பப்பாளிக்காய்
இதன் அறிவியல் பெயர் Carica papaya. இது Caricaceae குடும்பத்தைச் சேர்ந்தது.
“வாத வலிபோக்கும் வற்றியபால் தான் சுரக்கும்
மாது ருது அழுக்கை மாற்றிவிடும் – பூதலத்தில்
தப்பா துருவழிக்கும் தட்டைக் கிருமியறும்
பப்பாய்க்காய் உண்டாக்கும் பார்”
இதன் பொருள் : பப்பாளிக் காய் தின்றால் உடலின் வாத வலி போகும். தாய்ப்பால் சுரக்கும். சிக்குப்பட்ட மாதவிலக்கு ஒழுங்குபடும். வயிற்றுக் கிருமிகள் சாகும்.
பப்பாளிப் பழம்
“பப்பாளிப் பழம் உண்ணப் பாவையர்தம் சூல்அதனைத்
தப்பா தழித்துவிடும் தன்மையிதைச் - செப்பாதே
மூலமுடன் கிராணி முந்தும் குடல்வாய்வு
சாலக் குணமாகும் சாற்று.”
இதன் பொருள் : பப்பாளிப் பழம் உண்டால் பெண்களின் கரு அழியும். மூலம், கிராணி, குடல் வாய்வு குணம் ஆகும்.
வளரும் இடம் :
அதிகக் காற்றும், அதிகக் குளிரும் இல்லாத இடங்களில் நன்றாய் வளரும். இதற்குக் கிளைகள் கிடையாது. உள் காழ் இல்லாத மரம். வேகமாகக் காற்றடித்தால் முறிந்துவிடும். தலையில் மட்டுமே இலை இருக்கும்.
விதைவிட்டு வளரும் மரம் இது. நீர் தேங்காத இடத்தில் நன்கு வளரும். நீர் தேங்கும் இடத்தில் நல்ல வளர்ச்சி இருக்காது. ஏறத்தாழ 10 முதல் 12 அடி வரை வளரும்.
இதில் ஆண் பப்பாளி, பெண் பப்பாளி என இரு வகை உண்டு. ஆண் பப்பாளி காய்க்காது.
பயிர் செய்யும் முறை :
தரையைக் கொத்தி எரு இட்டு இடத்தைப் பக்குவம் செய்யவும். மூன்று மாதக் கன்றை எடுத்து நடலாம்.
சிறு பாத்தி கட்டி அதில் 1 அங்குல ஆழத்தில் பப்பாளிப் பழத்தில் எடுத்த விதைகளைத் தெளித்து மேலே மணல் தூவவும். தண்ணீர் தெளிக்கவும். பின் காலை மாலை தண்ணீர் தெளிக்கவும். 10 அல்லது 15 நாளைக்குள் முளைவிட்டு வளர ஆரம்பிக்கும்.
இரண்டு மூன்று மாதம் கடந்ததும் நல்ல செடியை எடுத்துப் பக்குவப்படுத்திய இடத்தில் நடவும். தண்ணீர் ஊற்றி வரவும். சில நாட்கள் சென்றபின் அடிக்கடி தண்ணீர் ஊற்ற வேண்டியது இல்லை.
இதன் அடியில் குப்பைகளைப் போட்டுக் கொத்தி விடலாம். நன்கு வளரும். இது குப்பை மேட்டின் பக்கம் நன்கு வளரும். அதுவும் செம்மண் பிரதேசத்தில் நன்கு வளரும்.
இதன் பழங்கள் நன்கு விலை போவதை உணர்ந்த விவசாயிகள் பல இடங்களில் மேட்டு நிலங்களில் பயிர் செய்ய ஆரம்பித்து உள்ளனர். ஆந்திராவில் பல இடங்களில் பயிர் செய்கின்றனர்.
மரம் முறிந்துவிட்டால் வெட்டிவிடலாம். பின் தளிர்த்து வளரும். வளர்ந்து முன்போலவே காய்க்கும். சரியான சூழலில் 20 ஆண்டுகளுக்கு மேல் பலன் தரக்கூடியது.
மருந்து செய்முறைகளும், நீங்கும் நோய்களும் :
1. காய் : இதன் காயைக் கீறி ஒரு தேக்கரண்டி பால் சேகரித்துக் கொள்ளவும். இதற்குச் சம்மாக தேன் கலந்து, சிறிது வெந்நீர் கலந்து சாப்பிடவும். ஒரு மணி நேரம் சென்று விளக்கெண்ணெய் 20 மில்லி கிராம் சாப்பிட வயிற்றில் உள்ள கிருமிகள் எல்லாம் வெளியேறும். மறுநாளும் சாப்பிட்டால் மீதம் உள்ள கிருமிகளும் வெளியேறும்.
காயைத் தோல் நீக்கி, கடலைப் பருப்புடன் சமைத்து உண்ண உடல்வளம் பெறும். இதைச் சமைத்து உண்ணும் பெண்களுக்குத் தாய்ப்பால் நன்கு சுரக்கும்.
இது உணவிலுள்ள புரதச்சத்தானது எளிதில் செரிக்க உதவுகிறது. எனவேதான் இறைச்சியை மென்மையாக வேக வைப்பதற்கு பப்பாளிக்காய் துண்டுகளையும் உடன் சேர்த்து சமைக்கும் பழக்கம் நமது நாட்டில் உள்ளது.
இந்த பப்பாயினின் வலி நீக்கும் தன்மையானது. அமெரிக்க உணவு மற்றும் வேளாண் நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. முதுகெலும்புதட்டு புறந்தள்ளல் போன்ற நோய்நிலைகளில் இதிலிருந்து தயாரிக்கப்படும் ஊசிமருந்தானது நரம்பு அழுத்தத்தால் ஏற்படும் வலியைப் போக்க பயன்படுத்தப்படுகிறது. கோதுமை புரதத்தை எளிதில் செரிக்கச் செய்வதற்கும் இது பயன்படுத்தப்படுகிறது. குடல்புண்ணால் அவதிப்படுவோருக்கும் பப்பாயின் பயன்படுகிறது.
200மி.லி பப்பாளிப் பழத்தில் இருக்கும் சத்துக்கள்
புரதம் - 1.52 கிராம், கொழுப்பு - 0.25 கிராம், தாதுக்கள் - 1.27 கிராம், நார்ச்சத்து - 2 கிராம், மாவுப்பொருள் - 37.88 கிராம், இதிலிருந்து கிடைக்கும் ஆற்றல் 159.6 கிலோ கலோரி.
2. பழம் : இதன் பழம் வெப்பமான குணம் உள்ளது. மலத்தை நன்கு இளக்கி முழுமையாக வெளியேற்றும். கருவுற்ற பெண்கள் இதன் பழத்தைச் சாப்பிட்டால் கரு அழிந்து வெளியாகிவிடும். கிராமப் பகுதிகளில் இதன் செங்காய்ப் பழத்தை உண்டு கருவழிப்பதை இன்றும் காணலாம்.
இதன் பழம் சிறந்த மலம் இளக்கி. இதை முதன் முதலில் சாப்பிடும்போது சிலருக்குப் பிடிக்காது. சில நாட்கள் சாப்பிட்டால் இதன் மணம் விருப்பப்படும் ஒன்றாக மாறிவிடும். தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மலம் சுத்தமாக வெளியேறிவிடும். இரத்த அசுத்தம் முழுவதும் நீங்கிவிடும்.
உயிர்ச் சத்துக்கள் இதன் பழத்தில் நிறைய உண்டு.
ஆசிய நாடுகளில் சுமார் 10 லட்சம் டன்கள் பப்பாளி உற்பத்தி செய்கின்றனர். இந்தியாவில் பப்பாளி பழங்கள் 3 லட்சத்து 70 ஆயிரம் டன் உற்பத்தி செய்யப்படுகின்றன. எனவே இது குண்டானவர்களும், எடையை குறைக்க விரும்புபவர்களும் விரும்பும் பழமாக உள்ளது.
பப்பாளியை தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களுக்கு காணப்படும் வைட்டமின் ஏ குறைபாட்டால் ஏற்படும் பார்வைக் கோளாறுகளைத் தடுக்கமுடியும்.
பப்பாளிபழத்தில் உள்ள சர்க்கரை ரத்தத்தில் நேரடியாக கலப்பதில்லை. எனவே சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு கூட மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறது. பப்பாளியில் பீட்டா கரோட்டின் என்ற சத்தும் ஏராளமாக காணப்படுகின்றது. இது சில வகையான புற்றுநோய்கள் ஏற்படுவதை தடுக்கிறது. பப்பாளியில் பல்வேறுவிதமான என்சைம்கள் காணப்படுகின்றன. இதிலுள்ள ‘பப்பாயின்’ என்ற என்சைம் ஆனது மிகச்சிறந்த செரிமான ஊக்கியாக செயலாற்றுகிறது.
3. யானைக்கால் வீக்கம் : யானைக்காலுக்குச் சித்தர்கள் மருந்து கூறியுள்ளனர். யாகோபும் தம் நூலில் மருந்து கூறியுள்ளார். அது வேலை செய்யவில்லை. எனக்குத் தெரிந்தவரை யானைக்காலை யாரும் பூரணமாகக் குணம் ஆக்கியதாகத் தெரியவில்லை.
ஆனால் சிலர் இதன் பழத்தைத் தினம் சாப்பிட்டு, இதன் இலையை அரைத்து வீங்கிய காலில் கட்டி வந்தால் மூன்று மாதங்களில் குணம் ஆகும் எனக் கூறுகின்றனர்.
4. பால் : இதன் பாலை எடுத்து உடலில் தோன்றும் அரிப்பு, படை போன்றவற்றில் தடவினால் குணம் ஆகும்.
5. இலை: இதன் இலையை இடித்துச் சாறு பிழிந்து வைத்துக் கொண்டு தேமல், படை போன்றவைகளில் தடவக் குணம் உண்டாகும். இது மிக நல்ல மருந்து.
6. சுறுசுறுப்பு: சிலர் சுறுசுறுப்பு இல்லாமல் இருப்பார்கள். எப்பொழுதும் படுத்துக்கொண்டே இருப்பர். காலையில் எழுந்திட முடியாமல் புரண்டு புரண்டு படுப்பர். இதன் பழத்தைச் சாப்பிட்டு, காயை அடிக்கடி சமைத்து உண்டு வந்தால் சுறுசுறுப்பு வந்துவிடும்.
|
No comments:
Post a Comment