`விழித்துக்கொண்டோர் எல்லாம் பிழைத்துக்கொண்டார் – உன்போல் குறட்டை விட்டோர் எல்லாம் கோட்டை விட்டார்.’
மனிதனுக்காக மனிதன் கண்டுபிடித்த பொருட்களிலேயே தற்போது மிக மிக அதிக உபயோகத்தில் இருப்பது செல்போன் என்றால் மிகையில்லை. குறிப்பாக இந்தியர்களை பொறுத்தவரை, இந்த கூற்று 100 சதவீதம் உண்மை. இதில் சந்தேகம் வேண்டாம்.
இந்தியாவில் மொத்த மக்கள் தொகை 117 கோடி. இது, இந்த ஆண்டு கணக்கெடுப்பு நிலவரம்.
இதில், 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 31 சதவீதம். சுமார் 36 கோடி. ஆனால், செல்போன் உபயோகிப்பவர்களின் எண்ணிக்கை 70 கோடி!
இப்போது சொல்லுங்கள். செல்போன் அடிமையாகவே இந்தியர்கள் மாறி விட்டனர் என்பது எந்த அளவுக்கு நிதர்சனமான உண்மை அல்லவா?.
அதே நேரத்தில், தனிப்பட்ட கழிவறை வசதி கொண்ட மக்களின் எண்ணிக்கை 36 கோடி மட்டுமே. சுமார் 65 கோடி பேர் (மக்கள் தொகையில் 50 சதவீதம்) திறந்த வெளியையே கழிப்பிடமாக பயன்படுத்தி வருகின்றனர். சுகாதார விஷயத்தில் இந்த அளவுக்கு படு கேவலமா
க இருக்கும் இந்தியர்கள், செல்போன் பயன்படுத்துவதில் மட்டும் முன்னேறிய நாடுகளை விட முன்னேறி விட்டனர்.
இத்தகைய அதீத ஆர்வம் காரணமாக, நாடு முழுவதும் செல்போன் நிறுவனங்கள் பெருகி விட்டன. அதற்கு ஏற்றாற்போல செல்போன் கோபுரங்களும் மூலை முடுக்கெல்லாம் கம்பீரமாக எழுந்து நிற்கின்றன.
விண்ணோக்கி நிமிர்ந்து நிற்கும் அந்த செல்போன் கோபுரங்களால் ஏற்படும் விளைவுகளை ஆராய்வதே இந்த கட்டுரையின் நோக்கம்.
செல்போன்களில் பேசுவதற்கு தேவையான சமிக்ஞைகளை (சிக்னல்) இந்த கோபுரங்கள் தான் அளிக்கின்றன. இதற்காக, அந்த கோபுரங்களில் இருந்து மின்காந்த அலைகள் மற்றும் கதிரியக்கம் வெளிப்படுகிறது.
செல்போன் கோபுரம் அமைந்துள்ள இடத்தில் இருந்து ஒரு குறிப்பிட்ட தொலைவு வரையிலும் இந்த கதிரியக்கத்தின் தாக்கம் கடுமையாக இருக்கும்.
இதன் காரணமாகவே, அதிகாலையில் மனதை மயக்கும் வண்ணம் கீதம் இசைக்கும் சிட்டுக்குருவிகளை, கிராமங்களில் கூட இப்போது காண முடிவதில்லை.
அது மட்டுமல்ல காகம், மைனா போன்ற பறவைகளும் அரிய வகை இனங்களாக மாறிக் கொண்டு இருக் கின்றன.
மின் கம்பங்கள் மற்றும் தொலைபேசி கம்பங்களில் கூடு கட்டி உயிர் வாழும் இந்த அப்பாவி உயிரினங்கள் அனைத்தும் செல்போன் கோபுரங்களை கண்டால் மட்டும் காத தூரம் ஓடுகின்றன.
நகர்ப்புறம் மட்டும் அல்லாமல், கிராமப்புறங்களிலும் எங்கு பார்த்தாலும் செல்போன் கோபுரங்கள் பெருகி இருப்பதால், இந்த பறவை இனங்கள் காணாமலேயே போய் விட்டன. பாடப்புத்தகங்களில் மட்டுமே பார்க்க வேண்டிய அரிய இனமாக மாறிக்கொண்டு வருகின்றன.
இதுகுறித்து, பல எச்சரிக்கை தகவல்கள் வெளியான போதிலும் யாருமே கண்டு கொண்டதாக தெரியவில்லை. அமாவாசைதோறும் காகத்துக்கு சாதம் வைப்பதோடு கடமை முடிந்து விட்டதாக அனைவரும் கருதுகின்றனர்.
முந்தைய எச்சரிக்கையை யாருமே கண்டு கொள்ளாமல் விட்டதன் விளைவாக, பறவைகளிடம் இருந்து மனிதர்களை நோக்கி ஒரு அபாயம் திரும்பிக்கொண்டு இருக்கிறது.
ஆம். செல்போன் கோபுரங்களில் இருந்து வெளியாகும் கதிரியக்க வீச்சினால் மனிதர்களின் உடலில் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் என சர்வதேச அளவில் ஆய்வுகள் எச்சரிக்கை மணி ஒலிக்கின்றன.
இந்தியாவில் அமைக்கப்படும் செல்போன் கோபுரங்கள் அனைத்துமே, `அணு அல்லாத கதிரியக்க பாதுகாப்பு தொடர்பான சர்வதேச கமிஷன்’ அளித்துள்ள பரிந்துரைப்படியே அமைக்கப்படுகின்றன. ஆனால், இந்த கமிஷனானது கதிரியக்க அளவு மற்றும் வெப்ப கதிரியக்கம் போன்றவற்றை மட்டுமே கருத்தில் கொண்டு விதிமுறைகளை வகுக்கிறது.
`மனிதர்களுக்கு உடல் ரீதியாகவும், மரபணு ரீதியாகவும் ஏற்படும் விளைவுகள் பற்றி இந்த கமிஷன் கருத்தில் கொள்ளுவதில்லை என்றும் அதன் இணைய தளத்திலேயே அது பற்றி விரிவாக கூறப்பட்டுள்ளது’ என்றும் சென்னை ஐ.ஐ.டி.யில் உள்ள கம்பியில்லா தொழில்நுட்ப மையத்தை சேர்ந்த டாக்டர் பி.ஆர்.கவுண்டன் தெரிவிக்கிறார்.
அதே நேரத்தில், செல்போன் கோபுரங்களில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சு வளையத்துக்குள்ளேயே தொடர்ந்து வசித்து வருபவர்களுக்கு புற்றுநோய், மரபணு (டி.என்.ஏ.) சேதம், தொற்று நோய் போன்ற நோய்களில் இருந்து பாதுகாக்கும் வகையில் உடலில் இயற்கையாகவே அமைந்துள்ள எதிர்ப்பு சக்தி குறைதல், மலட்டுத் தன்மை போன்ற பல்வேறு அபாயங்கள் ஏற்படும் என மும்பை ஐ.ஐ.டி.யை சேர்ந்த தொழில்நுட்ப வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
அது தொடர்பாக, சர்வதேச அளவிலான ஆதாரங்களை அள்ளி வீசும் அவர்கள், `செல்போன் கோபுர கதிர்வீச்சால் மனநல குறைபாடு ஏற்படும்’ என்ற அதிர்ச்சி வெடியையும் கொளுத்திப்போடுகின்றனர். அதற்கு ஆதாரமாக, மேற்கு டெல்லியில் ஓராண்டுக்கு முன் தற்கொலை செய்து கொண்ட பாப்லா சாய்கா என்ற 21 வயது மாணவனை சுட்டிக்காட்டுகின்றனர்.
`மிகவும் புத்திசாலியாகவும், ஆரோக்கியமாகவும் இருந்த தனது மகன், மேற்கு டெல்லியில் உள்ள அந்த குறிப்பிட்ட வீட்டில் வாடகைக்கு குடி புகுந்த பிறகு தான் மாறுபாடு அடைந்தான். மூன்று மாடி கொண்ட அந்த வீட்டின் மேல் தளத்தில் அவன் குடியிருந்தான். வீட்டுக்குள் செல்லும்போதெல்லாம், அளவுக்கு அதிகமான மன நெருக்கடிக்கு ஆளாகி இருக்கிறான்’ என்கிறார், அந்த மாணவனின் தந்தை. அவர் ஒரு என்ஜினீயரும் கூட.
சரி. அந்த வீட்டில் அப்படி என்னதான் இருந்தது. வேறொன்றுமில்லை. மூன்று மாடிகளை கொண்ட அந்த வீட்டின் மொட்டை மாடியில் ஒரு செல்போன் கோபுரம் அமைக்கப்பட்டிருந்தது!
`செல்போன் கோபுரங்களால் ஏற்படும் விளைவுகள் பற்றிய பிரச்சினையின் தீவிரத்தை இந்தியர்கள் இன்னும் முழுமையாக புரிந்து கொள்ளவில்லை. மிக அடர்த்தியான அறியாமை இருளிலேயே இந்தியர்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். கடந்த 9 ஆண்டுகளாகவே, இதுதொடர்பான பல்வேறு ஆய்வு அறிக்கைகள் சர்வதேச அளவில் வெளியாகி உள்ளன. ஆனால், அவை அனைத்தும் கடினமான ஜமுக்காளத்தை போட்டு மூடப்பட்டு விட்டன’.
- இப்படி குமுறுகிறார்கள், செல்போன் கோபுரங்களால் ஏற்படும் விளைவுகள் பற்றி ஆய்வு செய்து வரும் இந்திய ஆராய்ச்சியாளர்கள்.
அமெரிக்க புற்றுநோய் ஆராய்ச்சி சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், `செல்போன் கோபுரங்களால் உடல்நலக் குறைவு ஏற்படுவதற்கான சாத்தியக் கூறுகள் மிகவும் குறைவு. ஏனெனில், செல்போன் கோபுரங்களில் இருந்து வெளியாகும் கதிரியக்க அலைகளின் நீளம் குறைவு. அதனால், அதிக பாதிப்பு கிடையாது. ஆனால், தொடர்ச்சியாக அந்த கதிரியக்க அலைகளின் கட்டுப்பாட்டுக்குள் இருந்தாலோ, உடலில் அதிக அளவுக்கு கதிரியக்க அலைகள் தாக்கினாலோ பாதிப்பு ஏற்படக்கூடும்’ என்று தெரிவித் துள்ளது.
ஆனால், இவை அனைத்தையும் செல்போன் நிறுவனங்கள் திட்டவட்டமாக மறுக்கின்றன.
செல்போன் நிறுவனங்கள் சங்கத்தின் இயக்குனர் ஜெனரல் ராஜன் மாத்யூஸ், “இந்த குற்றச்சாட்டுகள் அனைத்துமே கற்பனையானவை. சர்வதேச அளவிலான 15 ஆய்வு அறிக்கைகளை அரசிடம் நாங்கள் சமர்ப்பித்து இருக்கிறோம். நாங்களே சுயமாகவும் இந்தியாவில் ஆய்வு மேற்கொண்டோம். எதிலுமே இதுபோன்ற விளைவுகள் குறித்து கண்டறியப்படவில்லை” என்றார்.
இதுபோல பி.எஸ்.என்.எல். நிறுவன அதிகாரி ஒருவர் கூறுகையில், “செல்போன் கோபுரங்களால் உடல்நல குறைவு ஏற்படும் என்பது மன ரீதியிலான அச்ச உணர்வு. இதில், அறிவியல் பூர்வமான உண்மை எதுவும் கிடையாது. இத்தகைய தகவல்களால், ஊரகப்பகுதிகளில் எங்களுடைய நெட்வொர்க்கை விரிவு படுத்தும்போது ஏராளமான எதிர்ப்புகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது” என்று தெரிவித்தார்.
மத்திய அரசும் கூட, `செல்போன் கோபுர கதிரியக்க வீச்சினால் உடல்நலக் குறைவு ஏற்படுவது குறித்த எந்தவித மருத்துவ அறிக்கையும் இல்லை’ என பாராளுமன்றத்திலேயே அறிவித்தது.
இரு தரப்பினரும் தங்கள் கருத்துகளில் உறுதியாக நிற்கின்றனர். ஆனால், `அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சாகும்’ என்பது நமது முன்னோரின் முதுமொழி.
எனவே, செல்போன்கள் மற்றும் செல்போன் கோபுரங்களை பொறுத்தவரை அளவோடு பயன்படுத்திக்கொண்டு எச்சரிக்கையுடன் இருப்பதே நல்லது.
இல்லாவிட்டால், கட்டுரையின் தொடக்கத்தில் கூறப்பட்ட பாடல் வரிகள் உண்மையாகி விடும்.
அபாயத்தை தவிர்ப்பது எப்படி?
செல்போன் கோபுரங்களை நிறுவுவதில் இந்தியாவை பொறுத்தவரை மிகவும் அபாயகரமான நிலை நீடிக்கிறது. இந்தியாவில் மட்டுமே, செல்போன் கோபுரங்களை அவுட்சோர்சிங் முறையில் கொடுக்கும் அவலம் இருக்கிறது. இதன் காரணமாக, ஒரே செல்போன் கோபுரத்தை 2 அல்லது 3 செல்போன் நிறுவனங்கள் பகிர்ந்து கொள்கின்றன. எனவே, கதிரியக்க வீச்சின் வெளிப்பாடு அதிகரிக்கிறது. உலகில் எந்த ஒரு நாட்டிலும் இப்படி ஒரு நடைமுறை கிடையாது.
இந்தியா முழுவதும் 4 லட்சத்து 50 ஆயிரம் செல்போன் கோபுரங்கள் உள்ளன. அதே நேரத்தில், நகர்ப்புற பகுதிகளில் மிகவும் நெருக்கமாக இவை அமைக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே, 70 கோடி செல்போன் இணைப்புகள் உள்ள நிலையில் மாதந்தோறும் புதிதாக ஒன்றரை கோடி செல்போன் இணைப்புகள் வழங்கப்படுகின்றன.
இந்தியா முழுவதும் செல்போன் கோபுரங்களை அமைப்பதில் ரிலையன்ஸ், இந்துஸ் டவர்ஸ், ஜி.டி.எல் ஆகிய நிறுவனங்கள் உட்பட 12 நிறுவனங்கள் முன்னணியில் உள்ளன. தொலைத் தொடர்புத் துறை அமைச்சகம் மற்றும் நகராட்சி, மாநகராட்சி,
பஞ்சாயத்து போன்ற உள்ளாட்சி அமைப்புகள் ஆகியவற்றின் தடையில்லா சான்று பெற்ற பிறகே செல்போன் கோபுரங்கள் அமைக்கப்படுகின்றன. மேலும், சர்வதேச வழிகாட்டு விதி முறைகளின் படி, செல்போன் கோபுரங்களில் இருந்து வெளியாகும் கதிரியக்க வீச்சின் அளவு கட்டுப்படுத்தப்படுகிறது.
பஞ்சாயத்து போன்ற உள்ளாட்சி அமைப்புகள் ஆகியவற்றின் தடையில்லா சான்று பெற்ற பிறகே செல்போன் கோபுரங்கள் அமைக்கப்படுகின்றன. மேலும், சர்வதேச வழிகாட்டு விதி முறைகளின் படி, செல்போன் கோபுரங்களில் இருந்து வெளியாகும் கதிரியக்க வீச்சின் அளவு கட்டுப்படுத்தப்படுகிறது.
இந்த அளவுக்கு கடுமையான விதிமுறைகள் இருந்தாலும் செல்போன் கோபுரங்களின் அபாயம் என்பது `தலைக்கு மேல் அமர்ந்திருக்கும் எமன்’ என்பதே உண்மை.
ஏனெனில், இந்த வழிகாட்டுதல்கள் முறையாக கடைப்பிடிக்கப்படுவதில்லை. இதனால், மிக அதிக அளவிலான கதிரியக்க வீச்சுக்கு இந்தியா ஆளாகி இருக்கிறது. இந்த நிலைமையை மாற்ற வேண்டுமானால், மிகக் குறைந்த அளவே கதிரியக்கத்தை வெளிப்படுத்தும் சிறிய வகை ஆன்டெனாக்களை நிறுவலாம். 2 மீட்டர் உயரமுடைய ஆன்டெனாக்களை, குறைந்தபட்சம் 30 மீ. சுற்றளவிலான பாதுகாப்பு வளையத்துக்குள் அமைக்கலாம். மேலும், விதிமுறை மீறல்களையும் முறையாகவும், கடுமையாகவும் கண்காணிக்க வேண்டும்.
வெளிநாடுகளில் எல்லாம் மக்கள் வசிக்கும் வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளின் கூரைகள், பள்ளிகள், மருத்துவமனைகள் போன்றவற்றில் செல்போன் கோபுரங்கள் அமைக்கப்படுவதில்லை. அத்தகைய நடைமுறையை இந்தியாவிலும் பின்பற்றலாம்.
எல்லாவற்றுக்கும் மேலாக, அவசியமின்றி அதிகமாக செல்போன்களை பயன்படுத்துவதை மக்கள் தவிர்க்க வேண்டும். மிகவும் குறைவான அளவில், தேவையான தகவல்களை பரிமாற மட்டுமே செல்போனை பயன்படுத்த வேண்டும். தேவைப்பட்டால் குறுஞ்செய்திகளை பயன்படுத்தலாம். சாதாரண தொலைபேசிகளை பயன்படுத்துவதும் சிறந்தது.
|
No comments:
Post a Comment