அதிகாரத்தைப் பயன்படுத்தி, வீட்டை அபகரித்துக் கொண்டதாக, முன்னாள் துணை முதல்வர் ஸ்டாலின், அவரது மகன் உதயநிதி மற்றும் நண்பர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து, ஸ்டாலின் எந்நேரமும் கைது செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், அவர் நேற்று திடீரென டி.ஜி.பி., அலுவலகத்தில் ஆஜராகி, "என் மீது போடப்பட்டுள்ள வழக்கு தொடர்பாக, என்னை கைது செய்யுங்கள் எனக் கேட்பதற்காக வந்தேன்' என, சவால் விடுத்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
சென்னை, ஆழ்வார்பேட்டையைச் சேர்ந்தவர் சேஷாத்ரி குமார், 64. இவர், சில நாட்களுக்கு முன், சென்னை போலீஸ் கமிஷனரிடம் ஒரு மனு அளித்திருந்தார். அதில், "தனக்குச் சொந்தமான 2.5 கிரவுண்டு நிலத்தில் உள்ள வீட்டை, முன்னாள் துணை முதல்வர் ஸ்டாலின், அவரது நண்பர்கள் ராஜாசங்கர், சீப்ராஸ் மற்றும் ரெயின் ட்ரீ ஓட்டல்கள் அதிபர் சுப்பா ரெட்டி, வேணுகோபால் ரெட்டி மற்றும் சீனிவாசன் ஆகியோர் மிரட்டி, வேணுகோபால் ரெட்டி பெயரில் பதிவு செய்து கொண்டனர். இது தொடர்பாக, ஸ்டாலின், அவரது மகன் உதயநிதி மற்றும் ராஜாசங்கர் உள்ளிட்ட ஆறு பேர் மீது நடவடிக்கை எடுத்து, வீட்டை மீட்டுத் தர வேண்டும் எனக் கோரியிருந்தார்.
நள்ளிரவில் பரபரப்பு: விசாரணை மேற்கொண்ட சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார், நேற்று முன்தினம், ஐந்து பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். அவர் எந்நேரமும் கைது செய்யப்படலாம் என்ற தகவல் பரவியதால், நேற்று முன்தினம் நள்ளிரவில் இருந்து பரபரப்பு தொற்றிக்கொண்டது. திருச்சியில் இருந்து விமானத்தில் வந்த ஸ்டாலின், விமான நிலையத்தில் கைது செய்யப்படுவார் என்ற செய்தி பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால், ஏராளமான தொண்டர்கள் விமான நிலையத்தில் கூடியிருந்தனர். ஆனால், ஏதும் நடக்கவில்லை.
வழக்கறிஞர்கள் புடை சூழ...: இந்நிலையில், நேற்று முற்பகல் 11.30 மணிக்கு, ஏராளமான வழக்கறிஞர்கள் புடை சூழ, டி.ஜி.பி., அலுவலகத்திற்கு ஸ்டாலின் வந்தார். அங்கு, டி.ஜி.பி., ராமானுஜம், சட்டம் - ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி., ஜார்ஜ் இல்லாததால், நிர்வாகப் பிரிவு கூடுதல் டி.ஜி.பி., ராஜேந்திரனிடம் இரண்டு புகார் மனுக்களை அளித்தார். வெளியில் வந்த ஸ்டாலின், நிருபர்களிடம் கூறியதாவது: அ.தி.மு.க., ஆட்சியில், பொய் வழக்கு போடுவது தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்த ஆட்சியில் கைது செய்யப்பட்ட பின் தான் எப்.ஐ.ஆர்., போடப்படுகிறது. எப்.ஐ.ஆர்., என்பது முதல் தகவல் அறிக்கை என்று தான் எங்கள் ஆட்சியில் இருந்தது. இந்த ஆட்சியில் அது, பொய் தகவல் அறிக்கை என்றாகிவிட்டது. எங்கள் மீது போடப்பட்ட வழக்கு தொடர்பாக விளக்கம் அளிப்பதற்காக, டி.ஜி.பி.,யை சந்திக்க வந்தேன். அவர் இல்லாததால், கூடுதல் டி.ஜி.பி., ராஜேந்திரனிடம் மனு அளித்துள்ளேன். புகார் அளிக்கப்பட்டுள்ள சொத்துக்கும், எனது குடும்பத்திற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. உதயநிதியின் திரைப்பட நிறுவனத்துக்காக வாடகை ஒப்பந்தம் போடப்பட்ட இடத்தில், என் மகளும், மருமகனும் குடியிருந்து வருகின்றனர். எங்கள் மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளது. புகார் கொடுத்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கைது செய்யாதது ஏன்? என் மீது எப்.ஐ.ஆர்., போடப்பட்டிருப்பதால், கைது செய்திருக்க வேண்டும். நான் என்னை கைது செய்யுங்கள் என்று கேட்கத்தான் வந்தேன். நில மோசடி என்று யார் புகார் கொடுத்தாலும், உடனடியாக வழக்கு போடுகின்றனர். என் மீதும், தி.மு.க.,வினர் மீதும் உள்ள வழக்குகளை தைரியமாக எதிர்கொள்வோம். சிறுதாவூர் மற்றும் கொடநாடு பகுதியில் நில ஆக்கிரமிப்பு தொடர்பாக, புகார் அளிக்கப்பட்டுள்ளது. அந்த புகார் மீது எப்.ஐ.ஆர்., போட வேண்டும் என்று போலீஸ் அதிகாரிகளிடம் கேட்டுள்ளேன். இவ்வாறு ஸ்டாலின் கூறினார். டி.ஜி.பி., அலுவலகத்திற்கு ஸ்டாலின் வருவதாக வந்த தகவலையொட்டி, பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
முதல்வர் மீது நடவடிக்கை எப்போது? டி.ஜி.பி., அலுவலகத்தில் ஸ்டாலின் கொடுத்த இரு புகார் மனுக்களில் கூறப்பட்டிருந்ததாவது: என் மீது எப்.ஐ.ஆர்., போடப்பட்டுள்ளதாக, பத்திரிகைகளின் மூலம் தெரிந்து கொண்டேன். அரசியல் ஆதாயத்துக்காக அந்த எப்.ஐ.ஆர்., போடப்பட்டுள்ளது. இந்த வழக்குக்கும், எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. பொதுமக்கள் மத்தியில் என் மதிப்பை சீர்குலைப்பதற்காக கொடுக்கப்பட்ட பொய் புகார் இது. அதிகாரத்தில் இருப்பவர்களால், காவல் துறை தவறாக பயன்படுத்தப்படுகிறது. புகாரின் உண்மைத் தன்மையை ஆராயாமல் வழக்கு பதியப்பட்டுள்ளது. பாரபட்சமில்லாமல் செயல்பட வேண்டிய காவல் துறை, ஆளும் அ.தி.மு.க.,வின் கருவியாகச் செயல்படுகிறது. என்னை தொந்தரவு செய்வதற்காக, தவறான புகார் கொடுத்தவர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு ஒரு புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அவர் கொடுத்த மற்றொரு மனுவில் கூறப்பட்டிருந்ததாவது: சட்ட விரோதமாக ஆக்கிரமிக்கப்பட்ட இரு சொத்துகள், தற்போதைய முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமாக கொடநாட்டிலும், சிறுதாவூரிலும் உள்ளன. கொடநாட்டில் மிகப் பெரிய நிலப்பரப்பை தற்போதைய முதல்வர் பெற்றுள்ளார். இதுவரை அவர் மீது, நில ஆக்கிரமிப்பு வழக்கு பதியப்படவில்லை. சிறுதாவூரைப் பொறுத்தவரை, தனக்கு நெருக்கமானவர்கள் பெயரில் பெருமளவு நிலத்தை, தற்போதைய முதல்வர் ஆக்கிரமித்துள்ளார். இது தொடர்பாகவும், அவர் மீது நில ஆக்கிரமிப்பு வழக்கு தொடரப்படவில்லை. ஏற்கனவே, கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் ஒருவர் கொடுத்த புகார் கிடப்பில் உள்ளது. எனவே, தற்போதைய முதல்வர் ஜெயலலிதா மீது நில ஆக்கிரமிப்பு, மிரட்டி பணம் பறித்தல், அச்சுறுத்தல் உள்ளிட்ட பிரிவுகளில் எப்.ஐ.ஆர்., பதிவு செய்து, சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
|
No comments:
Post a Comment