நான் மின்னணு பொறியியல் படித்து, ஒரு தனியார் கல்லூரியில் விரிவுரையாளராக பணிபுரிகிறேன். ஆறு மாதங்களுக்கு முன், எனக்கு திருமணமும் ஆகி விட்டது. நானும், என் கணவரும் மகிழ்ச்சியாக இருக்கிறோம். நான் பொறியியல் படிக்கும் போது, எனக்கு நெருக்கமான தோழிகள் நால்வர் உண்டு; நால்வரில் ஒருத்தி, உயிர்த்தோழி.
எனக்கு, வயது 25; அவளின் வயது 26. நாங்கள் எல்லாரும் ஹாஸ்டலராக இருந்தோம்; அவளோ டேஸ்காலராக இருந்தாள். எங்களது கல்லூரி இருந்த ஊரிலேயே அவளது வீடு இருந்தது.
ஒரு நாள் அவளிடம், "லோக்கல்ல இருக்கற... ஒரு நாளாவது உங்க வீட்டுக்கு கூப்பிட்டு, உபசரிக்க மாட்டியா...' என்றேன்; பதில் பேசாமல் மருகினாள். பலதடவை நான் நச்சரித்த பின், அரைகுறை மனதுடன், என்னை அவள் வீட்டுக்கு அழைத்துச் சென்றாள்.
வீடு, பங்களா மாதிரி இருந்தது. தோழியின் அப்பாவுக்கு, 63 வயது இருக்கும். முக்கால் வழுக்கை தலை. மத்திய அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்றவர். என்னை, "வா' என வரவேற்காமல், ஒரு மாதிரி முறைத்தார்.
அவருக்கு, 34, 32, 30, 26 வயதுகளில் நான்கு மகள்கள். நான்காவது மகள்தான் என் தோழி. 20 வயதில், பெருத்த உடலுடன் ஒரு மகன். மூன்று அக்காக்களுக்குமே கல்யாணமாகவில்லை; எல்லாருமே பட்டதாரிகள். பார்ப்பதற்கு, நடிகை கவுசல்யா, நான்கு வேடங்களில் நடித்தது போல் இருந்தனர். தோழியிடம் நான், "என்னடி... உங்க வீட்டில் எந்த அக்காவுக்குமே கல்யாணமாகல? இந்த லட்சணத்தை பார்த்தா, உனக்கு லைன் கிளியர் ஆகவே ஆகாது போல. அக்காக்களுக்கு ஜாதக தோஷமா?' என்று கேட்டேன்.
"தோஷம் எதுவுமில்லை; உடலிலும் எந்த கோளாறும் இல்லை. பத்து பெண்களுக்கு திருமணம் செய்யும் அளவுக்கு எங்கப்பாவிடம் பணமும், நகையும், சொத்து, பத்தும் இருக்கு. ஆனா, எங்க கல்யாணங்களுக்கு நந்தியா குறுக்கே நிற்பது எங்கப்பா குணம்தான்!' என்றாள் தோழி.
"நாங்க மருத்துவர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். எங்கப்பாவுக்கு, தன் ஜாதியை வெளியில் சொல்ல வெட்கம்.
"அதனால், மருத்துவ சமூக மாப்பிள்ளைகள் பெண் கேட்டு வருவதில்லை. எங்கப்பா மற்ற சமுதாய மக்களிடமும் நெருங்கி பழக மாட்டார். காரணம், நெருங்கி பழகினால், நாங்க இன்ன பிரிவை சேர்ந்தவர்கள் என்பது அவர்களுக்கு தெரிந்து விடுமோ என்ற அச்சம்.
"தவிர உலகத்திலேயே அதிகம் தெரிந்தது தனக்குதான், பிறருக்கு ஒன்றுமே தெரியாது என்ற மனோபாவம் எங்கப்பாவுக்கு உண்டு. அவருக்கு, கோட், சூட் போட்டு, தலையில் தொப்பி, கண்களில் கூலிங் கிளாஸ், இடதுகையில் சூட்கேஸ் வைத்துக் கொண்டு வரும், தங்கச் சுரங்கம் சிவாஜி மாதிரியான மாப்பிள்ளை தான் வேண்டும்.
"நடிகர் ஆர்யாவை கூப்பிட்டு வந்தால், ஆறு குறைகள் கூறி, "ரிஜக்ட்' செய்து விடுவார். எங்கம்மா ஒரு வாயில்லாப்பூச்சி. எங்கப்பா இப்படி இருந்தும், எங்க அக்காக்களோ, நானோ மனதால் கூட, தவறு செய்ய எண்ணியதில்லை. எதாவது ஒரு கட்டத்தில், அப்பா மனம் மாறி எங்களுக்கு கல்யாணம் செய்து வைப்பார் என நம்புகிறோம். கல்யாணமாகாவிட்டால், எங்கள் ஊழ்வினையை நினைத்து, பொறுமை காப்போம். கல்யாண விஷயம் தவிர, மற்ற எல்லாவற்றிலும் அவர் அன்பான அப்பா!' என்றாள்.
படிப்பு முடிந்து, நான் வேலைக்கு போன இரண்டாவது மாதமே, எனக்கு திருமணம் முடிவானது. திருமண அழைப்பிதழைக் கொண்டு போய், என் தோழியிடம் நீட்டினேன். கண்கலங்க வாங்கி, அழைப்பிதழை வருடினாள். மணமகள் பெயர் இருக்கும் இடத்தை, ஏதோ நினைத்து தடவிக் கொடுத்தாள். "எனக்கும் கல்யாணம் நடக்குமா? எனக்கும் இப்படி மேரேஜ் இன்விடேஷன் அடிப்பாங்களா?' என, என்னை கட்டிப் பிடித்து கதறியவளை, சமாதானப்படுத்தினேன்.
என் கல்யாணத்துக்கு, நான்கு சகோதரிகளும் வந்திருந்தனர். நால்வரின் கலங்கிய கண்களும், ஏக்கப் பெருமூச்சும் என்னை ஏதேதோ செய்தன. கல்யாணத்துக்கு பிறகும் தோழியிடம் போனில் பேசிக் கொண்டுதான் இருக்கிறேன். எப்போது பார்த்தாலும், நான் அவளுடைய கல்யாணத்தை பற்றியே பேசிக் கொண்டிருக்க, "பேசிப் பேசி என் மனக் கவலையை தான் அதிகப்படுத்துற... உனக்கு தில் இருந்தா எனக்கொரு வழி பண்ணு பார்ப்போம். உன் வழி, நேர்வழியா இருக்கட்டும். நாங்க அரேஞ்சுடு மேரேஜ் மட்டும்தான் பண்ணிப்போம்...' என்றாள்.
தோழி விஷயத்தில் நான் என்ன பண்ணலாம் என்பதை, ஒரு கோடு போட்டு காட்டுங்கள் அம்மா; நான் ரோடு போட்டு விடுகிறேன்.
— தோழிக்கு உதவ நினைக்கும், புதுமைப்பெண்.
உன் கடிதம் கிடைத்தது. தோழிக்கு உதவ நினைக்கும் உன் மனோபாவம் பாராட்டுக்குரியது. ஓர் ஆணின் வாழ்க்கையோ, ஒரு பெண்ணின் வாழ்க்கையோ பரிபூரணம் பெறுவது திருமணத்தில்தான். ஐ.ஏ.எஸ்., பரிட்சையிலோ, டோபல் பரிட்சையிலோ ஜெயிப்பது பெரிதல்ல; நல்ல கணவனாக, நல்ல மனைவியாக ஜெயிப்பதுதான் பெரிது. இஸ்லாமில், திருமணம் கட்டாயக் கடமை. மணம் செய்து கொள்ளாதோர், சமுதாய கணக்கில் சேர்த்துக் கொள்ளப் படுவதில்லை.
உன் தோழியின் விஷயத்தில், அவளது அப்பாவுக்கு இருப்பது, படித்த அறியாமை. அதை, முற்றிலும் களைய கீழ்கண்ட உபாயங்களை கையாளலாம்.
* தந்தையிடம், "திருமணம் எங்கள் பிறப்புரிமை' எனும் உரிமைக்குரல் எழுப்ப, போதுமான தைரியத்தை ஏற்படுத்த வேண்டும். அதற்கு, முதலில் தோழியின் அம்மாவையும், நான்கு சகோதரிகளையும் அழைத்து பேசு. அம்மா மற்றும் மூன்று சகோதரிகள், நீ சேர்ந்து, அப்பாவிடம் பேசுங்கள். "பத்தில் நாலு அம்சங்கள் பழுதில்லாமல் இருந்தால் போதும். அந்த மாப்பிள்ளையை நாங்கள் கட்டிக் கொள்கிறோம். டிச., 30, 2011க்குள் நான்கு சகோதரிகளுக்கும், திருமணம் முடித்து விடுங்கள்...' எனக் கூறச் சொல்.
* ஜாதி, மதவெறிதான் தப்பு. வரன் பார்ப்பதற்காக, தான் சார்ந்திருக்கும் சமுதாயத்தை மறைப்பது அறிவீனம். சிகை திருத்த கலைஞர்கள் என்றுதான் மருத்துவ சமுதாயத்தைக் குறிப்பிடுகிறோம். கடந்த 50 வருடங்களில், மருத்துவ சமுதாயம் பலவிதங்களில் முன்னேறி இருக்கிறது. விமானத்தில் போய், சிகை திருத்தும் கலைஞர்கள் இருக்கின்றனர். சிகை திருத்த ஒரு வார அப்பாயின்மென்ட் எல்லாம் தேவைப்படுகிறது. போன இரண்டாம் தலைமுறை சிகை கலைஞர்கள் எல்லாம், நல்ல சித்த மருத்துவர்களாய் விளங்கி இருக்கின்றனர். ஒரு சிகை கலைஞர், கைதேர்ந்த அரசியல் வல்லுநருக்கு சமமான அரசியலறிவு பெற்றிருக்கிறார்.
தோழியின் நெருங்கிய நண்பர்கள், உறவினர்களை போனிலோ, நேரிலோ தொடர்பு கொண்டு, நான்கு பெண்களின் திருமணத்தை போர்க்கால அவசரமாய் நடத்தி முடிக்க வலியுறுத்து. தோழியின் தந்தைக்கு, உறவு - நட்பு வட்டம் மூலம், பத்து, "டன்' நெருக்கடி கொடுக்க வேண்டும் நீ.
* தரகர், பத்திரிகை, சமுதாயம் சார்ந்த சானல்கள், இன்டர்நெட் மூலம் வரன் வேட்டை தொடர்.
* அபியும், நானும், அன்புள்ள அப்பா போன்ற படங்களில், பிரகாஷ்ராஜ், சிவாஜி கணேசன், நடிப்புகளை பார்த்திருப்பாய். மகள் மீது தந்தைக்கு அளவு கடந்த பாசம். திருமணம் மூலம், ஓர் அந்நியன், மகளை தட்டிக் கொண்டு போய் விடுவானே என்ற பயம் சில தந்தைகளுக்கு. அப்படிப்பட்ட ஒரு மனக் குறைபாடு உன் தோழியின் தந்தையிடம் கூட இருக்கலாம். "இந்த மாப்பிள்ளை சொள்ளை; இந்த மாப்பிள்ளை சொத்தை...' என, தோழியின் தந்தையே, வரன்களை கலைத்து விட்டுக் கொண்டிருப்பார். அப்படி இருந்தால், அவருக்கு பிரத்யேகமான கவுன்சிலிங் தேவைப்படும்.
* உன் தோழியின் மூத்த அக்கா திருமண பந்தத்தில் நம்பிக்கை இல்லாது, ஏதாவது கிருத்துவங்கள் செய்து கொண்டிருக்கிறாளா என்று பார். இருந்தால், அந்த மனத்தடையை அகற்று.
* நான்கு சகோதரிகளும் படித்தவர்கள். அவர்களுடன் படித்த மாணவர்கள் யாராவது, இவர்களை மணந்து கொள்ள விரும்பலாம். அப்படி ஒரு சூழல் இருந்தால், ஜாதி மதம் வித்தியாசம் பாராமல், பொருத்தம் ஒன்று மட்டும் பார்த்து, அவர்களின் விருப்பத்தை நிறைவேற்று.
* தோழியின் பெற்றோரின் தலைமுறையில் திருமணம் தொடர்பான எதாவது ஒரு ஆறாத ரணம் இருக்கலாம். அவர்களின் குடும்ப சரித்திரத்தை அகழ்வாராய்ச்சி செய்து, ரணமிருந்தால் புதிய மருந்திடு.
* இந்த பதில், ஒரு குறிப்பிட்ட கேள்விக்கு மட்டும் சொந்தமானதில்லை. எல்லா தகப்பன்மார்களும், தத்தம் மகள்களுக்கு காலகாலத்தில் திருமணம் செய்து வைத்து விட வேண்டும். வரன் பார்ப்பது தந்தைமார்களுக்கு மேட்சிங்காக அல்ல; மகள்களுக்கு. ஈகோ, வறட்டுக் கவுரவம், சுயநலம், பழவாங்கும் வெறியை கழற்றி வீசி விட வேண்டும். பெத்த மகளுக்கு கல்வியையும், திருமண வாழ்க்கையையும், உரிய பருவத்தில் அளித்து, அவர்களை மகிழ்விக்க வேண்டும்.
* ஒரு குடும்பத்தின் தந்தை, மகன்-மகள் திருமணத்திற்கு குறுக்கு வழியில் சொத்து சேர்க்கக் கூடாது. அப்படி சேர்த்தால், அதன் பலாபலன் மகன் - மகள் திருமணங்களை தான் பாதிக்கும்.
* மகள்களை படிக்க வைக்கும் தந்தையர், தங்கள் விருப்பப்படி அவர்களை, 28 அல்லது 30 வயது வரை படிக்க வைக்கக் கூடாது.
23 வயதுக்குள்ளாவது திருமணம் செய்து வைத்துவிட வேண்டும். விருப்பமில்லாத பெண்கல்வி வீண் பொருள் செலவு; வீண் கால விரயம். நான்கு சகோதரிகளின் திருமணங்களுக்கு என்னை மறக்காமல் கூப்பிடு செல்லம்.
|
No comments:
Post a Comment