டிஜிட்டல் விபச்சாரம்! அதிர்ச்சித் தகவல்!! எச்சரிக்கை ரிப்போர்ட்
சில மாதங்களுக்கு முன்னால் மீண்டும் படுத்து விட்ட சர்க்குலேஷனை உயர்த்த - பத்திரிகை அலுவலகத்தில் மீண்டும் ஒரு மீட்டிங் போட்டார்கள். "பாலியல் சம்பந்தமான மருத்துவ கேள்வி-பதில்கள் போடலாமே" என்கிற யோசனை முன் வைக்கப்பட்டது. பேருக்கு தான் அவை மருத்துவ கேள்வி-பதில்கள். வாசித்தால் தெரியும் அதிலிருப்பது பாலுறவு கதைகள். அதற்கான படங்களை தேர்வு செய்யும் போது பார்க்க வேண்டுமே."மார்பக புற்றுநோய்" குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு - ஒரு நடிகையின் முக்கால்வாசி மார்பு தெரியும் படம். வாசகர்களுக்கு மார்பு என்றால் எங்கே இருக்கிறது என்று தெரியாதில்லையா? அதனால் தான் அவ்வளவு பெரிய படம் - வண்ணத்தில்.கேள்வி கேட்ட சகோதரிக்கு அந்த பக்கத்தை விரித்து வைத்து வாசிக்க இயலாது - அந்த அளவுக்கு அருவருக்கத்தக்க படம்.
"அதெல்லாம் வேணாம் சார். நடிகைகளின் கதைகள் போட்டு ரெம்ப நாளாச்சு.. போட்டி பத்திரிகையாளர்கள் - ஹீரோக்களின் தொடர் போட்டு தான் கல்லா கட்டுறாங்க. நாம ஹீரோயின்களின் கதை போடுவோம்" என்று நாக்கை தொங்கப்போட்டு சொன்னதும் - பத்திரிகை தலைமை "ஹீரோயின்களின் கதை"யை போடுவது என்கிற சமூகத்திற்கு சேவையாக அமையக்கூடிய மிக உன்னதமான முடிவை எடுத்தது.
நிச்சயம் விற்பனை உயர்ந்திருக்க வேண்டும். இணையத்திலேயே - பல தளங்களில் ஹீரோயினிகளின் கதை - COPY -> PASTE செய்யப்பட்டுள்ளது. அரசாங்கம் வருமானம் வருகிறது என்கிற ஒரே நோக்கத்துக்காக டாஸ்மாக் கடைகள் திறப்பதற்கும், பத்திரிகை விற்பனையை அதிகரிக்க, வருமானத்தை பெருக்க இம்மாதிரியான வக்கிர கதைகளை வெளியிடுவதற்கும் என்ன வித்தியாசம் உள்ளது.
டாஸ்மாக்கால் உடம்பு கெடுகிறது என்றால், இம்மாதிரியான வக்ர கதைகளை வாசிப்பதனால் - உடம்பும், மனசும் பாழாய் போகிறது. போதை வஸ்துகளை உபயோகிக்க பதினெட்டு வயது என்று பெயரளவுக்கேனும் ஒரு சட்டம் உள்ளது. இம்மாதிரியான பாலுறவு கதைகளை தாங்கி வரும் பத்திரிகைகள் - பல்வேறு செய்திகளையும் தாங்கி வரும் ஊடகங்கள் ஆயிற்றே. ஒரு பக்கத்தில் இம்மாதிரியான உணர்ச்சியை தூண்டும் கதைகளை போட்டுவிட்டு - மறுபக்கத்தில் அதன் தொடர்ச்சியாக ஆண்மைக்குறைவுக்கு வைத்தியம் பார்க்க அழைக்கும் மருத்துவர்கள்.
சும்மா சொல்லக்கூடாது - நமது ஊடகங்களை... பாவம் செய்தாலும் - அதற்கு பரிகாரமும் செய்யத்தான் செய்கிறார்கள். ஏதாவது ஒரு பத்திரிகையாளர் தாக்கப்பட்டால் - அனைத்து பத்திரிகையாளர்களும் ஒன்று கூடி கண்டனம் தெரிவிக்கிறார்கள். மிக்க மகிழ்ச்சி. ஆனால் ஒருவன் அருவருக்கத்தக்க செய்திகளை வெளியிடும்போது - ஒன்று கூடும் ஊடகங்கள் கண்டிக்க வேண்டாமா?
"போராளி" படத்திற்கு சென்று இருந்தேன். எனக்கு பின் வரிசையில் இரண்டு பள்ளி மாணவர்கள். தொண தொணவென்று பேசி கொண்டிருந்தார்கள். திரும்பி பார்த்தபோது - அவர்கள் கையில் "ஹீரோயின்களின் கதையை" தாங்கி வரும் பத்திரிகை. இனி : அவர்கள் பேசி கொண்டதில் சில பகுதிகள். "டேய், இது அவ தாண்டா நான்கெழுத்து நடிகைன்னு போட்டிருக்கு"... "இல்லடா இவ கேரளா. ஆனா அவ பம்பாய்க்காரிடா" "சரி. அந்த டைரக்டர் யாருடா. மூன்றெழுத்து நடிகரின் தந்தைன்னு போட்டு இருக்குடா" என்று பேசி கொண்டவர்கள் - தங்கள் வால்யூமை குறைத்து கொண்டார்கள்.
இருவரும் பள்ளி மாணவர்கள் என்பதை அறிந்து கொள்ள முடிந்தது. ஒரு விஷயத்தை படித்து முடித்ததும் - அதை பற்றி விவாதிக்கப்பட வேண்டும் என்றால் அது ஆரோக்கியமான விஷயமாக இருத்தல் வேண்டும். மாணவர்கள் விவாதித்தது ஆரோக்கியமான விஷயமா? இன்று முழுக்க "அவளா... இவளா?" மற்றும் "அவனா... இவனா? " என்கிற சிந்தனையிலேயே இன்றைய பொழுது ஓடிவிடும். அவன் படிப்பில் கவனம் செலுத்துவது எங்ஙனம்.
அவனுக்கு பாடத்திற்கு தேவையான புக் வாங்குகிறனோ இல்லையோ - நாளை சரியாக ஹீரோயின்களின் கதையை தாங்கி வரும் இதழை வாங்கி விடுவான். முக்கியமான இடத்தில் "தொடரும்" போட்டு இருக்கிறானே.
|
No comments:
Post a Comment