Tuesday, March 8, 2011

உடல்நலம் கேள்விகள் பதில்கள்


கண்களில் மஞ்சள் நிறம்
1. கண்களில் எல்லோருக்கும் இருக்கும் வெள்ளைப்பகுதி எனக்கு மட்டும் மஞ்சள் நிறமாக (லேசாக) இருக்கிறது. சிலர் லிவர் பிரச்சினை இருக்கலாம் என்று பயமுறுத்துகிறார்கள். என்ன செய்வது?
உங்கள் கண்களில் அந்த நிறம் ஏற்கனவே வெள்ளையாக இருந்து, இப்போது மஞ்சள் நிறமாக மாறிக் கொண்டிருக்கிறது என்றால் இது மஞ்சள் காமாலை உருவாகிக் கொண்டிருக்கிறது என்று பொருள். லிவர் என்கிற கல்லீரலில் பிரச்சினை இருக்கலாம் என்று சொல்லப்படுவது உண்மையாக இருக்கலாம்.
மஞ்சள் நிறம் உருவாகக் காரணம் ‘பிலிரூபின்’ என்கிற நிறமி. முதிர்ந்த சிவப்பு அணுக்களில் இருந்து உருவாகிற ஒரு பை-ப்ராடக்ட் இது. தினமும் 1 சதவிகித இரத்த சிவப்பு அணுக்கள் புதியவற்றால் மாற்றப்படுகின்றன. பழைய செல்கள் கல்லீரலில் மாற்றம் செய்யப்பட்டு டிஸ்போஸ் செய்யப்படுகின்றன. இதனால் உருவாகிற பிலிரூபின் உடலில் இருந்து மலம் வழியாக வெளியேற்றப்படுகிறது. கல்லீரல் தனக்கு வழக்கமாக வருகிற சிவப்பணுக்களைவிட அதிகமாக வரும்போது சமாளிக்க முடியாமல் மஞ்சள் நிறமிகளை விட்டுவிடுவதால் உடலில் இது அதிகம் சேருகிறது. இதற்கு பல காரணங்கள் உண்டு. ஹெப்படைடிஸ், சிர்ரோனிஸ், கல்லீரல் மற்ற நோய், பைல் குழாய் அடைப்பு, சில நேரங்களில் இரத்தக் குறைபாடுகள்...

இதுதவிர சில க்ளோரம்பெனிகால், எரித்ரோமைசின், கிளின்டாமைசின் போன்ற ஆன்டிபயாடிக் மருந்துகள் மஞ்சள்நிற கண்களை உருவாக்கும்.
கண்கள் மஞ்சள் நிறமாக இருந்தால் இருக்கட்டும் என்று விட்டுவிடக்கூடாது. நிச்சயம் பரிசோதனைகள் அவசியம். கவனியுங்கள்.

நாக்கில் படியும் வெள்ளை 
2. எனது வாயில் இருந்து எப்போதும் வழவழப்பான திரவம் சுரந்துகொண்டே இருக்கிறது. நான் என்ன செய்தாலும் இதைத் தடுக்க முடியவில்லை. கூடவே நாக்கில் அழுத்தமாக வெள்ளை படிந்து விடுகிறது. ஜீரம், சளி போன்ற தொல்லைகள் ஏதும் இல்லை. என்ன செய்வது?
நீங்கள் இரண்டு முறை பல் துலக்கவும், அடிக்கடி வாய் கொப்பளிக்கவும் பழகிக் கொள்வது நல்லது. மென்மையான டங் கிளினரால் (நாக்கு வழிப்பான்) இரண்டு முறை நாக்கில் படிகிற வெள்ளையை துடைத்து எடுங்கள். இப்படி தொடர்ந்து செய்தும் இந்த பிரச்சினை இருந்தால் உங்களுக்கு தொண்டையில் ஏதேனும் நீண்டநாள் தொற்று இருக்கலாம். அல்லது ‘போஸ்ட் நேஸல் ட்ரிப்’ என்கிற பிரச்சினை இருக்கலாம். இதற்கு நீங்கள் காது, மூக்கு, தொண்டை நிபுணரை அணுகுவது அவசியம். தவிர உணவுக்குழாயில் பின்னோக்கி வருகிற அமிலத்தால் ஏற்படுகிற ‘ரிகர்ஜிடேஷன்’ என்கிற பிரச்சினை கூட காரணமாக இருக்கலாம். உடனே நீங்கள் ஒரு மருத்துவரை அணுகுங்கள்.

இதய பலவீனம்: கடைபிடிக்க வேண்டியவை 
3. எனக்கு வயது 47. சமீபத்தில் ‘ஹார்ட் பெயிலியர்’ இருப்பது கண்டறியப்பட்டது. நான் என்னவிதமான தற்காப்பு செய்யவேண்டும்?
கடுமையான உடல் உழைப்பைத் தவிருங்கள். உணவுக் கட்டுப்பாடு உங்களுக்கு உங்கள் மருத்துவரால் ஏற்கனவே சொல்லப்பட்டிருக்கும். அதை அலட்சியப்படுத்தாமல் பின்பற்றுங்கள். நீர் மற்றும் நீராலான பானங்களை கட்டுப்பாடான அளவில் பயன்படுத்துங்கள். இது தவிர உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் இருதயக் குறைபாடு இடதுபக்கமா, வலதுபக்கமா அல்லது இரண்டிலுமா என்பதைப் பொறுத்து இருக்கிறது. உடல் உழைப்பு அளவு உங்களுக்கே சில நாட்களில் தெரிந்துவிடும். பிரச்சினை என்றவுடன் அடிக்கடி படுக்கையில் படுத்திருப்பது நல்லது அல்லது. தவிர வான்வெளிப் பயணம், நீண்டதூர ரயில் பிரயாணம் போன்றவற்றை செயல்படுத்தும்போது அடிக்கடி காலை மடக்கி நீட்டுவது நல்லது. தேவைப்பட்டால் உங்கள் டாக்டரின் உதவியோடு இம்மாதிரிப் பிரயாணங்களுக்கு முன் ஹெப்பாரின் என்ற மருந்தை எடுத்துக் கொள்வது நல்லது. இந்த முடிவு நிச்சயம் உங்கள் டாக்டரால் மட்டுமே எடுக்கப்பட வேண்டும்.

முட்டியில் கரகரக் சத்தம் 
4. நான் படிகளில் ஏறும்போது அடிக்கடி முட்டியில் ஏதோ கரகரக் என்று சில சப்தங்கள் கேட்கிறது. இதை விட்டுவிடலாமா? அல்லது கவலைப்பட வேண்டுமா?
நீங்கள் இதைப்பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. பொதுவாக மூட்டுகள் இம்மாதிரி சத்தங்களை எந்தப்பிரச்சினையும் இல்லாமல் உருவாக்குவது இயல்புதான். இந்த சத்தங்கள், வலி, வீக்கம், மூட்டு அசைக்கமுடியாமை போன்ற விஷயங்களோடு சம்மந்தப்பட்டிருந்தால் நிச்சயம் கவனிக்கவேண்டும். மூட்டில் உள்ள கார்டிலேஜ் அல்லது லிக்மெண்ட் என்கிற இணைப்புத் திசுக்களில் பிரச்சினை இருக்கலாம். மூட்டுத் தேய்மானம் கூட இம்மாதிரி பிரச்சினைகளை உருவாக்கலாம்.

கிட்னி பிரச்சினையில் டயலிஸிஸை தவிர்க்க என்ன வழி? 
5.  எனக்கு டயாபடிஸ் இல்லை. சமீபத்தில் கிட்னி பாதிக்கப்பட்டிருப்பதாக பரிசோதனைகளில் தெரியவந்தது. தேவைப்பட்டால் டயாலிஸிஸ் செய்ய வேண்டி இருக்கும் என்று டாக்டர் சொல்கிறார். இதைத் தவிர்க்க முடியுமா?
உணவுக்கட்டுப்பாட்டின் மூலம் வாய்ப்பு இருப்பது பற்றி ஒரு ஆய்வில் உறுதி செய்யப்பட்டு அந்த ஆய்வு முடிவு “அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் கிட்னி டிஸிஸிஸ்” என்கிற டாக்டர்களுக்கான புத்தகத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது. குறைந்த புரோட்டின், நிறைய காய்கறிகள், மிருக புரோட்டின் கலக்காத உணவுப் பொருட்கள், அமீனோ அமிலங்கள், வைட்டமின்  காம்ப்ளக்ஸ் போன்ற சப்ளிமென்ட்டுகள் கவனமாக ஒரு டயட்டீசியன் உதவியுடன் எடுத்துக் கொள்ளப்பட்டால் டயலிஸிஸை தடுக்கவோ, தள்ளிப்போடவோ முடியும் என்று உறுதி செய்திருக்கிறார்கள். முயற்சி செய்வதை நிபுணர்களின் உதவியோடு செய்யுங்கள். கிட்னி பிரச்சினையில் விளையாடக் கூடாது.

No comments:

Post a Comment