Tuesday, December 13, 2011

டீன்-ஏஜ் பருவம்.. புரிந்து கொள்வோமா இந்த புதிர் உலகத்தை!

'அது ஒரு புரியாத வயது' என்று மிகச் சாதாரணமாக சொல்லி விடுவது நம்மில் பலருக்கும் வழக்கமாகி விட்டது. அதுதான் புரியாத வயதா.. இல்லை, அந்த வயதுப் பிள்ளைகளின் உணர்வுகள், உருக்கங்கள், கனவுகள், கவலைகள்.. இவற்றையெல்லாம் பெற்றவர்களாகிய நாம்தான் புரிந்து கொள்வதில்லையா? நாம் ஒவ்வொருவருமே நமக்குள் கேட்டுக் கொள்ள வேண்டிய கேள்வி இது!

'திடீரென்று இப்போதென்ன இப்படி ஒரு கேள்வி' என்கிறீர்களா? மீடியாக்களில் ஃப்ளாஷ் செய்யப்படுகிற பல அதிர்ச்சி செய்திகளும், பெற்றோரின் காதுகளுக்கு மட்டுமே வருகிற சில திடுக் செய்திகளும் டீன்-ஏஜ் பிள்ளைகள் பெரும் குழப்பத்தில் இருப்பதைச் சொல்கின்றன.

'ஆசிரியை திட்டியதால் 15 வயது மாணவி தற்கொலை', 'தந்தை திட்டியதால் காணாமல் போன பள்ளி மாணவன்' போன்ற செய்திகள், செய்தித் தாள்களின் தலைப்புச் செய்திகளாக அல்ல.. பெட்டிச் செய்திகளாக இடம் பெறும் அளவுக்கு சாதாரணமாகி விட்டன.
'கொல்லவும் துணிந்ததே பிள்ளை மனது' என்ற தலைப்பில் சென்ற 'அவள் விகடன்' இதழில் நாம் அலசியிருந்த செய்தியின் (புதுடெல்லி அருகே உள்ள குர்கான் பகுதியில் எட்டாம் வகுப்பு படிக்கிற மாணவர்கள் இருவர், தங்கள் வகுப்பு நண்பனை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார்கள் என்ற செய்தியின்) ஈரம் காய்வதற்குள்ளேயே அடுத்த பள்ளிக்கூட கொலை நிகழ்ந்திருக்கிறது. மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவன் ஒருவன், அதே பள்ளியில் படிக்கும் எட்டாம் வகுப்பு மாணவனை சுட்டுக் கொன்றிருக்கிறான். இந்த பள்ளிப் பருவ வன்முறை நம் ஊர் வரை வந்து விடுமோ என்கிற பீதி, நம் ஒவ்வொருவருக்குமே உள்ளுக்குள் எழாமல் இல்லை.

இவற்றோடு, நம் வாசகிகள் பலரும் தொடர்ந்து நமக்கு எழுதும் கடிதங்கள் பலவும் நம்மை அந்த வளர் இளம் பருவத்தினர் மீது தனி அக்கறை கொள்ள வைக்கின்றன.

'என் பொண்ணு சின்ன வயசுல ரொம்ப சமர்த்து.. குறும்பு பண்ணாம சொல்ற பேச்சைக் கேப்பா.. சுறு சுறுப்பாவும் இருப்பா. ஆனா, இப்போ.. பத்தாவது படிக்கிற இந்த முக்கியமான பருவத்துல அவ நடந்துக்குற விதம் கொஞ்சம்கூட சரியில்லை' என்ற ரீதியில் பல அம்மாக்களின் பொருமல்கள், நமக்கு கடிதங்களாக வந்து சேருகின்றன. 'எதுக்கெடுத்தாலும் கோபம், எரிச்சல்.. ரொம்ப எதிர்த்துப் பேசுறா' என்று அவர்கள் சொல்லும் புகார்களின் பட்டியல் நீளுகிறது.

ஆனால், சமீபத்தில் ஒரு பள்ளி மாணவி நம்மிடம் பகிர்ந்து கொண்ட உணர்வு வேறு மாதிரியாக இருந்தது..

''எங்க அம்மா, அவங்க சொல்றதை நான் கேக்கறது இல்லைனு எல்லார்கிட்டயும் சொல்லி கவலைப் படுறாங்க. ஆனா, அவங்க நான் சொல்றதை கவனிக்கக்கூட மாட்டேங்கறாங்களே!''

 ஒட்டு மொத்த டீன்--ஏஜ் பருவத்தினரின் ஆதங்கமாக வெளிப்பட்ட இந்த வார்த்தைகளை நாம் அலட்சியம் செய்து விட முடியாது!

பதினொன்றாம் வகுப்பு படிக்கிற ஒரு மாணவியின் தந்தை சமீபத்தில் நம் தொலைபேசி லைனுக்கு வந்தார். அவர் விவரித்த சம்பவத்தில் ஆடிப்போய் விட்டோம். இதுதான் அந்த சம்பவம்..

''என் பொண்ணு ரொம்ப நாளா அவ ஃப்ரெண்ட் ஒருத்தியைப் பத்தி சொல்லிக்கிட்டே இருந்தா. அவ பேரு கூட ஏதோ.. அனிதாவோ.. அம்பிகாவோ! அதை நான் சரியா கவனிச்சதுகூட இல்லை. 'அவ ரொம்பப் பாவம்.. அவங்க அப்பாவும் அம்மாவும் பிரிஞ்சு வாழுறாங்க.. அவங்க பாட்டி ரொம்ப அடிப்பாங்களாம்.. இன்னிக்கு கிளாஸ்ல மிஸ் திட்டினதுக்கு ரொம்ப அழுதா'னு தினமும் என்கிட்ட எதையாவது சொல்லுவா என் பொண்ணு.

சரி, சின்னப் பசங்க.. சின்னச் சின்ன விஷயத்தை எல்லாம் பெரிசா சொல்லிக்-கிட்டிருப்பாங்கனு நான் அதையெல்லாம் கண்டுக்கவே மாட்டேன். திடீர்னு ஒரு வாரமா அவளைப் பத்திப் பேசுறதையே என் பொண்ணு நிறுத்திட்டா. நானேதான் ஒரு நாள் ஸ்கூலுக்குக் கூட்டிட்டுப் போகும்போது 'உன் ஃப்ரெண்டு எப்படி இருக்கா?'னு கேட்டேன். 'போன வாரம் அவ தற்கொலை பண்ணிக்கிட்டா'னு சொன்னா பாருங்க.. அதிர்ந்து போய்ட்டேன்.



அவ ஃப்ரெண்டைப் பத்தி நிறையச் சொன்னாளே.. அப்பவே அதைக் கொஞ்சம் கவனிச்சு, அதுக்காக நான் ஏதாவது செஞ்சிருந்தா, அந்தப் பொண்ணை காப்பாத்தி இருக்கலாமோனு இப்போ மனசு கிடந்து அடிச்சுக்குது.



சின்னக் குழந்தைங்கனு நினைக்கிறோம். ஆனா, வளர்ந்தப்பறமும் அவங்களை சின்ன குழந்தைகளாவே ட்ரீட் பண்றதுல இவ்வளவு பெரிய ஆபத்து இருக்குனு எனக்குத் தெரியாதுங்க. இப்போல்லாம் என் பொண்ணைத் திட்டுறதுக்கோ, அதட்டுறதுக்கோ.. ஏன், ஏதாவது தப்பா பேசிடுவேனோங்கற பயத்துல அவகிட்ட பேசுறதுக்கே கூட யோசனையா இருக்கு..'' என்று தன் பயத்தை பதற்றத்தோடு நம்மிடம் பகிர்ந்து கொண்டார் அந்தப் பொறுப்பான தந்தை.



''ஆனால், டீன்-ஏஜ் பிள்ளைகளைப் பார்த்து பயப்பட வேண்டியதில்லை.. கடுமை காட்டி மிரட்டவும் அவசியமில்லை.. அவர்களை அவர்களாகவே ஏற்றுக் கொள்வதும், அவர்களின் மனதில் இருக்கும் கேள்வி களுக்கு நாம் தெளிவான பதிலைத் தருவதுமே போதும்!'' என்பது சென்னையைச் சேர்ந்த நம் நெடுநாள் வாசகி அருணாவின் கருத்து.



தன் மகள்கள் இருவரிடமும் அம்மா என்ற எல்லை தாண்டி, ஒரு தோழியாகப் பழகுபவர் அவர். ஒரு நாள் பிள்ளைகள் முன்னிலையிலேயே அவர் தன் அம்மாவிடம் போனில் பேசிக் கொண்டிருந்திருக்கிறார். சமீபத்தில் திருமணமான அவர்களின் உறவுக்காரப் பெண் பற்றித்தான் பேச்சு.



''கல்யாணமான ஒரே மாசத்துல புருஷன்காரன் ஃபாரின் கிளம்பிப் போயிட்டான். பாவம் அந்தப் பொண்ணு..'' என்று அவர் பேசும்போதே, அவர் இளைய மகளும் அவள் தோழியும் வெட்கப்பட்டு சிரித்திருக்கிறார்கள்.



''இப்போ அவ எய்த் படிக்கிறா. இதுவே அவ நாலாங் கிளாஸ் படிக்கும்போது இதை நான் சொல்லி இருந்தா கவனிச்சிருக்கவே மாட்டா. கவனிச்சிருந்தாலும் புரியாது. ஆனா, இப்போ புரியுது. தனக்குப் புதுசா ஒரு விஷயம் புரிஞ்சுடுச்சுங்கற மிதப்பு அவ கண்ல தெரியுது. இந்த உலகத்துல இந்த மாதிரியான விஷயங்களை ஏதோ தாங்களே ஆராய்ச்சி பண்ணி கண்டுபிடிச்சிட்டதா இந்த வயசுப் பிள்ளைங்க நினைச்சுக்கிறாங்க. ஆனா, உலகத்துலயே ரொம்பப் பழைய விஷயம் இதுதான்ங்கிறது அவங்களுக்குத் தெரியறதில்ல'' என்று நகைச்சுவையோடு அந்தச் சம்பவத்தை எடுத்துரைத்த அந்த வாசகி, அதன் பிறகு தன் மகளுக்கு மட்டுமில்லாமல் அவள் தோழிக்கும் சேர்த்து பாலியல் ரீதீயிலான விளக்கங்கள் கொடுத்திருக்கிறார்.



'' 'மாமனார் மாலை போட்டிருக்கார்.. சுத்தபத்தமா இருக்கணும்', 'ரெண்டு குழந்தை ஆச்சே.. ஆபரேஷன் பண்ணிக்கக் கூடாதா?'னு நாம சாதாரணமா கேக்குற கேள்விகள்லயே உள் அர்த்தமா செக்ஸ் இருக்கு. அதுக்கெல்லாம் நாம கிண்டலா சிரிக்கிறதில்ல. ஏன்னா, அது நமக்குப் பழகிப் போச்சு. வாழ்க்கையில அது ஒரு அங்கம்னு புரியுது. ஆனா, சின்னப் பசங்களுக்குப் புரியாது. அது ஒரு பெரிய விஷயமா தோணும். அதுவேதான் மனசுக்குள்ள ஓடும். என் பொண்ணுகிட்டயே அந்தத் தடுமாற்றத்தை என்னால பார்க்க முடியுது. போன வருஷ எக்ஸாமுக்கும் இந்த வருஷ எக்ஸாமுக்கும் ஏழெட்டு மார்க்காவது வித்தி யாசம் இருக்கு. ஆனா, அவ கிளாஸ்ல எல்லாருக்குமே இதே தடுமாற்றம் இருக்குறதால ரேங்க்ல வித்தியாசம் இல்ல'' என்று நம் வாசகி பேசப் பேச ஆச்சர்யம் நம்மை ஆக்கிரமித்தது. தன் பிள்ளையைப் பற்றி ஒரு பிஹெச்.டி-யே செய்து வைத்திருக்கிறார் அந்த புத்திசாலித் தாய்.



''என் பொண்ணுக்கும் அவ ஃப்ரெண்டுக்கும் செக்ஸ்னா என்ன.. அது எவ்வளவு இயல்பான விஷயம்னு நான் மட்டும் புரிய வைக்கலைன்னா.. அதுவேதான் அவங்களுக்கு உலகமா ஆகி இருக்கும். ஒரு கட்டத்துல யாராவது ஒரு பையனைப் பத்தின நினைவுகள் அவங்க மனசை அலைக்கழிக்கும். அப்போ அவனேதான் உலகமா தெரிவான். இந்த சமயத்துலதான் பொண்ணுங்க சின்ன வயசுலயே காதல் கீதல்னு போய், கடைசியில தப்பான முடிவுகள்ல விழுறாங்க. 'இதெல்லாம் சின்ன விஷயம்.. போகப் போக சரியாயிடும்'னு நமக்குத் தெரியும். ஆனா, அதுக்குள்ள நம்ம பிள்ளைங்க பெருசா எதுவும் முடிவெடுத் துடாம பார்த்துக்க வேண்டியது நம்ம கடமை இல்லையா?'' என்ற அவரின் கேள்வி அர்த்தமுள்ளது.



ஆம்! குழந்தையாகவும் இல்லாமல் இளைஞியாகவும் (இளைஞனாகவும்) இல்லாமல் இடைப்பட்ட பருவத்தில் நின்று கொண்டிருக்கிற நம் குழந்தைகளின் மனதில் ஆயிரம் கேள்விகள் இருக்கின்றன. பெற்றோர், ஆசிரியர், நண்பர்கள் என்று யாருமே தங்களை சரியாகப் புரிந்து கொள்வதே இல்லை என்கிற வருத்தங்கள் இருக்கின்றன. அவர்களின் குழப்பங்களைப் போக்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது.



அவர்கள் பற்றிய உங்கள் சந்தேகங்களை.. சொல்லத் தயங்கும் உண்மைகளை.. பகிர யோசிக்கும் அனுபவங் களை.. உங்கள் தொலைபேசி எண்ணுடன் உங்கள் குடும்பத்தின் தலைமகளாம் 'அவள் விகடனுக்கு' எழுதுங்கள்.



'நான் இந்த மாதிரியான ஒரு பிரச்னையை இப்படி அணுகி வெற்றி கண்டேன்' என்று உங்கள் பிள்ளையை ஏதேனும் சிக்கலில் இருந்து விடுவித்த அனுபவம் இருந்தால்.. அதையும் அனுப்புங்கள். நீங்கள் பயணித்த பாதை.. அது தந்த வெற்றி.. வேறு பல பெற்றோருக்கு வேறு மாதிரியான தெளிவைத் தரலாம் அல்லவா? அந்த வழிமுறையைத் தங்கள் குழந்தையின் இயல்புக்கு ஏற்ற வகையில் அவர்கள் உபயோகிக்கலாம் அல்லவா? அல்லது, 'நம் குழந்தை சரியாகத்தான் இருக்கிறது.. தவறு மொத்தமும் நம் மீதுதான்' என்பதை உணர்ந்து, ஒரு தெளிவுக்கு வரவும் அவர்களால் முடியுமே!



எழுதுங்கள்.. கை கோர்த்து கை கொடுப்போம் நம் கண்மணிகளுக்கு!



நன்றி: ஜி.ஆர்.டி. மகாலட்சுமி வித்யாலயா, சென்னை

- படம்: ம.அமுதன்

(புகைப்படத்தில் இருப்பவர்கள் மாடல்களே!)

No comments:

Post a Comment