Tuesday, March 8, 2011

ஒரிஜினல் மாத்திரையும் எமனாகும்!

அவசாரமாக கவனிக்க வேண்டியது தான்

ஒரிஜினல் மாத்திரையும் எமனாகும்!

- ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட்!

‘போலி மருந்துகள் விற்பனை.. காலாவதியான மருந்துகளை பாட்டில் மாற்றி
விற்று மோசடி..’ என்று ஊரே பேசிக் கொண்டிருந்த நேரத்தில்தான்,
சைலன்ட்டாக ஒரு இ-மெயில் இந்தியா முழுக்கப் பரவிக் கொண்டிருந்தது.. அதை
விட அதிர்ச்சியான தகவல்களைத் தாங்கி!

உலக அளவில் தடை செய்யப்பட்ட மாத்திரைகள் இந்தியாவில் தங்கு தடையின்றி
விற்கப்படுகின்றன.. இதய பாதிப்பு, நுரையீரல் பாதிப்ப்பு, சிறுநீரக
பாதிப்பு, மூளை பாதிப்பு என்று பல பக்க விளைவுகளைக் கொண்டிருப்பதால்தான்
பெரும்பாலான உலக நாடுகள் அவற்றைத் தடை செய்துள்ளன!’ என்று எச்சரித்த அந்த
இ-மெயிலில் அப்படிப்பட்ட ஆபத்தான மாத்திரைகளின் பட்டியலும்
தரப்பட்டிருந்தது. அதில்தான் நம் நெஞ்சை உறைய வைக்கும் அதிர்ச்சி
காத்திருந்தது.

ஆம்! நம் அன்றாடப் பயன்பாட்டில் உள்ள ஆக்ஷன் 500-ல் ஆரம்பித்து, நமக்குள்
இரண்டறக் கலந்து விட்ட காய்ச்சல் - தலைவலி மாத்திரைகள் பலவும்தான் அந்தப்
பட்டியலில் முதல் வரிசையில் நின்றன!

“இந்த மாத்திரைகளில் நிஜமாகவே இப்படிப்பட்ட பக்க விளைவுகள் உள்ளதா?”
சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர், எம். பிரசன்னாவிடம் விளக்கம்
கேட்டோம்..

“ஆமாம். இந்த இ-மெயிலில் சொல்லப்பட்டிருக்கும் விவரங்கள் நூற்றுக்கு
நூறு உண்மைதான்!” என்று அதிர வைத்தவர், தன் பேச்சுக்கிடையே பிரபலமான வேறு
சில வலி நிவாரணி மாத்திரைகளின் பெயர்களையும் சேர்த்தே-தான்
குறிப்பிட்டார்..

“சாதாரண தலைவலி, காய்ச்சலுக்காக நாம் வாங்கும் மாத்திரைகளில் ‘பெனில்-
ப்ரபோனாலமைன்’, ‘அனால்ஜின்’, ‘நிமுசுலைடு’ போன்ற வேதிப்பொருட்கள்
உள்ளன. ‘பெனில் ப்ரபோனாலமைன்’, நம் நரம்பு மண்டலத்தை பாதித்து
பக்கவாதத்தை ஏற்படுத்தும் தன்மை கொண்டது. ‘அனால்ஜின்’, எலும்பு
மஜ்ஜையின் செல் உற்பத்தியைக் கட்டுப்படுத்தி அதில் பாதிப்பை ஏற்படுத்தக்
கூடியது. ‘நிமுசுலைடு’, கல்லீரலையே செயலிழக்கச் செய்யக்கூடியது.

இதையெல்லாம் தூக்கிச் சாப்பிடும் விதத்தில் இருக்கிறது மற்ற
மாத்திரைகளின் செயல்பாடு! சாதாரண வயிற்று மந்தம், அஸிடிட்டி
பிரச்னைக்காகத் தரப்படுகிற மாத்திரைகளில், ‘சிசாபேர்டு’ என்னும் வேதிப்
பொருள் உள்ளது. இது இதயத் துடிப்பு சீராக இயங்குவதையே தடுக்கக் கூடியது.
இவற்றில், ‘அனால்ஜின்’ என்ற வேதிப்பொருள் மட்டுமே இந்தியாவில் தடை
செய்யப்பட்டிருக்கிறது. மற்றவற்றுக்கு எந்தத் தடையும் இல்லை.

இப்படிப்பட்ட மருந்துகளை இப்போ தெல்லாம் பெரும்பாலான டாக்டர்கள்
பரிந்துரைப்பதில்லை. எனவே, விளம்பரத்தைப் பார்த்து விட்டோ மருந்துக்
கடைக்காரரின் பரிந்துரையின் பேரிலோ.. தாங்களாகவே ஏதோ ஒரு மாத்திரையை
வாங்கிப் போட்டுக் கொள்ளும் போக்கை மக்கள் நிறுத்த வேண்டும். ஆனால்
இது தற்காலிகத் தீர்வுதான். ஆபத்தான பக்க விளைவுகள் கொண்ட மாத்திரைகள்
கடைக்கே வராமல் தடுத்தால்தான் இந்தப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண
முடியும்!” என்றார் அவர்.

“இந்தியாவில் இந்த மருந்துகளைத் தடை செய்யாததற்கு என்ன காரணம்?” என்ற
கேள்வியோடு மருந்துக் கட்டுப்பாட்டுத் துறையிடம் ஓடினோம்.. “ஐயையோ..
இது அரசாங்கம் பேச வேண்டிய விஷயமாச்சே!” என்று வழக்கம் போல அதிகாரிகள்
நழுவினார்கள். சமூக அக்கறையுள்ள சிலர் மட்டும் ‘பெயர் வெளியிட வேண்டாம்’
என்ற வேண்டுகோளோடு பேசினார்கள்..

“மருந்துகளைத் தடை செய்ய வேண்டும் என்றால், அது ஆபத்தான மருந்து என்று
நிரூபித்தாக வேண்டும். ஆராய்ச்சி செய்துதான் அதை நிரூபிக்க முடியும்.
அப்படிப்பட்ட ஆராய்ச்சியே இங்கே நடக்காதபோது, தடை எப்படி விதிக்க
முடியும்?” என்று கொதித்தார்கள் அவர்கள்.

“இந்த மருந்துகள்தான் என்றில்லை.. நாம் அன்றாட வாழ்க்கையில் உட்கொள்ளும்
நிறைய மருந்துகளை வெளிநாட்டு மருத்துவ இயக்குனரகங்கள் தடை செய்துள்ளன.
எந்த மாத்திரையுமே விற்பனைக்கு வருவதற்கு முன்னால் பல கட்டங்களில் சோதனை
செய்யப்படும். பக்க விளைவுகள் ஏதும் இல்லை என்று அந்த சோதனைகளில்
நிரூபித்துதான் அவை சந்தைக்கு வருகின்றன.

ஆனால், அந்த மருந்து பயன்பாட்டுக்கு வந்த பிறகு, பிராக்டிகலாக பல
பிரச்னைகள் எழலாம். தொடர்ந்து அந்த மருந்தை நோயாளிகள் எடுத்துக்
கொள்ளும்போது, அது பரிசோதனையில் காட்டாத தன் கொடூர குணத்தைக்
காட்டலாம். அப்படிக் காட்டும் பட்சத்தில், ‘இந்த மருந்தால் இந்த
நோயாளிகளுக்கு இப்படிப்பட்ட பிரச்னைகள் வந்தன’ என்று வெளிநாட்டு
மருத்துவர்கள் ஒரு முழுமையான ரிப்போர்ட் தயாரிக்கிறார்கள். அந்த
ரிப்போர்ட்டை அங்குள்ள மெடிக்கல் கவுன்ஸில் கேட்டுப் பெறுகிறது. அப்படி
வரும் ரிப்போர்ட்களை அடிப்படையாக வைத்துதான் வெளிநாட்டில் ஒரு மருந்தைத்
தடை செய்கிறார்கள். நம் நாட்டில் பெரும்பாலான டாக்டர்கள் இப்படியெல்லாம்
ரிப்போர்ட் தயாரிப்பதே இல்லை. தயாரித்தாலும் நமது ‘ட்ரக் கன்ட்ரோல்
போர்டு’ அதைக் கேட்டுப் பெறவோ ஆராய்ச்சி செய்யவோ ஆர்வம்
காட்டுவதில்லை!” என்று ஆதங்கப்பட்டார்கள் அவர்கள்.

இந்த விஷயத்தில் மேலும் சில அறிவியல் உண்மைகளை நமக்குப் புரிய வைத்தார்,
சென்னையிலுள்ள அன்னை வேளாங்கண்ணி ஃபார்மஸி கல்லூரியின் முதல்வர் எம்.
செந்தில்குமார்..

“உலக அளவில் இப்போது தடை செய்யப்பட்டுக் கொண்டிருப்பவை எல்லாம்
‘காம்பினேஷன் ஆஃப் டிரக்ஸ்’தான். அதாவது, ‘பல மருந்துகளைக் கலந்து ஒரே
மாத்திரையாகத் தரும் கலாசாரம் தவறு’ என்று உலகம் உணரத்
துவங்கியிருக்கிறது.

ஒரு மாத்திரை, காய்ச்சல் தலைவலி இரண்டையும் போக்கும் என்று வைத்துக்
கொள்ளுங்கள்.. காய்ச்சல் இல்லாமல் வெறும் தலை வலி மட்டும் உள்ள
நோயாளியும் அதே மருந்தைப் பயன்படுத்துகிறார். தலைவலி சரியாகி விடுகிறது.
ஆனால், காய்ச்சலை சரியாக்கும் வேதிப் பொருள் தேவையே இல்லாமல் அவர்
உடலில் சேருகிறது. இப்படிச் சேரும் வேதிப் பொருட்கள்தான் பக்க விளைவுகளை
ஏற்படுத்துகின்றன.

இதை உணர்ந்து இப்போதெல்லாம் வெளி நாடுகளில், காய்ச்சலுக்குத் தனியே,
தலைவலிக்குத் தனியே-தான் மாத்திரைகளைப் பரிந்துரைக்-கிறார்கள்.
அப்படிப்பட்ட மாத்தி-ரைகள் கொஞ்சம் காஸ்ட்லியாக இருந்-தாலும் அந்நாட்டு
மக்கள் வாங்குகிறார்கள். ஆனால் நம் நாட்டில் கதையே வேறு! தலைவலி, ஜல-
தோஷம், மூக்கடைப்பு, உடல் அசதி, காய்ச்சல்.. இப்படி எல்லா பிரச்னைகளும்
ஒரே மருந்தில் குணமாகி விட வேண்டும்.. அந்த மருந்தும் விலை மலிவாக இருக்க
வேண்டும் என்று நம் நாட்டு மக்கள் நினைக்கிறார்கள். டாக்டர்களும் அந்த
எதிர்பார்ப்புகளை ஈடு செய்ய வேண்டியிருக்கிறது.

வேறு மருந்துகளைக் கலக்காமல் காய்ச்சலுக்கு மட்டுமான.. தலை-வலிக்கு
மட்டுமான மருந்துகளை உலக அளவிலான சில பெரிய நிறுவனங்கள் தயாரிக்கின்றன.
ஆனால், அவை கொஞ்சம் விலை அதிகம். அந்த மாத்திரைகளை எழுதிக் கொடுத்தால்
மக்கள் அந்த டாக்டரையே புறக்கணிக்கிறார்கள். நம் மக்கள் முதலில்
மருந்துகளின் இயல்பைப் புரிந்து கொள்ள வேண்டும். இன்றைக்கு நம் வியாதி
எத்தனை சீக்கிரம் குணமாகிறது என்பது முக்கியமில்லை.. வருங்காலத்தில் அது
பெரிய பிரச்னைகள் எதையும் கொண்டு வராமல் இருக்க வேண்டும் என்பதுதான்
முக்கியம். இதை அனைவரும் உணர வேண்டும்!” என்றார் அவர்.

சென்னையைச் சேர்ந்த சித்த வைத்தியரும், ‘பூவுலக நண்பர்கள்’ இயக்கத்தின்
தலைவருமான சிவராமனிடமும் இதுபற்றிப் பேசினோம்.. “ஒவ்வொரு நாட்டுக்கும்
மருந்துக் கட்டுப்பாட்டுத் துறை இருக்கிறது. அந்தத் துறையில்
அமெரிக்காவின் ‘ஃபுட் அண்ட் ட்ரக் அட்மினிஸ்ட்ரேஷன்’, நவீன மருத்துவ
உலகில் அசைக்க முடியாத அளவுக்கு இயங்கி வருகிறது. அங்கு தடை செய்யப்பட்ட
பல மருந்துகள் நமது நாட்டில் புழக்கத்தில் இருந்து வருவது
வெட்கக்கேடானது.

கேட்டால், ‘ஒவ்வொரு நாட்டுக்கும் மருந்துப் பொருட்களின் பயன்பாடு
வேறுபடும்’ என்கிறார்கள். உலகம் முழுதும் இருக்கும் மனித இனம் ஒன்றுதானே?
நமது நாட்டில் இருக்கக் கூடிய சில பலவீனங்களையும் மக்களின் அறியாமையையும்
பயன்படுத்திக் கொண்டு, சிலர் வியாபார நோக்கத்தோடு செயல்படுகிறார்கள்.

இங்கே, மருத்துவரின் சீட்டு இல்லாமல், மருந்து வாங்க முடிகிறது
பாருங்கள்.. இந்த நிலையே மிகத் தவறானது. இன்று, குறிப்பிட்ட சில தூக்க
மாத்திரைகளும், மயக்க மருந்துகளும்தான் மருந்துச் சீட்டு இன்றி வாங்க
முடியாது என்ற சட்டத்தின் படி விற்கப்படுகிறது, மருந்து மாத்திரைகள்
எல்லாவற்றையுமே அந்த சட்டத்துக்குள் கொண்டு வர வேண்டும். அப்போதுதான்
மக்கள் தாங்களாக ஏதேனும் மாத்திரையை வாங்கிச் சாப்பிட மாட்டார்கள்.

எங்கே..? ‘தலைவலியா? வாங்கிச் சாப்பிடுங்கள்..’ என்று மாத்திரைகளுக்கு
ஊரறிய டி.வி விளம்பரமே தரப்படும் நாடு இது. இங்கே இந்தச் சட்டமெல்லாம்
வருமா? வியாபாரிகளும் பணமே குறிக்கோளாக செயல்படும் மருத்துவ
அதிகாரிகளும் அதை வர விடுவார்களா? தெரியவில்லை!” என்று ஆதங்கத்தோடு
முடித்தார் அவர்.

ஒரிஜினல் மருந்துகளிலேயே இத்தனை தகிடுதத்தம் இருக்கா? அட சாமி!

No comments:

Post a Comment