Tuesday, December 13, 2011

நாகர்கோவிலில் நேற்று மனைவியுடன் பிறந்த நாள் கொண்டாடிய 104 வயது தாத்தா:

உடல் நலக்குறைவுக்காக ஒரு போதும் ஆஸ்பத்திரிக்கு சென்றதில்லை என உறவினர்கள் பெருமிதம்

 கணவன்- மனைவி இடையே பாச பிணைப்பு இருந்தால் 100 ஆண்டுகளை தாண்டினாலும் இளமை யோடு வாழலாம் என்பதை நிரூபித்து இருக்கிறார்கள் வடசேரியைச் சேர்ந்த ராமன்ஆசாரி- வள்ளி யம்மாள் தம்பதி. நாகர்கோவில் வடசேரி யைச் சேர்ந்த ராமன்ஆசாரி மர வேலைகள் செய்து வருகிறார். இவரது மனைவி வள்ளியம்மாள். 

கணவருக்கு உதவியாக இருக்கிறார். ராமன்ஆசாரிக்கு 5 மகன்களும், 3 மகள்களும் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி விட்டது. ஆனால் ராமன்ஆசாரியும், வள்ளியம்மாளும் இன்றும் அந்த பகுதியில் இணை பிரியாத தம்பதிகளாக வலம் வருகி றார்கள். ராமன்ஆசாரிக்கு நேற்று 104 வயது பிறந்தது. இதை சிறப்பாக கொண்டாட அவரது கொள்ளுபேரன்கள் முடிவு செய்தனர். 

இதையடுத்து வடசேரியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் இன்று பிறந்த நாள் கொண்டாட்டம் நடந்தது. இதில் பிரமாண்ட கேக் செய்து வைக்கப்பட்டிருந்தது. ராமன் ஆசாரி கேக் வெட்டி அதனை அன்பு மனைவிக்கு ஆசையுடன் ஊட்டினார். உறவுகளும், சொந்தங்களும், இதைப்பார்த்து மகிழ்ந்தனர். இது போன்ற வாழ்க்கையை தாங்களும் வாழ்ந்திட அவரிடம் வாழ்த்து பெற்றனர்.

இது பற்றி ராமன்ஆசாரியின் மகன் கூறும் போது, எங்களின் தந்தை இதுவரை பல விபத்துக்களில் சிக்கி உயிர் பிழைத்து உள்ளார். மோட்டார் சைக்கிள், பஸ், ரெயில் விபத்தில் கூட சிக்கி இருக்கிறார். இதற்காக மட்டும் ஒரிருநாள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுள்ளார். ஆனால் உடல் நலக்குறைவுக்காக ஒரு நாள் கூட அவர் ஆஸ்பத்திரிக்கு சென்றதில்லை. மூலிகை மருந்து தான் அவரது உடல் நலனுக்கு காரணம். 

தனது உடல் சோர்வுக்கு மூலிகை மருந்துகளையே பயன்படுத்துவார். அதையும் அவரே தேடி கண்டு பிடித்து மருந்தாக்கி அருந்துவார். அவரது வாழ்க்கை எங்களுக்கு உதாரணம். அது எதிர்கால சந்ததிக்கும் தெரிய வேண்டும் என்று விரும்பியதால் இந்த விழாவை எடுத்தோம். இதில் தந்தையின் கொள்ளு பேரன்கள் பேத்திகள் குடும்பத்துடன் கலந்து கொண்டு அவரிடம் வாழ்த்து பெற்றோம் என்றார். 

இன்றைய விஞ்ஞான உலகில் ஒவ்வொருவரின் வாழும் காலம் குறைந்து கொண்டே வருகிறது. இதில் பழைய பழக்க வழக்கங்களையும், மூலிகை மருந்து களையும் பயன்படுத்தி இன்னும் சிலர் இது போல வாழ்க்கையை வென்றெடுத்து நீண்ட நாள் வாழ்வது இளைய தலைமுறைக்கு பிரமிப்பூட்டும் நிகழ்வுதான். இதை அனைவரும் பின்பற்றினால் வாழ்க்கை இனிப்பாகும். இதை எடுத்து சொல்ல இந்த குடும்பத்தினர் இன்று அப்பகுதி மக்கள் அனை வருக்கும் அன்னதானமும் வழங்கி மகிழ்ந்தனர். 


No comments:

Post a Comment