Friday, April 8, 2011

உயிரணுக்களை பாதிக்கும் மடிக் கணினி



ஆடம் ஆஸ்பார்ன் (Adam Osborne) என்பவரால் 1981 ஆம் ஆண்டு மடிக் கணினி கண்டுபிடிக்கப்பட்டது. ஆரம்பத்தில் மிக கனமாயிருந்து, தற்பொழுது ஒன்றிலிருந்து 1.50 கிலோவிற்குள் வெவ்வேறு மாடல்களில் கிடைக்கிறது. இன்றைய கணினி யுகத்தில்  அலுவலகம் செல்வோரும், கல்லூரி மாணவ மாணவிகளும், வியாபார இடங்களிலும் ஆண்களாலும், பெண்களாலும் கணினியும், மடிக் கணினியும் பெருமளவில் பயன்படுத்தப்படுகின்றன. ஆண்களும், பெண்களும் மடிக் கணினியை மடியில் வைத்து தொடர்ந்து பல மணி நேரம், பல நாட்கள் பயன்படுத்துவதால் அவர்களையறியாமல் பாதிக்கப்படுகின்றனர்.
பெண்களை விட ஆண்கள் பெருமளவில் பாதிக்கப்பட வாய்ப்புண்டு. பொதுவாக ஆண்கள் உட்காரும்பொழுது கால்களை சற்று அகலமாக விரித்து உட்காருவது வழக்கம். இது அவர்களின் விதைப் பையையும், (Scrotum and Testicles) விதைக் காய்களையும் தகுந்த வெப்பத்தில் இருக்க உதவுகிறது. மடிக் கணினி உபயோகப்படுத்தும் போது கால்களை சற்று நெருக்கமாக வைத்து கணினியைத் தாங்கி பிடிப்பதால் கால்களுக்கிடையில் வெப்பம் அதிகமாக செல்கிறது. இது விதைப்பையின் வெப்பத்தை வழக்கத்தைவிட சுமார் 2.7 டிகிரி சென்டிகிரேட் அதிகமாக்குகிறது. இதனால் குழந்தை பெறும் தகுதியுள்ள ஆண்களுக்கு உயிரணுக்களின் (Sperm Count) எண்ணிக்கை 10 வருடங்களில் மூன்றில் ஒரு பங்கு குறைய வாய்ப்பிருப்பதாகத் தெரிகிறது.

நீண்ட நாட்கள் மடிக் கணினியை மடியில் வைத்துப் பயன்படுத்துபவர்களுக்கு தொடையின் முன் நடுப்பகுதியில் தோலிலும் அதன் அடியிலும் மாற்றம் ஏற்படுகிறது. மடிக் கணினி உபயோகிக்கும் போது இதன் அடிப்பாகத்தில் பேட்டரியினால் அல்லது மின்சாரத்தினால்  இளஞ்சூடு உண்டாகிறது. இதனால் தோலுக்கு அடியில் உள்ள சிறு ரத்தக் குழாய்கள் விரிவடைந்து, தோல் சில நாட்களில் சிவந்தும், சிறு சிறு சிவந்த கோடுகளாகவும் நிற மாற்றத்துடன் காணப்படுகிறது. இது வெளி நாடுகளில் மடிக் கணினி உபயோகப்படுத்தும், இளம் பெண்களுக்கு, குறிப்பாக  நாகரிக அரை டிராயர் (Half Trouser) அணிந்து வெளியே செல்பவர்களுக்கு தோல் மாற்றம் மன வருத்தத்தைத் தருகிறது.
இந்த நிற மாற்றத்துடன் கூடிய, சிவந்த தோற்றத்துடனான பாதிப்புக்கு Erythema Ab Igne அல்லது Toasted Skin Syndrome என்று பெயர். இது நீண்ட நாட்கள் மடிக் கணினி உபயோகத்தினால் விட்டு விட்டு ஏற்பட்ட இளஞ்சூட்டினால் வரலாம். வேறு சிலருக்கு வலி நிவாரணத்திற்கு உடலின் மற்ற பாகங்களில் நீண்ட நாட்கள் தரப்படும் வெந்நீர் ஒத்தடப் பைகளின் சூட்டினாலும் அந்தந்த பகுதிகளில் இத்தகைய தோல் மாற்றங்கள் வரலாம். இந்த பாதிப்பை பாதிக்கப்பட்டவரிடம் மருத்துவரின் விசாரிப்பினாலும், பரிட்சித்துப் பார்ப்பதினாலும் கண்டறியலாம்.
எனவே, இளம் வயது பள்ளி, கல்லூரி மாணவர்களும், வேலை மற்றும் தொழில் செய்யும் அனைத்து ஆண்களும் மடியில் கணினி வைத்து பயன்படுத்துவதைக் குறைத்துக் கொள்ள வேண்டும்.
இளம் வயது பையன்களும், இளைஞர்களும், பெண்களும் எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் மடிக் கணினியை தாழ்வான மேசைகளில் வைத்து உபயோகப்படுத்தலாம்.
ஆண்கள் மடிக் கணினியின் தவறான பயன்பாட்டினால் ஏற்படக்கூடிய உயிரணுக்கள் குறைவுப் பிரச்னையையும், ஆண், பெண் இருபாலார்க்கும் முன் தொடைப் பகுதியில் ஏற்படக்கூடிய சிகப்பு மற்றும் தோலில் மாற்றம் ஆகியவற்றையும் தவிர்க்க மடிக் கணினியை எச்சரிக்கையாகப் பயன்படுத்துவோம்.

No comments:

Post a Comment