Friday, December 2, 2011

இந்தியாவை கூறுபோட்டு விற்கிறார்கள்

இந்திய சில்லறை வணிகத்தில் நேரடி அந்நிய முதலீட்டை 51 சதவிகிதம் அனுமதிக்கிறார்களாம்! நாம் விளைவித்து, வேலைசெய்து, அறுவடைசெய்து கொடுக்கும் விளைபொருளை ஒரு அமெரிக்கக் கம்பெனி நமக்கே விற்று லாபத்தை அவர்கள் நாட்டுக்குக் கொண்டு போவார்களாம்! - இதை நிறைவேற்ற ஒரு கட்சி துடியாய்த் துடிக்கிறது.நாட்டைத் திரும்பவும் ஆங்கிலேயரிடம் நாட்டை ஒப்படைக்கப் போகிறார்களா?

தற்போது இந்தியாவில் சில்லறை வணிகர்கள் மற்றும் அதன் மூலம் வேலைவாய்ப்பில் ஏறக்குறைய4-கோடி பேர் உள்ளனர். இவர்களின் கதி? இந்த சட்டம் மட்டும் நிறைவேறப்பட்டால் குறைந்தது 2-கோடி பேர் மூன்று வருடங்களுக்குள் வேலை இழக்க நேரிடும்!

தற்பொழுது நாம் விளைவிற்கும் பொருள் பல சில்லறை முதலீட்டாளர்கள் மூலம் மக்களைச் சென்றடைகிறது! முக்கிய விஷயம் - இவர்கள் அனைவரும் இந்தியர்கள்,
உழைப்பவர்கள். நம்முடைய உழைப்பை நாம்தான் அனுபவிக்கிறோம்! வெளிநாட்டு முதலீட்டாளர்களை அனுமதித்தால் அவர்கள் ஒன்றும் இங்குவந்து வேலை செய்யப் போவதில்லை, ஆனால் லாபத்தை எடுத்துக்கொள்வார்கள்!

எவன் செத்தால் எனக்கென்ன?


இதை அனுமதித்தால் மூன்று வருடங்களுக்குள் ஒரு கோடி பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என அரசு சொல்கிறது. - இரண்டு கோடி வேலைகளை அழித்துவிட்டு அதில் பாதி வேலைவாய்ப்பைக் கொடுத்தால் என்ன? கொடுக்காவிட்டால் என்ன? - வேலையில்லாத் திண்டாட்டம் இன்னும் பெருகும்..


இன்று தேவையின் அடிப்படையில் விலை நிர்ணயிக்கப்படுகிறது! இனி அவர்கள் (வெளிநாட்டுக் கம்பெனிகள்)சொல்லுவதுதான் விலை என்ற நிலை உண்டாகும், தான் ஏமாற்றப்படுகிறோம் என்றுகூட அறியாத அப்பாவி விவசாயி வெளிநாட்டு நிறுவன முதலாளிகளுக்காக உழைத்துக் கொண்டிருப்பான்!.



வெளிநாட்டு நிருவனங்களுடன் கூட்டு சேர்ந்து கடைகளைத் திறக்கும் மிகப்பெரிய இந்திய நிறுவனங்கள் இன்னும் வளரும் - ஏழை இன்னும் ஏழையாவான்!. பணக்காரன் இன்னும் பணக்காரன் ஆவான்!




வால் மார்ட் அல்லது டெஸ்கோ போன்ற நிறுவங்கள் அடர்ந்துள்ள அமெரிக்கா மற்றும் ஐரோப்பா முழுவதும் சில்லறை வணிகங்கள் ஏறக்குறைய 5-சதவிகிதம்தான் உள்ளது. அவற்றின் வளர்ச்சிகூட நின்றுபோய்விட்டது.. ஏனெனில் அவர்களால் மிகப்பெரிய நிறுவனங்களுடன் போட்டிபோட முடியாத நிலை.



அமெரிக்காவிற்கும், ஐரோப்பாவிற்கும் வேண்டுமானால் இந்த நிறுவனங்களால் பயன் இருக்கும், ஏனெனில் அவர்கள் எதையும் உற்பத்தி செய்வதில்லை. அனைத்தும் இறக்குமதி மட்டும்தான். பெரிய நிறுவனங்களால் மட்டுமே அதிக பொருட்களைக் குறைந்த விலையில் இறக்குமதி செய்ய முடியும். ஆனால் இந்தியாவில் நாம் செய்வது உற்பத்தி, அதை நமக்கே விற்பதற்கெதற்கு அந்நிய கம்பனி?



இப்படித்தான் எண்ணெய் நிறுவனங்களுக்கு விலையை நிர்ணயிக்கும் உரிமையைக் கொடுத்தார்கள், அதிலிருந்து அதன் விலை வீங்கிக்கொண்டே போகிறது!, ஏன் அரசாங்கத்திலும் 100 சதவிகித அமெரிக்கர்களை உட்கார வைத்துவிட்டு இவர்கள் விலகிவிட வேண்டியதுதானே! 


சில்லரை வணிகத்தை மேம்படுத்துவதை விட்டுவிட்டு எல்லாவற்றையும் அவர்கள் (அந்நிய முதலீட்டாளர்கள்) பார்த்துக்கொள்வார்கள் என்பது கையாலாகாத்தனம். உழவர் சந்தை போன்றதோர் திட்டத்தை நாடு முழுவதும் கொண்டுவந்து விவசாயத்தை மேம்படுத்தலாம்!


ஏன் இந்த திட்டத்தை இவ்வளவு அவசரமாக நிறைவேற்ற அரசு முயற்சிக்கிறது?? ஜன லோக்பாலை மறந்துவிட்டார்களா?? எல்லோருக்கும் சிதம்பரத்தின் மறதி வியாதி தொற்றிக்கொண்டதோ? அந்நிய முதலீட்டுக்கு ஆதரவு தெரிவித்து சில பத்திரிகைகள் வாய்கிழிய பிரசாரம் நடத்துவதின் பின்னணி என்ன?

No comments:

Post a Comment