போதை உள்ளே போய்விட்டால் சிந்திக்கும் திறன் பறந்து விடும். என்ன செய்கிறோம் என்பதும் தெரியாது. அதனால் வரும் பாதிப்புகளும் தெரியாது. போதை மயக்கத்தில் ஒருவர் காலை மிதித்துள்ளனர் 2 வாலிபர்கள். மிதிபட்டவர் ஆபாசமாக திட்ட, அவரை அடித்து, மிதித்து வாயில் மணலை திணித்து கொன்றுவிட்டனர். அதோடு, பீச் மணலில் அவரை புதைக்கவும் செய்திருக்கிறார்கள். தகவல் தெரிந்து அங்கு வந்த போலீசார், வாலிபர்கள் இருவரையும் பிடித்தனர்.
பிடிபட்ட இருவரில் ஒருவர் இன்ஜினியரிங் படித்தவர். சென்னை தாம்பரம் அடுத்த சிட்லப்பாக்கம் பகுதியில் பிரபு, ரத்தீஸ் ஆகியோர் தங்கி கட்டிட வேலை பார்த்து வந்தனர். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் கூலி பணத்தை வாங்கி கொண்டு பட்டினப்பாக்கத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்தியுள்ளனர். பின்னர், மதுபாட்டில்களுடன் மெரினா கடற்கரைக்கு சென்று அங்கும் குடித்துள்ளனர். இரவாகி விட்டது. மீண்டும் மது வாங்கி வந்து கலங்கரை விளக்கம் அருகே குடித்துள்ளனர். கடற்கரை மணலில் தூங்குவதற்கு நடந்து சென்று உள்ளனர். மணலில் படுத்திருந்த ஒருவரை போதையில் சென்ற வாலிபர் மிதித்துவிட்டார்.
பதறி எழுந்த அவர், அவர்களை ஆபாசமாக திட்டி உள்ளார். அவரை அடித்து உதைத்துள்ளனர் வாலிபர்கள். காப்பாற்றும்படி அவர் கூச்சல் போட்டிருக்கிறார். சத்தம் கேட்டு யாரும் வந்துவிட கூடாது என்று பயந்து அவரது வாயில் மணலை திணித்துள்ளனர். இதனால் பேச்சு மூச்சற்று அவர் இறந்துவிட்டார். உடனடியாக அதே பகுதியில் மணலை தோண்டி புதைத்துள்ளனர்.
அப்போது அங்கு வந்த சிறுவன், இதை பார்த்து விட்டு ஓடி சென்று தொலைவில் இருந்த போலீஸ்காரர் ஒருவரிடம் கூறியிருக்கிறான். போலீசார் விரைந்து வந்து வாலிபர்களை மடக்கி பிடித்தனர். வாலிபர்கள் இருவரையும் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். பிரபு என்பவர் இன்ஜினியரிங் படித்தவர் என்பதும் அடுக்குமாடி குடியிருப்பில் மேஸ்திரியாக வேலை பார்த்ததும் தெரிய வந்தது. ஒருவர் காலை மிதித்து விட்டால் மன்னிப்பு கேட்போம்.
திட்டினால் கூட அதான் சாரி கேட்டுட்டேனே.. ஏன் திட்டுகிறீர்கள்? என சமாதானமாக பேசுவோம். போதையில் இருந்தால் அப்படி பேச தோணாது. நம்மளையே திட்டுகிறானே என்றுதான் நினைக்க தோன்றும். ஆத்திரம் ஏற்படும். ஆத்திரத்தில் அறிவிழந்து தாக்குதலில் ஈடுபட தோன்றும். அப்படிதான் செய்திருக்கிறார்கள் அந்த இளைஞர்கள். வாழ வேண்டிய வயதில் போதை மயக்கத்தில் கொலைகாரர்களாகி விட்டார்கள்.
|
No comments:
Post a Comment