால், பூ :
பூ ஒரு கைப்பிடி எடுக்கவும். பசும்பால் 250 மில்லி கிராம் எடுத்து அடுப்பில் வைத்து, பூவை அதில் போட்டு வேக வைக்கவும். அடுப்பு மிக மிக மெதுவாக எரிய வேண்டும். ஒரு மணி அல்லது முக்கால் மணி நேரமாவது பாலை அடுப்பில் மெதுவாக எரிய விடுதல் வேண்டும்.
அதன் பின் பாலை எடுத்து, வடிகட்டி, பூவை நன்கு மத்தால் கடைந்து, பின் வடிகட்டிய பாலைக் கலந்து, கற்கண்டு அல்லது சர்க்கரை போட்டுச் சாப்பிடலாம்.
காலை மாலை இருவேளையும் சாப்பிடலாம். இதனால் ஆண்களுக்கு மிகுந்த பலம் உண்டாகும். உடல் உறவில் விருப்பமும் நீடித்த இன்பமும் உண்டாகும்.
இரண்டு மூன்று மாதங்கள் இப்படிப் பால், பூ சாப்பிட்டால் விந்து கெட்டிப்படும். குழந்தை கண்டிப்பாய் உருவாகும். பிறக்கும்.
4. முருங்கை விதை லேகியம் :
1. | முருங்கை விதை | 100 கிராம் |
2. | பாதாம் பருப்பு | 25 கிராம் |
3. | பிஸ்தாப் பருப்பு | 25 கிராம் |
4. | சாரப் பருப்பு | 25 கிராம் |
5. | சுக்கு | 15 கிராம் |
6. | மிளகு | 15 கிராம் |
7. | அரிசி திப்பிலி | 15 கிராம் |
8. | சன்னலவங்கப் பட்டை | 10 கிராம் |
9. | ஜாதிக்காய் | 10 கிராம் |
10. | ஜாதிப் பத்திரி | 10 கிராம் |
11. | கிராம்பு | 10 கிராம் |
12. | கசகசா | 10 கிராம் |
13. | நெல்லி வற்றல் | 10 கிராம் |
சம்மாக 290 கிராம் பனைவெல்லம் அல்லது சீனாக்கற்கண்டு எடுத்து நசுக்கி சிறிது நீர் கலந்து அடுப்பில் வைத்துக் காய்ச்சவும். பாகுபதம் வரும். அப்பொழுது மேலே உள்ள சூரணத்தைச் சிறிது சிறிதாகப் போட்டுக் கிண்டவும். எல்லாச் சூரணங்களையும் போட்ட பின் பசுநெய் 250 மில்லி கிராமைச் சிறிது சிறிதாக விட்டுக் கிண்டிக்கொண்டே இருக்க வேண்டும்.
கிண்டக் கிண்ட நெய் உருவாகிவிடும். பிறகு இறக்கி வைத்து 150 மில்லி கிராம் தேனை விட்டுக் கிண்டவும். ஆற வைக்கவும். லேகியம் செய்தாயிற்று. இதில் நெல்லிக்காய் அளவு காலை 6 மணிக்கும், மாலை 4 மணிக்கும் சாப்பிட்டுப் பால் சாப்பிட வேண்டும். 3 மாதங்களில் நீர்த்துத் தண்ணீர் போல் உள்ள விந்து கெட்டிப்பட்டு உடல் பலம் அடையும்.
5. இரத்த அழுத்தநோய், வயிற்றுவலி, மலப் பூச்சிகளும் நீங்க : முருங்கை இலைச்சாறு 2.5 மில்லி கிராம் எடுத்துக் கொள்ளவும். இரவு படுக்கும்போது தேன், 2.5 மில்லி கிராம் கலந்து சாப்பிட்டுப் படுக்கவும்.
ஒரு வாரம் இப்படிச் செய்யவும். வயிற்றில் உள்ள பூச்சிகள் இறந்து வெளியேறும். வயிற்று வலியும் நீங்கி விடும்.
இதே அளவுச் சாற்றை எடுத்துக் காலை பல் விளக்கிச் சாப்பிட்டு வரவும். இதனால் உயர் இரத்த அழுத்தம் குறையும்.
6. கருவங்க பஸ்பம் : முருங்கைப் பட்டையை 10 கிலோ அளவில் எடுத்து வைத்துக் கொள்ளவும். காரீயம் 50 கிராம் எடுத்து இரும்புச் சட்டியில் போட்டு காற்றுத் துருத்தியால் (ப்ளோயரால்) ஊதி வரவும். உருகியதும் பட்டைத் தூளைச் சிறிது சிறிதாகப் போட்டுக் கிண்டவும். இப்படி 12 மணி நேரம் வறுக்க வேண்டும். பஸ்பம் ஆகிவிடும்.
பின் முருங்கைப் பட்டைச் சாற்றால் 12 மணி நேரம் கல்வத்தில் இட்டு அரைத்து வில்லை தட்ட வேண்டும். காய்ந்ததும் இரணடு அகல்களுக்குள் வைத்துச் சீலை மண் 7 செய்ய வேண்டும். 50 ராட்டியில் (ஏறத்தாழ 30 கிலோ) புடம் போட வேண்டும்.
இப்படி ஐந்து, ஆறு புடம் போடவும். பஸ்பம் ஆகிவிடும்.
குண்டுமணி அளவு, காலை, மாலை நெய்யில் 48 நாள் தர வேண்டும். தோல் வியாதிகள் அனைத்தும் தீரும். தொடர்ந்து மருந்து சாப்பிடாமல் 10 நாள் சாப்பிட்டுப் 10 நாள் விடவேண்டும். இதேபோல் 48 நாள் சாப்பிட வேண்டும். மிக உயர்வான மருந்து. இதில் அனுபவ செய்முறைகள் பல உண்டு. அவை வைத்தியர்களுக்கு மட்டுமே புலனாகும். சராசரி மனிதர்களால் செய்ய முடியாது.
பின் ஏன் இங்கே கூறினீர்கள் எனக் கேட்கலாம். முருங்கை மரத்தின் அருமை தெரியவே இங்குக் கூறப்பட்டது.
|
No comments:
Post a Comment