Friday, April 8, 2011

கமரா மொபைல் போன்களால் காத்திருக்கும் கைசேதங்கள்


நவீன கண்டுபிடிப்புக்கள் நாளுக்கு நாள் அதிகரித்து ஓஹோ என்று வளர்ந்து சென்று ‘உள்ளங்கை நெல்லிக்கனி போல்’ மனிதன் உலகத்தை தன் உள்ளங்கைக்குள் வைத்திருக்கின்றான் என்று கூறுகின்ற அளவிற்கு மனிதன் நவீன கண்டுபிடிப்புக்களை கண்டுபிடித்துக்கொண்டே செல்கின்றான். பல மணி நேரம் சிரமப்பட்டு செய்துமுடிக்கும் வேலைகளை ஒரு சில நிமிடங்களில் செய்துமுடிக்குமளவுக்கு இன்றைய நவீனம் வளர்ந்திருக்கின்றது.
இஸ்லாம் மார்க்கத்தை எத்திவைப்பதற்கு இன்றைய நவீன கண்டுபிடிப்புக்கள் மிகப்பெரும் வசதி வாய்ப்புக்களை அமைத்துத் தந்திருக்கின்றது என்பதை அதிகமான முஸ்லிம்கள் உணராமல், இக்கண்டுபிடிபபுக்களை தவறான வழியில் துஷ்பிரோயம் செய்கின்றார்கள் என்பது மன வேதனைக்குரியதாகும். இன்றைய நவீன கண்டுபிடிப்புக்களில் மக்கள் மத்தியில் குறைந்த விலையில் பெற்றுக்கொள்ளக் கூடியதாகவும், அதிகமான வசதிகளை உள்ளடக்கியதாகவும், எங்கே வேண்டுமானாலும் இலகுவாக எடுத்துச் செல்லக்கூடியதாகவும் கையடக்கத் தொலைபேசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
தொலைவிலுள்ளவர்களுடன் இருந்த இடத்தில் இருந்துகொண்டே தொடர்பு கொண்டு, தங்களுடைய வேலைகளை இலகுவாக மக்கள் முடித்துக்கொள்வதற்காக மனிதன் தொலைபேசியைக் கண்டுபிடித்தான். பின்னர், அதனை மக்களுக்கு இன்னும் இலேசாக எங்கே வேண்டுமானாலும் எடுத்துச் செல்லக்கூடியவாறு கைக்குள்ளடக்கியதாக கண்டுபிடித்தான். நவீனம் வளர்ந்துகொண்டே செல்கின்றபோது டீவி, ரேடியோ, கொம்பியூட்டர், கமரா இன்னும் இதுபோன்றவற்றை உள்ளடக்கியதாகவும் கையடக்கத் தொலைபேசிகளை மனிதன் உருவாக்கினான்.
இதுபோன்ற சகல வசதிகளையும் உள்ளடக்கிய கையடக்கத்தொலைபேசிகள் அதிகமான இளைஞர்கள், யுவதிகள் மத்தியில் தவறான வழிமுறையில் பயன்படுத்தப்படுகின்றன. வாலிபர்கள் வீதியோரங்களில் நின்றுகொண்டு வீதியில் செல்லும் பெண்களை அவர்களுக்குத் தெரியாமல் கமரா போன்கள் மூலமாக படம்பிடித்து, மோசமான வேலைகளை செய்து பெண்களின் வாழ்க்கைகளில் விளையாடுவதைப் பார்க்கின்றோம். அதுபோன்று இன்னும் சில ஆண்களும் பெண்களும் விளையாட்டு என்று நினைத்து செய்யும் காரியங்கள் கடைசியில் கைசேதத்தில் கொண்டு சென்றுவிடுவதைப் பார்க்கின்றோம். கமரா போன்களால் எத்தனையோ விபரீதங்கள் நடைபெறுகின்றன.
அவைகளில் ஒரு சில உண்மைச் சம்பவங்களை இவ்விடத்தில் எடுத்துக்காட்டினால் பொருத்தமாக இருக்கும். இலங்கையில் உள்ள கம்பஹா எனும் மாவட்டத்தில் ஒரு சம்பவம் நடைபெறுகின்றது. ஒரு இளம் பெண் தனக்கு பெற்றோர் வாங்கிக்கொடுத்த கமரா வசதியுள்ள கையடக்கத் தொலைபேசியை பயன்படுத்தி ஒரு நாள் தன் பெற்றோர் இல்லரத்தில் ஈடுபட்டிருக்கும் காட்சியை வீடியோ எடுத்து பாடசாலைக்குச் சென்று தன்னுடையநண்பிகளுக்கு காட்டி ரசித்திருக்கின்றாள்.
அதுபோன்று தமிழ் பேசும் மாணவர்கள் கல்விகற்கும் பல்கலைக்கழகம் ஒன்றில் நடைபெற்ற சம்பவம் ஒன்றை எதேர்ச்சியாக ஒரு வீடியோக் காட்சிமூலம் பார்த்து ஆவேசமடைந்த ஒரு நபர் கூறும்பொழுது, எதேர்ச்சியாக எனது நண்பனின் Pen Drive விலிருந்து Bathroom Snap என்று பெயரிடப்பட்ட வீடியோ காட்சியொன்றை பார்க்க நேர்ந்தது. அதைப் பார்த்ததிலிருந்து என்னுள் இருந்த நிம்மதியை நான் இழந்துவிட்டேன். எமது நாட்டில் இருக்கும், அதுவும் தமிழ் பேசும் மாணவர்கள் அதிகம் இருக்கும் பல்கலைக்கழகமொன்றின் கழிவறையில் எடுக்கப்பட்ட காட்சிகள் அவை. குறித்த ஒரு நேரகாலப்பகுதிக்குள் கழிவறைக்கு வந்துபோன சுமார் 5-6 வரையிலான பெண் மாணவிகள் கழிவறையைப் பயன்படுத்தும்போது மறைந்திருந்து படம்பிடிக்கப்பட்டுள்ளார்கள். இந்தக் காட்சியையும், இன்னும் அவ்வளாகத்தினுள் நடந்த ஒரு சில காட்சிகளையும் பார்த்து ஆவேசமடைந்தேன். தெரிந்துகொண்டும் தவறுகளில் மூழ்கும் பெண் மாணவிகள் ஒரு புறமிருக்க, அப்பாவி மாணவிகள் இவ்வாறான படப்பிடிப்புக்குட்படுகின்றார்கள் என்பது மனதை உருக்கும் செய்தியாகும். எனது அபிப்பிராயம் என்னவென்றால், சகல பெண் மாணவிகளுக்கும் இவ்வாறான ஒரு நிலை கமரா போன்களால் காத்திருக்கின்றது என்பது புரிந்து கொள்ளப்படவேண்டும்.
மேலே உள்ள இரண்டு சம்பவங்களும் கமரா போன்களால் ஏற்பட்டவைகளாகும். இன்னும் இதுபோல் எத்தனையோ சம்பவங்கள் உலகில் நடைபெறுகின்றன. கமரா போன்களால் ஏற்பட்ட இவ்விரண்டு சம்பவங்களையும் மக்களின் விழிப்புணர்வுக்காக சுட்டிக்காட்டியிருக்கின்றேன்.
பெற்றோர்களே! இஸ்லாம் மார்க்கம் சில பொறுப்புக்களை உங்களுக்கு வழங்கியிருக்கின்றது. அந்தப் பொறுப்புப்பற்றி நீங்கள் மறுமையில் விசாரிக்கப்படவுள்ளீர்கள். உங்களுடைய பிள்ளைகள் கல்வியில் சிறந்த நிலையில் வரவேண்டும் என்பதற்காக எத்தனையோ காரியங்களைச் செய்கின்றீர்கள். ஆனால் அவர்கள் இஸ்லாத்திற்கு கட்டுப்பட்டு ஒழுக்கமுள்ளவர்களாக வாழவேண்டும் என்று நினைத்து உங்கள் பிள்ளைகள் என்ன செய்தாலும், எங்கே சென்றாலும், யாருடன் கதைத்தாலும், கணனி, கையடக்கத் தொலைபேசி போன்றவற்றை வாங்கிக் கொடுத்தால் அதனை எவ்வாறு பயன்படுத்துகின்றார்கள் என்றும் முழு அவதானத்துடன் இருக்கின்றீர்களா!
மேலே எடுத்துக்காட்டிய சம்பவங்கள் உங்களுக்கும் நடைபெறாது என்பது என்ன உறுதி! விழிப்பாக இருங்கள். ‘உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளர்கள் தன் பொறுப்புக்கு உட்பட்டவை பற்றி நீங்கள் விசாரிக்கப்படுவீர்கள்.’ (அறிவிப்பவர்: இப்னு உமர் (ரழி), ஆதாரம்: புகாரி-2409)
வாலிபர்களே! யுவதிகளே! அனைவரையம் வழிகேட்டில் கொண்டு செல்லக்கூடிய வயதில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம். நமது இளம் பருவத்தை அல்லாஹ்வும், நபிகள் நாயகம் அவர்களும் சொன்னபிரகாரம் வாழ்ந்து வெற்றிபெறவேண்டும்.
ஷைத்தான் அல்லாஹ்விடத்தில் ‘உன்னை விசுவாசங்கொண்டவர்களுக்கு தீயதை அழகாகக் காட்டி வழிகெடுப்பேன்’ என்று சவால் விட்டு வந்திருக்கின்றான்.  அல்லாஹ்வை விசுவாசங்கொண்ட நாம் ஷைத்தானுக்குக் கட்டுப்படாதவர்களாக வாழவேண்டும்.
மேலே உள்ள சம்பவங்கள் நமக்கு ஒரு படிப்பிணையாக இருக்கவேண்டும். அல்லாஹ்வின் பிடி கடினமானது. அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள்! தவறான பாதையில் சென்றுவிடாமல் விழிப்பாக இருந்துகொள்ளுங்கள்!

No comments:

Post a Comment