Friday, December 2, 2011

காதலியை விபச்சார கும்பலிடம் விற்றவர் கைது!!


ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் பி.கொத்தக்கோட்டா மண்டலத்தை சேர்ந்தவர் தாதா பீர் (33), ஆட்டோ டிரைவர். இவர், கடந்த சில மாதங்களுக்கு முன்பு மதனப்பள்ளியில் நடந்த நண்பரின் திருமணத்திற்கு சென்றிருந்தார்.

அப்போது அதே திருமணத்திற்கு வந்திருந்த மதனப்பள்ளி ரங்காரெட்டி காலனியை சேர்ந்த 22 வயது இளம்பெண்ணுடன் நட்பு ஏற்பட்டது. பின்னர் இவர்களது நட்பு காதலாக மலர்ந்தது.

இருவரும் பெற்றோருக்கு தெரியாமல் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். அதன்படி கடந்த 15ம் தேதி இரவு, இளம்பெண்ணுக்கு போன் செய்துள்ளார் தாதா பீர். அதை நம்பிய இளம்பெண்ணும் யாருக்கும் தெரியாமல் புறப்பட்டார்.

நகை, பணத்துடன் மகள் திடீரென மாயமானதால் பெற்றோர் மதனப்பள்ளி போலீசில் மறுநாள் புகார் கொடுத்தனர். அதில், ‘தாதா பீர் எங்களது மகளை ஆசைவார்த்தை கூறி கடத்திச்சென்றிருக்கலாம்’ என தெரிவித்திருந்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் தேடிவந்தனர்.

இதற்கிடையே இளம்பெண்ணை திருப்பதிக்கு அழைத்துச்சென்ற தாதா பீர், அங்குள்ள ஒரு தனியார் லாட்ஜில் 2 நாள் தங்க வைத்துள்ளார்.பின்னர், ‘வேறு மாநிலத்திற்கு சென்றுவிட்டால் நாம் யாருக்கும் பயமின்றி நிம்மதியாக வாழலாம்’ எனக்கூறி இளம்பெண்ணை டெல்லிக்கு அழைத்துச்சென்றுள்ளார்.

அங்கு, ஜி.வி. சாலையில் உள்ள சிவப்பு விளக்கு பகுதியில், ஒரு விபச்சார புரோக்கரிடம், தான் அழைத்துச் சென்ற இளம்பெண்ணை விற்க பேரம் பேசியுள்ளார்.

இதையறிந்து அதிர்ச்சியடைந்த இளம்பெண், அங்கிருந்து தப்ப முயன்றார். ஆனால் விபச்சார கும்பலிடம் சிக்கிய இளம்பெண்ணை தாதா பீர், தூக்கிச்சென்று ஒரு அறையில் அடைத்துள்ளார்.

3 நாட்களுக்கு பிறகு அந்த அறைக்குள் சென்ற தாதா பீர், ‘2 ஆண்டுகள் விபச்சார தொழில் செய்தால், அதிக பணம் சம்பாதிக்கலாம். அதை வைத்து நாம் சொந்த ஊர் சென்று நிம்மதியாக வாழலாம்’ எனக்கூறியுள்ளார். இதற்கு சம்மதிக்காத இளம்பெண்ணை தாதா பீர் அடித்து உதைத்து சித்ரவதை செய்ததாகவும் கூறப்படுகிறது.

இதனிடையே அந்த அறையில் இருந்து தப்பிய இளம்பெண், கடந்த 28ம்தேதி சொந்த ஊர் வந்தார். தனக்கு நேர்ந்த கொடுமையை பெற்றோரிடம் கூறி கதறி அழுதார். இதுதொடர்பாக அன்றிரவு மதனப்பள்ளி போலீசில் இளம்பெண் புகார் செய்தார்.

போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் நேற்றிரவு டெல்லியில் இருந்து திரும்பிய தாதா பீர், அங்கல்லு பஸ் நிறுத்தத்தில் நின்றிருந்தபோது அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

No comments:

Post a Comment