சென்னை: ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி என்பது எவ்வளவு பெரிய தொகை. அதை ஒரே நபர் ஊழல் செய்தார் என்பது நம்பக் கூடியதா... விஞ்ஞானப்பூர்வமாக மட்டுமே சாத்தியமாகக் கூடிய விஷயம் இது, என்றார் முதல்வர் கருணாநிதி.
முதல்வர் கருணாநிதி கதை, திரைக்கதை, வசனம் எழுதியிருக்கும் புதிய படம், இளைஞன். இது, அவர் கதை-வசனம் எழுதியுள்ள 75-வது படம். இந்த படத்தில், கவிஞர் பா.விஜய் கதாநாயகனாக நடித்து இருக்கிறார். அவருக்கு ஜோடிகளாக மீரா ஜாஸ்மின், ரம்யா நம்பீசன் ஆகிய இருவரும் நடித்து இருக்கிறார்கள். சுரேஷ்கிருஷ்ணா
இயக்கியுள்ளார். மார்ட்டின் தயாரித்துள்ளார்.
பொங்கல் வெளியீடாக திரைக்கு வர இருக்கும் இந்த படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னை சத்யம் திரையரங்கில் நேற்று இரவு நடந்தது. பாடல்களை முதல்வர் கருணாநிதி வெளியிட, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பெற்றுக் கொண்டார்.
விழாவில், முதல்வர் கருணாநிதி பேசியது:
தமிழ்நாட்டில் ஏறத்தாழ பேசா படம் ஓடிய காலத்திலிருந்து கலைத்துறையில் நான் இருக்கிறேன். எங்கள் திருவாரூரில் ஒரு தியேட்டருக்குப் பெயரே கூட 'கருணாநிதி' தியேட்டர்தான். என் பெயரை வைக்கவில்லை-கருணாநிதி என்பது திருவாரூரிலே ஒரு சாமியாரின் பெயர். அங்கு தரையில் அமர்ந்து படம் பார்த்திருக்கிறேன். ஏனென்றால், பெஞ்சு டிக்கெட்டு வாங்க எனக்கு வசதியில்லை, வாய்ப்பில்லை என்றல்ல-தரையிலே உட்கார்ந்தால்தான் ஐந்தாறு பேராக நண்பர்களாக உட்கார்ந்து படம் பார்க்க முடியும் என்பதற்காக!
உடனே யாராவது, 'சினிமாவுக்கு டிக்கெட் வாங்கக்கூட வசதியில்லாத கருணாநிதி' என்று சொல்லக்கூடும். அவைகளையெல்லாம் நான் பெருமையாகத்தான் கருதுகிறேன்.
செல்வச் சீமான் வீட்டிலே பிறந்தேன், தங்கத் தாம்பாளத்தோடு தங்கத் தட்டிலே ஒரு வட்டோடு-தங்கக் கரண்டியோடு பிறந்தேன் நான் என்று சொல்லிக் கொள்ளவில்லை. ஏழையாகத்தான் பிறந்தேன், ஏழையாகத்தான் வாழ்ந்தேன், ஏழைகளோடுதான் நட்பு கொண்டேன், ஏழைகளுடைய வாழ்வுக்காத்தான் இன்றைக்கும் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறேன் என்பதுதான் எனக்குள்ள பெருமையெல்லாம்.
நான் ஏழையாக பிறக்காமல், பணக்காரனாக பிறந்திருந்தால், செல்வச் சீமான் வீட்டுப்பிள்ளையாக பிறந்திருந்தால், இப்படியெல்லாம் ஏழைகளைப் பற்றி கவலைப்பட தோன்றியிருக்குமா? அரிசி விலை இந்த அளவிற்குத்தான் இருக்க வேண்டும் என்று கூறியிருக்க முடியுமா? என்றெல்லாம் நான் எண்ணிப் பார்க்கின்றேன்.
தரையில் அமர்ந்து படம் பார்த்தால் முதல் காட்சிக்குத்தான் போக வேண்டும். இரண்டாவது காட்சிக்குப் போக முடியாது. ஏனென்றால், இரண்டாவது காட்சிக்கு போகும்போது, முதல் காட்சிக்கு வந்தவர்கள் துப்பிய வெற்றிலைப் பாக்கு எச்சில் அங்கே உருண்டை, உருண்டையாக கிடக்கும். நாம் தப்பித் தவறி கையை வைத்து தடவிப் பார்த்தால், யாரோ வாயிலே வெற்றிலை போட, நம்முடைய கையெல்லாம் சிவந்திருக்கும். எனவே, இரண்டாவது காட்சிக்கு போகிறவர்கள் ஜாக்கிரதையாக போக வேண்டும். அப்படிப்பட்ட தியேட்டர்களில் பேசா படம் பார்த்திருக்கிறேன்.
பகாசூரன் கதையும் 1.76 ஆயிரம் கோடி ஊழலும்...
பேசா படத்தில், திரைக்கு முன்னே படம் தெரிந்தால் கூட, நாம் அமர்ந்திருக்கின்ற இடத்திற்கு பின்னால் ஒருவன் கையிலே மெகாபோனை வைத்துக் கொண்டு, திரையில் என்ன நடக்கிறது என்று சொல்லிக்கொண்டே இருப்பான்.
'அதோ பார், பீமசேனன் வருகிறான், அதோ பார், பகாசூரன் வருகிறான், பீமசேனன் கீசகனை வதைக்கிறான்' என்பதை வர்ணித்துக் கொண்டே ஒருவன் இருப்பான்.
'பீமசேனனைப் பார், பகாசூரனைப் பார், பல்லுக்குப் பல் இருகாதம்; பல்லிடுக்கு முக்காதம்' -என்று வர்ணிப்பான். படம் பார்க்கின்ற யாருக்கும் 'பல்லுக்குப் பல் இருகாதம்' என்கின்றானே, எப்படி அது? காதம் என்றால் பத்து மைல் அல்லவா? இருகாதம் என்கிறபோது இருபது மைல் அல்லவா? பல்லுக்குப் பல் இருகாதம்; பல்லிடுக்கு முக்காதம் என்றால் முப்பதும் இருபதும் ஐம்பது மைல் அல்லவா? ஒரு பல்லுக்கும் இன்னொரு பல்லுக்கும் இடையே ஐம்பது மைல் அகலம் என்றால், வாய் எவ்வளவு அகலம் இருந்திருக்கும்? இப்படி ஒருவர் இருந்திருக்க முடியுமா-பகாசூரன் என்று? அன்றைக்கு யாரும் கேட்டதில்லை. இன்றைக்கு மட்டும் கேட்கிறார்களா என்ன?
ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரத்து முன்னூற்று ஐம்பத்திரண்டு கோடி ரூபாய் ஊழல் என்று சொன்னால், ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரத்து முன்னூற்று ஐம்பத்திரண்டு கோடி ரூபாய் என்று சொல்லும்போது, அது எவ்வளவு பெரிய தொகை, அந்த தொகையை ஒருவர் ஊழல் செய்திருக்க முடியுமா? யாராவது ஒருவர் அதை அபகரித்திருந்தால் இவ்வளவு பெரிய கணக்கை-ஒரு தாளிலே எழுதிக் காட்டினால், அதை எப்படி இன்றைக்கு நம்புகிறோமோ, படித்தவர்கள் நிறைந்த, அறிவு பரவியிருக்கிற, சட்டம் தெரிந்த, நாணயத்தின் மதிப்பை உணர்ந்த இந்தக் காலத்திலே கூட ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடி ரூபாய் என்றால் அதை நம்புகின்ற நாம்-அன்றைக்கு "பல்லுக்குப் பல் இருகாதம்; பல்லிடுக்கு முக்காதம்'' என்று அவனுடைய வாயே முப்பதாயிரம் மைல் என்று பகாசூரனை வதைத்தபோது, அதை ஆனந்தமாக கேட்டுக்கொண்டுதான் படத்தை பார்த்தோம். அப்படி படம் பார்த்த ஏமாளிகளிலே ஒருவனாக நான் அன்றைக்கு இருந்தேன்.
படம் பார்த்தவர்களுடைய ஏமாளித்தனம் அப்படி இருந்தது. எதை வேண்டுமானாலும் சொல்வார்கள். ஆனால், இன்றைக்கு ஒரு மனிதன் அந்த காரியத்தை செய்கிறான் என்றால், அவன் விஞ்ஞான ரீதியாகத்தான் செய்ய முடியும்.
எப்படி "எந்திரன்'' படத்திலே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒரு இரும்பு மனிதனாக -ரோபோவாக வந்து இந்த காரியங்களை செய்கிறாரோ, அதை போல, செய்ய முடியுமே தவிர தனியாக ஒரு மனிதன் அப்படி செய்ய முடியாது என்பதை அறிவுப்பூர்வமாக இன்றைக்கு உணருகிறோம், அதை காட்டுகிறோம்.
இந்த படத்தில் குஷ்பு நடிக்க முன்வந்ததற்காக அவருக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். பெரியார் படத்திலே மணியம்மையார் வேடத்திலே பார்த்து, இந்த படத்துக்கு தகுந்தவர் குஷ்புதான் என்று சொன்னேன். அவரும் அதை ஏற்றுக்கொண்டு, இந்தப்படத்திலே அவரை நடிக்க வைத்திருக்கிறார்கள். அவர்கள் சொன்னதைப்போல, ரஷ்ய நாட்டின் நாவலை முழுமையாகத் தழுவி அல்ல-பின்பற்றி அல்ல-அங்கொன்றும் இங்கொன்றுமாக அந்தக் கதையில் வருகின்ற முக்கியமான கட்டங்களையெல்லாம் கொஞ்சமும் விடாமல் இந்தப் படத்திலே இணைத்து வசனம் எழுதியிருக்கின்றேன்.
சொல்லி தொலைக்க வேண்டியுள்ளது!
நான் பல கூட்டங்களில் பேசியிருக்கிறேன். பெரியாரை, அண்ணாவை, என்னுடைய இளமைக் காலத்திலே சந்திக்காமல் இருந்திருந்தால், நான் ஒரு கம்யூனிஸ்ட் ஆக இருந்திருப்பேன் என்று சொல்லியிருக்கின்றேன். அதற்கு ஏற்ப, இந்தப் படத்தில் நான் என்ன கருதுகின்றேனோ, அவைகளெல்லாம் உரையாடல்களாக வந்திருக்கின்றது. ஆனால், அரசியல் வாடை வீசக்கூடிய உரையாடல்களாக அல்ல -தொழிலாளர்களுடைய உணர்வுகளை - பாட்டாளி மக்களுடைய உணர்வுகளை வெளிப்படுத்துகின்ற -அவர்களுடைய கஷ்டங்களை வெளிப்படுத்துகின்ற, உணர்த்துகின்ற கட்டங்களாக இந்தப் படத்திலே அவைகளையெல்லாம் சுட்டிக் காட்டியிருக்கிறேன்.
அப்படிப்பட்ட படத்தை இங்கே உங்களுக்கு இந்த நிறுவனத்தின் சார்பாக நான் வழங்குகிற நேரத்தில், இதை வசூலுக்காக-பணம் சம்பாதிப்பதற்காக ஒருவேளை மார்ட்டினும் பெஞ்சமினும் அப்படிக் கருதியிருந்தாலும்கூட-என்னைப் பொறுத்தவரையில், சம்பாதிப்பதற்காக அல்ல. ஏனென்றால், அவர்கள் கொடுத்த பணத்தை உடனடியாக கட்ட வேண்டிய வருமான வரியைக் கட்டிவிட்டு, மீதியை முழுவதும் நான் நன்கொடையாகவே தந்துவிட்டேன் என்பதையும் நீங்களெல்லாம் நன்றாக அறிவீர்கள்.
அதை நான் இங்கே சொல்ல வேண்டிய அவசியமில்லை. என்ன செய்வது? காலத்தின் கட்டாயம். இதையெல்லாம் சொல்லித் தொலைக்க வேண்டியிருக்கிறது. ஆகவே, சொல்லியிருக்கிறேன்.
ஒரு கை கொடுப்பதை மறு கை அறியாமல் தரும் ரஜினி!
ரஜினிகாந்த் சொல்ல வேண்டிய அவசியமில்லை. ஏனென்றால், யாரும் அவரை, அவருக்கு கொடுத்த பணத்தை யாருக்குக் கொடுத்தார் என்று யாரும் கேட்க மாட்டார்கள். அவர் கொடுப்பார். இரண்டு கைகளுக்கும் இடையே, ஒரு கையால் கொடுத்ததை இன்னொரு கை அறியாமல் அவர் கொடுப்பது எனக்குத் தெரியும்.
என்னை பொறுத்த வரையில், ஒரு அரசியல் வாதியாக, ஒரு கட்சித் தலைவனாக இருக்கின்ற காரணத்தால், எனக்கு வருகிற பணம், படத்திலே வருகின்ற பணம் இவைகளெல்லாம் என்னுடைய குடும்பத்திற்கு நேரடியாக தரப்படுகிறது என்ற பொருள் அல்ல.
என்னுடைய குடும்பத்தினர் வாழ்வதற்கு இன்று நேற்றல்ல, நான் சேலம் மாடர்ன் தியேட்டரில் நம்முடைய வாலி சொன்னதைப்போல, படத்துக்குக் கதை எழுதினேனே, அந்தக் காலத்திலிருந்து இந்தக் காலம் வரையில் 75 படங்கள் எழுதி, ஒவ்வொரு படத்திற்கும் குறைந்த பட்சம் அந்தக் காலத்திலேயே - பராசக்தி வந்த காலத்திலேயே பத்தாயிரம் ரூபாய் எனக்கு ஊதியம் கொடுத்தார்கள்.
அதற்குப் பிறகு எனக்கும் சிவாஜிக்கும் சேர்ந்தாற்போல திரும்பிப்பார் படத்திற்காக அவருக்கு இருபதாயிரம் ரூபாய், எனக்கு இருபதாயிரம் ரூபாய் - என்ன வேடிக்கை பாருங்கள். நடிகர் திலகம் சிவாஜிக்கு இருபதாயிரம் ரூபாய் - எனக்கு இருபதாயிரம் ரூபாய் அந்தக் காலத்திலே கொடுத்தார்கள். அந்த இருபதாயிரம் ரூபாயைக் கொண்டுபோய் சூரக்கோட்டையிலே அவர் நிலம் வாங்கினார் - நான் காட்டூரிலே நிலம் வாங்கினேன். அந்த நிலங்கள் அப்படியே இருக்கின்றன. அதைப் பார்க்கின்ற பொழுது இப்போதும் எனக்கு சிவாஜியின் ஞாபகம் வரும்.
எப்படி என்னுடைய பராசக்தி படத்தில் -சிவாஜிக்கு அது முதல் படமாக இருந்து, அவர் பெயரும் புகழும் பெற்றாரோ-எப்படி எம்.ஜி.ஆர். என்னுடைய ராஜகுமாரி படத்திலே நடித்துப் பெயரும் புகழும் பெற்றாரோ-அதைப்போல, தம்பி விஜய்யைப் பொருத்த வரையில் இது அவருக்குப் பெயரும் புகழும், நடிகர் திலகம் சிவாஜியைப்போல, புரட்சி நடிகர் எம்.ஜி.ஆரைப் போல பெயரும் புகழும் அவருக்குத் தரும்..." என்றார் கருணாநிதி
|
No comments:
Post a Comment