கற்பழிப்புப் புகாரில் காக்கிகள் மாட்டுவது புதிதல்ல. ஆனால் இந்த முறை நான்கு இருளர் இனப் பெண்கள் பாதிக்கப்பட்டு இருப்பதால் விவகாரம் உச்சகட்ட டென்ஷனில் இருக்கிறது.
திருக்கோவிலூர் அருகேயுள்ள தி.மண்டபம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் காசி. இருளர் சமுதாயத்தைச் சேர்ந்த இவரை, 'ஒரு வழக்கு தொடர்பாக விசாரிக்க வேண்டும்’ என்று, கடந்த 22-ம் தேதி மதியம் போலீஸார் அழைத்துப் போனார்கள். மீண்டும் இரவு 8 மணியளவில் காசி வீட்டுக்கு வந்த போலீஸார், காசியின் அப்பா முருகன், அம்மா வள்ளி, மனைவி லட்சுமி, சகோதரிகள் ராதிகா, வைகேஸ்வரி, தம்பி வெள்ளிக்கண்ணு, தம்பி மனைவி கார்த்திகா ஆகிய ஏழு பேரையும் வம்படியாக ஸ்டேஷனுக்கு கொண்டு சென்று இருக்கிறார்கள். விசாரணை முடிந்து வீட்டுக்கு அழைத்து வரும் வழியில், சங்கராபுரம் ரோட்டில் உள்ள தைலம் தோப்புக்குள் வண்டியை விட்டிருக்கிறார்கள். அங்கு வள்ளி மற்றும் ஆண்களைத் தவிர்த்து மற்ற நான்கு பெண்களையும் கீழே இறங்கச் சொல்லி தோப்புக்குள் இழுத்துப் போய், நான்கு காவலர்களும் பலாத்காரம் செய்ததாக செய்தி பரவி உள்ளது. இதில் லட்சுமி 3 மாத கர்ப்பிணி. இந்த விவகாரம்தான் தமிழகத்தைச் சூடாக்கி இருக்கிறது.
நான்கு பெண்களையும் புகார் கொடுக்க அழைத்து வந்த பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்கச் செயலாளர் பூபதியிடம் பேசினோம். ''தோப்புல இறக்கி விட்டு, தவறான நோக்கத்துல நெருங்கின போலீஸிடம், 'நாங்க உங்க தங்கச்சி மாதிரி. எங்கள விட்டுடுங்க’ன்னு எவ்வளவோ கெஞ்சி இருக்காங்க. அதுக்கு போலீஸ்காரங்க, 'உங்கள தங்கச்சியா நெனைச்சா எங்க ஆசையை எப்படித் தீர்த்துக்கிறது. வந்து படுங்கடி’னு மோசமா பேசி இருக்காங்க. அரை மணி நேரம் மிருகம் மாதிரி நடந்து... அவங்கள நாசமாக்கிட்டுத்தான் ஓய்ஞ்சிருக்காங்க. ராத்திரி முழுக்க அவங்களை அங்கேயே வைச்சிருந்து மறுநாள் விடியகாலம் அஞ்சு மணிக்குத்தான் வீட்டுல விட்டுருக்காங்க. மறுநாள் நான்கு பெண்களும் இல்லாதப்ப போலீஸ்காரங்க வந்து, வீட்டில இருந்த பொருட்களை எல்லாம் உடைச்சிருக்காங்க. 10 பவுன் நகையையும், 2,000 பணத்தையும் தூக்கிட்டுப் போயிட்டாங்க. வீட்டுக்குத் திரும்பி வந்தவங்க, போலீஸுக்கு பயந்துக்கிட்டு, உளுந்தூர்பேட்டையில இருக்கிற லட்சுமியோட அப்பா வீட்டுக்குப் போயிட்டாங்க. அதுக்குப் பிறகுதான் என்னைப் பார்த்தாங்க'' என்றார்.
அடுத்துப் பேசிய பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்கத்தின் விழுப்புரம் வட்ட ஒருங்கிணைப்பாளர் ரமேஷ், ''நாங்க புகார் கொடுத்ததும், அந்த நான்கு பெண்களையும் மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பச் சொன்னோம். ஆனா, அவங்க அதைச் செய்யாம, அந்தப் பெண்களை ராத்திரி முழுக்க ஒரு தனி அறையில வைச்சு மிரட்டியிருக்காங்க. அதனால, 'எங்க உறவினர்களை வெளியே விடணும்னுதான் நாங்க அப்படி பொய் சொன்னோம்’னு சொல்லிட்டாங்க. அப்புறம் எங்க சங்க செயலாளர் பூபதி அந்தப் பெண்களிடம் தனியா பேசின துக்கு அப்புறமாதான், போலீஸ்காரங்க மிரட்டினது எங்களுக்குத் தெரிய வந்தது. இந்த வழக்கு சம்பந்தமா சி.பி.ஐ. விசாரணை வேணும்னு போராட இருக்கிறோம்'' என்றார்.
இருளர் சங்கத்தின் திண்டிவனம் வட்ட ஒருங்கிணைப்பாளரான பேராசிரியர் பிரபா கல்விமணியிடம் பேசினோம். ''போலீஸ்காரங்களுக்கு ஒரு கேஸும் இல்லைன்னா, இருளரில் ஒருத்தரை பிடிச்சுட்டுப் போய், 'பொய் கேஸ்’ போடுறது வழக்கம். 1996-ம் ஆண்டு 'அத்தியூர் விஜயா’ பலாத்கார சம்பவத்துக்குப் பிறகு, அந்த நிலைமை கொஞ்சம் குறைஞ்சது. ஆனா, இப்போ திரும்பவும் இருளர் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உருவாகிடுச்சு. அந்த நான்கு பெண்களில் ஒருவருக்கு 17 வயசுதான். அந்த பெண்ணிடம் மட்டும் மூணு போலீஸ்காரங்க மிருகத்தனமாக நடந்திருக்காங்க. அனைத்துக் கட்சியினரையும் அழைச்சு ஒரு கூட்டம் போட்டோம். அதில், டி.ஐ.ஜி., எஸ்.பி., ஆகியோர் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தீர்மானம் போட்டு இருக்கிறோம். அந்தப் பெண்களுக்கு நியாயம் கிடைக்கும் வரை எங்கள் போராட்டம் தொடரும்'' என்றார்.
விழுப்புரம் எஸ்.பி. பாஸ்கரனிடம் பேசினோம். ''லட்சுமியோட கணவன் ஒரு பெரிய திருடன். ஒரு டாக்டர் வீட்டுலேயும் கலெக்டர் ஆபீஸ்ல வேலை செய்கிற ஒருத்தரோட வீட்டுலேயும் நகை திருடி இருக்கார். அதோட மதிப்பு ஐந்தரை லட்ச ரூபாய். அதோட, ஒரு கோயில் உண்டியலிலும் பத்தாயிரம் ரூபாய் திருடி இருக்கிறான். அதனாலதான் அவரை கைது செஞ்சாங்க. புகார் சொன்ன பெண்களிடம் நான் பேசினப்ப... 'கணவரை மீட்கத்தான் பொய் சொன்னோம்’, 'எங்களை போலீஸ்காரங்க பாலியல் பலாத்காரம் செஞ்சாங்க’ என்று மாத்தி மாத்திப் பேசுறாங்க. இப்போ திருக்கோவிலூர் மாஜிஸ்திரேட் விசாரணை செஞ்சிக்கிட்டு இருக்காங்க. மத்தபடி நாங்க யாருமே அந்தப் பெண்களை மிரட்டவில்லை'' என்றார்.
போராட்டம் தீவிரம் அடைந்தபிறகே, சம்பந்தப்பட்ட போலீஸார் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. பெண் தலைமையில் நடக்கும் ஆட்சியிலும், தமிழகப் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லையே!
|
No comments:
Post a Comment