தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் அருகே குலையன் கரிசலை சேர்ந்தவர் முனியாண்டி. இவரது மனைவி சத்தியபிரபா (35). இவர் கடந்த 9ம் தேதி தெற்கு திரவியபுரத்தில் உள்ள வாழைத்தோட்டத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். சத்தியபிரபாவின் செல்போனுக்கு வந்த அழைப்புகளை சோதனை செய்தனர்.
அதில் தூத்துக்குடி கால்டுவெல் காலனியில் வசித்து வரும் தங்கராஜ் என்பவர் சத்தியபிரபாவிடம் கடைசியாக பேசியது தெரியவந்தது.
இதையடுத்து அவரை போலீசார் தேடினர். போலீஸ் தேடுவதை அறிந்த தங்கராஜ் தலைமறைவானார். நேற்று காலை சாயர்புரம் அருகே பெரும்படை சாஸ்தா கோயில் அருகே நின்ற தங்கராஜை போலீசார் கைது செய்தனர்.
விசாரணையில் அவர் கூறியதாவது: நான் தூத்துக்குடி கால்டுவெல் காலனியில் வசித்து வருகிறேன். வசிய மருந்து வைப்பது, குறி சொல்வதாக கூறி பெண்களை ஏமாற்றி வந்தேன்.
சத்தியபிரபா எனக்கு போன் செய்து, தனக்கு ஒருவருடன் கள்ளத் தொடர்பு இருப்பதாகவும், தான் சொல்வதை கேட்கும்படி அவருக்கு வசிய மருந்து வைக்க வேண்டும் என்றும் கூறினார்.
இதற்கு சம்மதித்த நான் சத்தியபிரபாவை தெற்கு திரவியபுரத்தில் உள்ள ஒரு வாழை தோட்டத்துக்கு வர சொன்னேன். அங்கு வந்த சத்தியபிரபாவுக்கு தூக்க மாத்திரைகளை திருநீறுடன் கலந்து கொடுத்தேன்.
அதை சாப்பிட்டவுடன் அவர் மயங்கினார். உடனே நான் புல் அறுக்கும் அரிவாளால், அவரது கழுத்தை அறுத்து கொன்றேன். அவர் அணிந்திருந்த 5 பவுன் செயின், அரை பவுன் கம்மலை எடுத்து கொண்டு தப்பினேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார். இதையடுத்து போலீசார் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
|
No comments:
Post a Comment