புது வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்தவர் விஜய்(29). இவருக்கு சில நாட்களுக்கு முன்பு ஒரு செல்போனில் இருந்து போன் வந்தது. பேசிய பெண், தனது பெயர் அகிலா என்றும், தன்னை பற்றிய விபரங்கள் ‘முதலியார் மேரேஜஸ் டாட்காம்’ என்ற திருமண வெப்சைட்டில் பதிவு செய்திருப்பதாகவும், பார்த்து தெரிந்து கொண்டு பேசலாம் என்று கூறி இணைப்பை துண்டித்து விட்டார். விஜய், அந்த வெப்சைட்டை பார்த்தால், அகிலா பற்றிய விவரங்கள் இல்லை.
அந்த செல்போன் நம்பருக்கு போன் செய்து பேசினார். அதில் பேசிய பெண், “நீங்கள் வெப்சைட்டில் உறுப்பினரானால் பார்க்கலாம். முதலில் உறுப்பினர் ஆகுங்கள்’’ என்று கூறினார். அதன்படி உறுப்பினர் ஆனார். அதற்கு கட்டணமாக விஜய் வங்கி கணக்கில் இருந்து ரூ.2 ஆயிரம் எடுக்கப்பட்டது.
அப்படியும் அகிலாவின் விவரங்கள் எதுவும் வெப்சைட்டில் இல்லை. பிறகு விஜய் அதே செல்போன் நம்பருக்கு போன் செய்தால் சுவிட்ச் ஆப் என்று வந்தது.
பின்னர்தான் ஏமாந்து போனதை விஜய் உணர்ந்தார். இதுபற்றி மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். இவரை போல மேலும் 4 பேர் புகார் செய்திருந்தனர்.
துணை கமிஷனர் ராதிகா உத்தரவின் பேரில், கூடுதல் துணை கமிஷனர் டாக்டர் சுதாகர் தலைமையில் இன்ஸ்பெக்டர் அன்பரசன் தீவிர விசாரணை நடத்தினர்.
அந்த திருமண வெப்சைட் அலுவலகம் பாண்டிச்சேரியில் செயல்படுவது தெரிந்தது. கணவன் & மனைவியான வெங்கடேசன், சித்ரா நடத்தியுள்ளனர். போலீசார் இருவரிடமும் விசாரணை நடத்தினர். மோசடி செய்து பலரிடம் பணத்தை திருடியது தெரியவந்தது.
வெங்கடேசன் & சித்ரா ஆகியோரை நேற்று முன்தினம் போலீ சார் கைது செய்தனர்.
இந்த நூதன மோசடி குறித்து போலீசார் கூறியதாவது:
கணவன் & மனைவி இருவரும் ஏதாவது ஒரு திருமண வெப்சைட்டை பார்த்து, விண்ணப்பித்திருக்கும் ஆண்களின் செல்போன் எண்ணை எடுத்துக் கொள்வார்கள்.
அந்த செல்போன் எண்ணிற்கு சித்ரா போன் செய்து, “நீங்கள் பெண் தேடி விண்ணப்பித்திருந்ததை பார்த்தேன். என்னை பற்றிய விவரங்கள், முதலியார் மேரேஜஸ் டாட்காம் இணையதளத்தில் இருக்கிறது பாருங்கள்’’ என்று கூறுவார்.
அந்த வெப்சைட்டை ஓப்பன் செய்து பார்ப்பதற்காக ரூ.2 ஆயிரம் கட்டணமாக கட்ட வேண்டும் என்று கூறப்படும். அதன்படி அவர்களும் பணத்தை கட்டி பார்த்தால் போனில் பேசிய பெண் பற்றிய விவரங்கள் எதுவும் இருக்காது. செல்போன் நம்பருக்கு தொடர்பு கொண்டால் லைன் கிடைக்காது. இப்படி மோசடி செய்துள்ளனர்.
ஆனால், எங்களது வெப்சைட்டை பிரபலப்படுத்தவும், உறுப்பினர்களை அதிகரிக்கவும், வருமானத்தை பெருக்கவும் இதுபோன்ற மோசடியில் ஈடுபட்டதாக இருவரும் தெரிவிக்கின்றனர்.
|
No comments:
Post a Comment