சென்ற சனிக்கிழமை மக்கள் தொலைக்காட்சியில், திரைப்பட தணிக்கை குழு குறித்து, தணிக்கை செய்யப்பட்ட காட்சிகளை திரையிடும் சட்ட மீறல்கள் மற்றும் திரைப்படங்களில் மீதமிஞ்சி காட்டப்படும் - வன்முறை காட்சிகள் மற்றும் ஆபாசக்காட்சிகள் குறித்து பேசப்பட்டது. அது குறித்த நமது சிந்தனைகள் இங்கே.
திரைப்படங்களை சமுகத்தின் கண்ணாடி என்பார்கள். சமுகத்தில் என்ன நடக்கிறதோ, அதை அப்படியே பிரதிபலிப்பதாகவே உள்ளது திரைப்படங்கள். "நாட்டுல நடக்கிறதை தான் திரைப்படத்துல காட்டுறோம்" என்கிறார்கள் திரைத்துறையை சார்ந்தவர்கள். மக்கள் தொலைக்காட்சி வேறு, பாட்டாளி மக்கள் கட்சி வேறு கிடையாதில்லையா. அதனால் அதை பாமக வின் குரலாக பார்க்கலாம்.
தமிழ் சினிமாவில் காட்டப்படும் பெரும்பாலான வன்முறை காட்சிகள், அரசியலை மையப்படுத்தியே காட்டப்படுகிறது. ஒரு காலத்தில் பாஸாக காட்டப்பட்ட வில்லன்கள், இன்று அரசியல்வாதிகளாக. தமிழ் சினிமாவில் இந்த பத்து வருஷங்களாக தான் வன்முறை காட்சிகள் இவ்வளவு. தமிழக அரசியலிலும், இந்த பத்து வருஷங்களாக தான் அதிகப்படியான வன்முறைகள். அதை தான் திரைப்படங்கள் காட்டுகின்றன.
பொது சொத்தை சேதப்படுத்தும் அமைப்புகளிடமே, அந்த தொகையை வசூலிப்பது என்று சென்ற அதிமுக காலத்தில் சட்டம் கொண்டு வரப்பட்ட போது, அதில் அதிகமாய் பொது சொத்துகளை தேசம் விளைவித்தவர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்தது பாட்டாளி மக்கள் கட்சி. நிச்சயம் நமது அரசியல் கட்சிகளுக்கு வன்முறை குறித்து பேசுவதற்கு தகுதி கிடையாது. இந்த வன்முறை காட்சிகள் குறித்து, ஒரு நிகழ்ச்சியாக பாமக தொலைக்காட்சி ஒளிபரப்பியதால் தான் இந்த கேள்வி.
மதுரையில் மருத்துவர் ராமதாசு முன்னால், கருப்பு கொடி காட்டிய ரஜினி ரசிகர்கள் மீது காட்டுமிராண்டி தனமாக தாக்கியவர்கள், திரையில் வன்முறை காட்சி குறித்து பேசுவது தான் வியப்பு. 50 களில் வந்த திரைப்படங்களிலும், அன்றைய அரசியல் சூழல் குறித்த எதிர் கருத்துக்கள் இருந்தன. ஒரளவுக்கு அது நாகரிகமாக காட்டப்பட்டது. காரணம், அன்றைய அரசியலும் ஒரளவு நாகரிகமாக இருந்தது. 70 களில் திமுகவுக்கு எதிராக எம்.ஜி.ஆர் படங்கள் அரசியல் பேசின. அந்நாளில், அரசியலில் நாகரீகம் என்பது, தனது இறுதி மூச்சை செலுத்தி கொண்டிருந்தன. 80 களில் டாக்டர் கலைஞர், ஒரு திரைப்படத்தில் தனது கட்சி அனுபவத்தை, "கொடிய திருப்பினா தடி" என்று வசனம் எழுதி தெரிவிப்பார். அங்கே வசனமாக சொன்னது, இன்று காட்சிகளாக, தொண்ணூறுகளுக்கு பிறகு அரசியல் முழுமையாக மாறிவிட்டது. பொறுப்புணர்ச்சி போய் வெறுப்புணர்ச்சியும், வன்முறையும் அதீதமாய் வளர்ந்துவிட்டன.
ரஜினியின் பாபா திரைப்படத்தின் போது, கமலின் சண்டியர் மற்றும் மும்பை எக்ஸ்பிரஸ் திரைப்படங்களின் போது, குஷ்பூ விவகாரத்தின் போது - நமது கட்சிகளுக்கு வன்முறை மீது எவ்வளவு நாட்டம் உள்ளது என்பதை உணர முடிந்தது. அவர்களின் பேச்சுகளை, செயல்பாடுகளை திரையில் சம்பந்தப்பட்டவர்களே பார்க்கும் போது, ஓவராக தெரிகிறது.
சாமி திரைப்படத்தில் பெருமாள் பிச்சை என்றொரு அரசியல்வாதியை காட்டுவார்கள். அவர் செய்யும் அலும்புகளை பார்க்கும் போது, சினிமாவில் மிகைப்படுத்தி காட்டுவதாகவே தோன்றும். ஆனால் இந்த ஏழு வருஷங்களில் நடந்த பல நிகழ்வுகள், அப்படத்தில் உள்ளதையே பிரதி பலிக்கும்.
சினிமாவில் வன்முறை காட்சிகள் குறைக்கப்பட வேண்டும் என்கிற மக்கள் தொலைக்காட்சி எண்ணம் வரவேற்கத்தக்கது. அரசியல்வாதிகளான நீங்கள், வன்முறையை விட்டொழித்தால், காவல் துறையினரை நேர்மையாக பணி செய்ய அனுமதித்தால் - திரையிலும் சரி, நிஜத்திலும் சரி - வன்முறை என்பதே இல்லாது போகும்
|
No comments:
Post a Comment