இந்தியாவில் செயல்படும் ஊடகங்கள் இஸ்லாமிய பாடசாலையான மதரஸாக்களைப்பற்றி பல்வேறுவிதமான கதைகளை வெளியிடுவது வழக்கம். தீவிரவாதத்தின் பிறப்பிடமே மதரஸாக்கள் தான் என்கிற ரீதியில் பல பத்திரிக்கைகள் சென்ற நாட்களில் செய்திகளை வெளியிட்டிருக்கிறது. பெரும்பாலான மதரஸாக்களுக்கு பாகிஸ்தான் உளவுப் பிரிவான ஐ.எஸ்.ஐயிடமிருந்து தீவிரவாத தாக்குதலை நிகழ்த்துவதற்காக பணம் வருகிறது என்று கூட செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால் இவ்வாறு செய்திகளை வெளியிடும் பத்திரிக்கைகள் தாங்கள் வெளியிட்ட செய்தி எந்த அளவிற்கு ஆதாரப்பூர்வமானது என்பதை ஆராய்வதில்லை. நமக்கு தெரிந்தவரை மதரஸாக்களில் தீவிரவாதம் பயிற்றுவிக்கப்படுகிறது என்று இதுவரை எந்த நீதிமன்றங்களிலும் நிரூபிக்கப்படவில்லை.
150 மில்லியன் முஸ்லிம் ஜனத்தொகை கொண்ட இந்திய நாடு உலகிலேயே இந்தோனேஷியாவிற்கு பிறகு அதிக முஸ்லிம்கள் வாழும் நாடாக திகழ்கிறது. இதில் பெரும்பாலான மக்கள் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். கல்வி அறிவு, பொருளாதாரம், வேலை வாய்ப்பு போன்றவற்றில் மிகவும் பின் தங்கி இருக்கும் முஸ்லிம் சமூகம் வகுப்புவாத சக்திகளால் கொடூரமான முறையில் தாக்கப்பட்டு வருகிறார்கள். அரசாங்கத்தால் ஏற்படுத்தப்பட்ட கமிஷன்கள் கடந்த காலங்களிலும் இருமுறை முஸ்லிம்களின் இந்த நிலையை ஆராய்ந்து அறிக்கைகளை சமர்பித்திருக்கின்றனர். இருந்த போதிலும் இந்திய முஸ்லிம்களின் வாழ்க்கை நிலையை முன்னேற்றுவதற்கான எந்த வாசல்களும் அரசாங்கத்தால் திறக்கப்படவில்லை என்பது தான் வேதனையான விஷயம்.
இந்தியாவின் பல மாநிலங்களில் குக்கிராமங்களில் வாழும் முஸ்லிம்களுக்கு எந்த ஒரு அடிப்படை வசதியுமின்றி வாழ்ந்து வருகிறார்கள். அடிப்படை கல்வியை கற்றுக்கொள்வதற்கான ஒரு பாடசாலை கூட இயங்காத எத்தனையோ கிராமங்கள் இந்தியாவில் இருக்கின்றன. ஏழை பெற்றோர்களாக இருக்கும் முஸ்லிம்கு வேறு வழியின்றி இலவசமாக கல்வி கற்றுக்கொடுக்கப்படும் இடமான மதரஸாவிற்கு தங்களுடை பிள்ளைகளை அனுப்புகின்றனர். பொதுவான கல்வியை கற்றுக்கொள்ள முடியாத தங்களுடைய பிள்ளைகள் இஸ்லாமிய கல்வியையேனும் கற்றுக்கொள்ளட்டும் என்று மதரஸாவிற்கு அனுப்பி வைக்கின்றனர்.
முஸ்லிம்களுக்கு கல்வி, வேலை, வீட்டு வசதி மற்றும் பிற துறைகளில் பாகுபாடு காட்டப்பட்டு வருகிறது. இந்த பாகுபாடு பல முஸ்லிம்கள் மத்தியில் பெரும் மன பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தேசத்திலிருந்து இத்தகைய பாகுபாட்டை நீக்கிவிட்டால் இந்தியாவில் வளர்ச்சிக்கு முன்பு போல் முஸ்லிம்களால் பங்காற்ற முடியும்.
மற்ற இந்தியர்களுக்கு வழங்குவது போன்ற வாய்ப்புகள் முஸ்லிம்களுக்கும் வழங்கப்பட்டால் நிச்சயம் அவர்களால் தங்களது வாழ்க்கை தரத்தை உயர்த்திக்கொள்ள முடியும். இந்திய முஸ்லிம்களும் அதையே விரும்புகின்றனர். இப்படியாக எல்லா துறைகளிலும் பிந்தங்கி இருக்கின்ற முஸ்லிம் சமூகம் தங்களது வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்காக முயற்ச்சித்து வரும் வேலையில் அவர்களை பற்றிய தவறான முறையில் மக்கள் மத்தியில் இந்த ஊடகங்கள் காட்டி வருகிறது. தீவிரவாதம், குண்டுவெடிப்பு என்று வந்தாலே முஸ்லிம்கள் மீது சந்தேகம் எழும் அளவிற்கு ஊடகங்கள் முஸ்லிம்களை தவறாக சித்தரித்து வருகின்றனர். இத்தைக பாகுபாடான நிலையை ஊடகங்கள் கைவிடவேண்டும் என்பதே அனைவரின் வேண்டுகோளாகும்.
|
No comments:
Post a Comment