சிறு வயது முதல் ஒன்றாக படித்து, ஒன்றாக வேலை செய்துவந்த தோழிகள் திடீரென தாலி கட்டி திருமணம் செய்துகொண்டது திருப்பதி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. அவர்களை சரமாரியாக அடித்து, உதைத்த பெற்றோர் வீட்டை பூட்டிக்கொண்டு வெளியூர் சென்றுவிட்டனர்.
ஆந்திர மாநிலம் திருப்பதி அடுத்த காத்தாயகுண்டா பகுதியை சேர்ந்த இளம்பெண்கள் பிரசன்னா (21), ஜீனா (25). ஆரம்பப்பள்ளியில் ஒன்றாக படிப்பை தொடங்கிய இருவரும் 10-ம் வகுப்பு வரை ஒன்றாகவே படித்துள்ளனர். பின்னர், படிப்பை நிறுத்திவிட்டு அங்குள்ள பால் டிப்போவில் வேலை செய்து வருகின்றனர்.
இருவரும் நெருங்கிய தோழிகள். எப்போதும் இணைபிரியாமல் இருப்பார்களாம். ஒன்றாகவே வேலைக்கு வருவார்கள். ஒன்றாகவே திரும்பி செல்வார்கள். வெளியில் போவதென்றாலும் சேர்ந்தே சென்று வருவார்கள். சமீபத்தில் ஒருநாள், அவர்கள் பேசும்போது, திருமணம் நடந்தால் வேறு வேறு இடங்களுக்கு செல்ல வேண்டி இருக்குமே என்று கூறி வருத்தப்பட்டுள்ளனர். வேறொருவரை திருமணம் செய்தால்தானே பிரிய வேண்டும். நாம் இருவருமே திருமணம் செய்துகொள்ளலாமே என்றும் பேசியிருக்கின்றனர்.
வீட்டில் இதுபற்றி பேசவும் முடிவெடுத்தனர். அப்பா, அம்மாவிடம் இதுபற்றி சொன்னார் பிரசன்னா. அவர்கள் விழுந்து விழுந்து சிரித்தனர். ஜோக் அடிக்கிறியா? என்று கேட்டு, அவர்கள் விட்டுவிட்டனர். ஜீனாவின் பெற்றோரும் இதை பெரிதுபடுத்தவில்லை. இதையடுத்து, மீண்டும் இருவரும் பேசினர். வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்தனர். நேற்று காலை இருவரும் வீட்டில் இருந்து யாருக்கும் தெரியாமல் வெளியேறினர்.
திருப்பதியில் உள்ள ஒரு கோயிலுக்கு சென்றனர். அங்கு மாலை மாற்றிக் கொண்டனர். பின்னர், பிரசன்னாவின் கழுத்தில் ஜீனா தாலி கட்டியுள்ளார். புதுமண தம்பதி முதலில் பிரசன்னாவின் வீட்டுக்கு சென்றனர். இருவரும் மாலையும், கழுத்துமாக வீட்டு வாசலில் நிற்பதை பார்த்து பிரசன்னாவின் அப்பா, அம்மா அதிர்ச்சி அடைந்தனர். தகவல் தெரிந்து அக்கம்பக்கத்தினர் திரண்டு வேடிக்கை பார்க்க கூடினர்.
அவமானமாக கருதிய பெற்றோர், நடு வாசலில் வைத்தே பிரசன்னாவை சரமாரியாக அடித்து, உதைத்தனர். பின்னர் அவரை வீட்டுக்குள் அடைத்தனர். ஜீனாவையும் அடித்து, உதைத்து அங்கிருந்து விரட்டியடித்துள்ளனர். வீட்டுக்கு வந்த ஜீனாவை அவரது அப்பா, அம்மாவும் அடித்துள்ளனர். உறவினர்கள், நண்பர்கள், அக்கம்பக்கத்தினர் இதுபற்றி மாறிமாறி விசாரித்ததால் வேதனை அடைந்த இரு வீட்டாரும் வீட்டை பூட்டிக்கொண்டு, மகள்களையும் அழைத்துக் கொண்டு வெளியூர் சென்றுவிட்டனர். நெருங்கிய பழகிய தோழிகள் திருமணம் செய்துகொண்டது திருப்பதி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
|
hii..
ReplyDeleteNice Post Great job.
Thanks for sharing.