"முல்லைப்பெரியாறு பிரச்னையில், மத்திய அரசின் பாராமுகத்தை கண்டித்து, நான் எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்யத்தயார். அதே வேளை தமிழகத்தை சேர்ந்த 39 எம்.பி.,க்களும் ராஜினாமா செய்ய வேண்டும்,'' என்று தேனியில் விஜயகாந்த் ஆவேசமாக பேசினார்.
முல்லைப்பெரியாறு அணை பிரச்னையில் மத்திய அரசையும், கேரள அரசையும் கண்டித்து தேனியில் தே.மு.தி.க., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. கட்சித் தலைவர் விஜயகாந்த் தலைமை வகித்தார். அவைத்தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், மாநில துணைச்செயலாளர்கள் இளங்கோவன், தேனி முருகேசன், ஆஸ்டின், எம்.எல்.ஏ.,க்கள் சுந்தர்ராஜன், ராஜா, மாவட்ட செயலாளர்கள் தினேஷ், ராஜா, தமிழ்முருகன், பாலச்சந்தர், அரவிந்தன் உட்பட பலர் பங்கேற்றனர். விஜயகாந்த் பேசியதாவது: நான் முல்லைப்பெரியாறு அணை தண்ணீரை குடித்து வளர்ந்தவன். அதனால் தான் இப்பிரச்னையில் உணர்வுடன் போராடுகிறேன். முல்லை பெரியாறு அணை பிரச்னையில், 30 ஆண்டுகளுக்கும் மேலாக கேரளா தமிழகத்தை வஞ்சித்து வருகிறது. அணை பலப்படுத்தப்பட்டு விட்டதால், நீர் மட்டத்தை 142 அடியாக உயர்த்தலாம் என்ற சுப்ரீம் கோர்ட் உத்தரவையும் கேரளா கண்டுகொள்ளவில்லை. கோர்ட் உத்தரவை அமல்படுத்த மத்திய அரசும் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. அப்போது ஐந்து ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த கருணாநிதியும், நடவடிக்கை எடுக்கவில்லை.
எல்லா பிரச்னைகளிலும் கருணாநிதியும், ஜெயலலிதாவும் ஒன்று தான். அவர்களுக்கு மக்கள் மீது அக்கறை இல்லை. நான் மக்கள் மீது அக்கறை கொண்டவன் என்பதால் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறேன். இப்பிரச்னையில் கேரள அரசு தூங்குவதை போல் நடிக்கிறது.
நான் மக்கள் நலனின் அக்கறை உள்ளவன். இந்த விஷயத்தில் நான் அரசியல் நடத்த விரும்பவில்லை.எவ்வளவோ கருத்து வேறுபாடுகள், முரண்பாடுகள் இருந்தாலும் முல்லை பெரியாறு அணை பிரச்னையில் நாங்கள் அனைத்து கட்சிகளுடனும் ஒருங்கிணைந்து செயல்படுவோம்.இப்பிரச்னையில் மத்திய அரசு மந்தமாக செயல்படுகிறது என கருணாநிதியே கூறியிருக்கிறார். இதை தெரிந்து கொள்ள அவருக்கு எட்டு ஆண்டுகள் ஆகியிருக்கிறது.
முல்லை பெரியாறு அணை பிரச்னையில் கேரள அரசின் அடாவடியினை மத்திய அரசு கண்டிக்க வேண்டும். சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி செயல்பட அறிவுறுத்த வேண்டும். அணை பாதுகாப்பிற்கு மத்திய படையையோ, ராணுவத்தையோ நிறுத்த வேண்டும். இந்திய நதிகள் முழுவதையும் தேசியமயமாக்க வேண்டும். அப்போது தான் இந்த பிரச்னை தீரும்.
கேரளத்தின் பசப்பு வார்த்தைகளை நம்பி பேச்சுவார்த்தை என்ற பெயரில் இனியும் ஏமாறக்கூடாது.கேரளமும், கர்நாடகமும் தமிழகத்தை மழைக்காலத்தில் மட்டும் நீர் வழிந்து செல்லும் வடிகாலாக பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். காவிரி நதிநீர் பிரச்னையில் மத்திய அமைச்சர் பதவியை வாழப்பாடி ராமமூர்த்தி ராஜினாமா செய்ததைப்போல், பெரியாறு அணை பிரச்னையில் தமிழகத்தை சேர்ந்த 39 எம்.பி.,க்களும் ராஜினாமா செய்ய வேண்டும்.
கருணாநிதி நாங்கள் முடிவெடுப்போம் என்கிறார். தி.மு.க., இந்த விஷயத்தில் விரைந்து முடிவெடுக்க வேண்டும்.
முல்லை பெரியாறு பிரச்னைக்காக நான் என் பதவியை ராஜினாமா செய்ய தயார். எனது கட்சி எம்.எல்.ஏ.,க்களும் ராஜினாமா செய்ய தயாராக உள்ளனர். பெரியாறு அணை பிரச்னையில் தமிழகத்தை வஞ்சித்த மத்திய அரசுக்கு மக்கள் தேர்தலில் பாடம் புகட்ட வேண்டும்,என்றார்.
தப்பு... தப்பா நடந்து போகும் : தேனியில், மதுரை ரோட்டில் விஜயகாந்த் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்காக, மதுரை ரோட்டில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு, பஸ்கள் சுற்றி விடப்பட்டன. ஆம்புலன்ஸ் வாகனங்கள் மட்டும் மதுரை ரோட்டில் அனுமதிக்கப்பட்டன. அப்போது, மதுரை எஸ்.பி., ஆஸ்ரா கார்க் அந்த வழியாக, சைரன் காரில் வந்தார். அவரது காரை பார்த்ததும், டென்ஷன் ஆன விஜயகாந்த், "ஆம்புலன்ஸ் மட்டுமே அவசரம் என்பதால் இந்த பாதையில் அனுமதிப்பேன். மற்ற கார்கள் இது போன்று வந்தால், தப்பு தப்பா நடந்து போகும். பிறகு மக்கள் இஷ்டப்படி செயல்படுவர். எதற்கும் நான் பொறுப்பேற்க மாட்டேன். போலீசார் போக்குவரத்தை நிறுத்த வேண்டும். லஞ்சம் கொடுத்தால் மட்டுமே போக்குவரத்தை நிறுத்துவீர்கள் என்றால், என் கட்சியினரை கொடுக்கச் சொல்கிறேன். என் கூட்டத்திற்கு அனுமதி கொடுத்து விட்டு, என்னை பேசவிடாமல் வாகனங்களை பாதையில் அனுப்பி தொல்லை தருவதை ஏற்க மாட்டேன்' என்றார்.
""என்ன பேசுறேன்னு எனக்கே தெரியவில்லை'' : முல்லைப் பெரியாறு அணை பிரச்னை பற்றி பேச மேடையேறிய விஜயகாந்த் பேச்சு திசைமாறி, ஜெயலலிதா, கருணாநிதி, ஸ்டாலின் மீது திரும்பியது. அவர்களை திட்டித் தீர்த்த விஜயகாந்த், தி.மு.க.,வையும், அ.தி.மு.க.,வையும் சாடினார். பெரியார் கறுப்புத் துண்டு அணிவார். ஆனால், மஞ்சள் துண்டு அணிந்தவரை போய் தற்போது, வாழும் பெரியார் என வர்ணிக்கின்றனர் என, கருணாநிதியைச் சாடினார்.
குருட்டுப் பூனை விட்டத்தில் பாய்வது போல், இந்தம்மா எப்ப என்ன செய்யும்னு தெரியாது, இன்னும் என்னென்ன விலைவாசி உயரப் போகுதுன்னு பாருங்க என, ஜெயலலிதாவை தாக்கினார். கூட்டத்தினர் சிறிய சலசலப்பு ஏற்படுத்திய போதெல்லாம், "ஏய், யார் நீ, தைரியம் இருந்தா மேடைக்கு வா, வேற கட்சிக்காரன் நீ, இப்படி என் கட்சி துண்ட போட்டு ஏமாத்துறீயா, என்னய்யா வேடிக்க பாக்குற, அந்தாள அங்கிட்டு தூக்கி வெளிய போடுய்யா' என, அடிக்கடி கோபப்பட்டுக் கொண்டே இருந்தார். நாளைக்கு நான் பேசுனது பத்திரிகையில போட மாட்டாங்க; விஜகாந்த் கோபப்பட்டார்னு போடுவாங்க. நான் கோபப்பட்ட மாதிரியே "டிவி'யில காட்டுவாங்க என, நிருபர்கள் பக்கமும் பாய்ந்தார். பேச்சை முடிக்கும் போது, நான் "என்ன பேசுறேனு எனக்கே தெரியல. பெரியாறு அணை பத்தி பேச வந்த நான், வேறு ஏதேதோ பேசிட்டிருக்கேன், இருந்தாலும், நான் சொல்ல வந்ததை சரியா சொல்லிட்டேனு நினைக்கிறேன். ஏன்னா, நான் பேசுறதுக்கு முன்னாடி குறிப்பெடுத்து வைச்சிருந்தேன். குறிப்பில் இருந்த எல்லாவற்றையும் பேசி விட்டேன்' என்றார்.
அப்பா, அம்மாவ கும்பிடுங்க... : தேனி ஆர்ப்பாட்டத்தில் பேசிய விஜயகாந்த், "நாம சாமி கும்பிட போன கூட, கேரளாக்காரன் நம்மை அடிக்கிறான். நீங்க ஏன் சாமி கும்பிட அங்க போறீங்க. நம்ம ஊர்ல அங்கங்க விநாயகர் கோவில் கட்டியது போல், நீங்களும் எல்லா இடத்திலும் அய்யப்பனுக்கு கோவில் கட்டுங்க. அங்க போய் சாமி கும்பிடுங்க. குறிப்பாக, உங்க குலதெய்வத்தை போய் கும்பிடுங்க. அதுக்கு முன்னாடி அப்பா, அம்மாவ கும்பிடுங்க' என்றார்.
|
No comments:
Post a Comment