தாம்பரம் பஸ் நிலையத்தில் இளம்பெண் சுடிதாரை பிடித்து இழுத்து, அவரது கையை பிளேடால் கிழித்த போதை வாலிபர்களை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.
இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தாம்பரத்தை அடுத்த படப்பை அருகேயுள்ள கரசங்கால் பகுதியை சேர்ந்தவர் அழகப்பா. இவரது மனைவி, பெருங்களத்தூர் ராஜீவ்காந்தி சிலை அருகே பூ வியாபாரம் செய்து வருகிறார்.
அவருக்கு உதவியாக மகள் இந்திரா (26) இருந்து வருகிறார். நேற்றிரவு வியாபாரம் முடிந்ததும் தாயும் மகளும் தாம்பரம் பஸ் நிலையத்துக்கு வந்தனர். அங்கிருந்து கரசங்கால் செல்ல பஸ்சுக்காக காத்திருந்தனர். அப்போது போதையில் இருந்த இரண்டு வாலிபர்கள், அந்த வழியாக சென்ற பெண்களை கேலி, கிண்டல் செய்து கொண்டிருந்தனர். இந்திராவையும் அவர்கள் கேலி செய்தனர்.
வம்பு எதற்கு என நினைத்த தாயும் மகளும் அங்கிருந்து நகர்ந்து சென்றனர். பஸ் வர தாமதமானதால் இந்திராவின் அம்மா அருகில் இருந்த கடைக்கு சென்றுவிட்டார். இதை கவனித்த வாலிபர்கள், இந்திராவின் அருகே சென்று மீண்டும் கேலி செய்ய ஆரம்பித்தனர். பதற்றம் அடைந்த அவர், அங்கிருந்து செல்ல முயன்றார். போதை வாலிபர்கள், திடீரென அவரது சுடிதாரை பிடித்து இழுத்தனர்.
அவர் சத்தம் போட்டார். ஆத்திரமடைந்த வாலிபர்கள், மறைத்து வைத்திருந்த பிளேடால் இந்திராவின் வலது கையை அறுத்தனர். கை கிழிந்து ரத்தம் கொட்டியது. இந்திரா அலறி துடித்தார். சத்தம் கேட்டு அவரது தாய் மற்றும் அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். வாலிபர்கள் இருவரையும் பிடித்து தர்ம அடி கொடுத்து தாம்பரம் போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.
போலீசார் வந்து இருவரையும் பிடித்து ஸ்டேஷனுக்கு கொண்டு சென்று விசாரித்தனர். அவர்கள் கேரளாவை சேர்ந்த டோனி (31), வாலாஜாபாத்தை சேர்ந்த குணசேகரன் (28) என்பது தெரிந்தது. இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்து மேலும் விசாரிக்கின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
|
No comments:
Post a Comment