கைத்தொலைபேசி எப்பொழுதும் எனது சுதந்திரத்தைப் பறித்துக் கொண்டிருக்கிறது. என்னை நான் தீர்மானித்துக் கொள்ள முடியாதபடிக்கு கைத்தொலைபேசியின் தாக்கம் என்னைச் சுற்றிச் சூழ்ந்து கொண்டிருக்கிறது. இதனை நான் வெறுக்கிறேன்.
அவசரமாக காரில் பயணம் செய்து கொண்டிருக்கும்பொழுது கைத்தொலைபேசியில் கூப்பிட்டு ‘வேலைக்கு வா’ என்கிறார்கள்.
உண்மையில் கைத்தொலைபேசிகள்தான் ஒரு மனிதனை, அவனது வாழ்வைத் தீர்மானிக்கின்ற ஒரு விடயமாக ஆகிவிட்டது பெரும் துன்பமான விடயம்தான்.
தொண்ணூறுகளில் இலங்கையில் கைத்தொலைபேசி பாவனை பரவ ஆரம்பித்த காலத்தில் நான் அக்குறணையில் இருந்தேன். கண்டியில் ஒரு கைத்தொலைபேசிக் கடை திறந்தார்கள். ஒரு பெரிய செங்கல் நீள அகலத்தில் கைத்தொலைபேசிகளை அலங்கரித்து வைத்திருந்தார்கள் கடையில். நானும் போய் ஆவலுடன் பார்த்திருக்கிறேன்.
அப்பொழுது அதனை வாங்க வேண்டிய தேவையோ அதற்கான பணமோ அல்லது மாதாமாதம் கட்டும் பணமோ என்னிடம் இருக்கவில்லை.
விதவிதமான கைத்தொலைபேசிகளைக் கண்ணாடிக்குள்ளால் பார்த்துவிட்டுப் போய்விடுவேன்.
அக்குறணையில் இருக்கும் பொழுது ஹமீத் ஹாஜியார்தான் கைத்தொலைபேசியைக் கையில் கொண்டு திரிவதைக் கண்டிருக்கிறேன். அவர் அங்கு பணக்காரராக இருந்தார். கைத்தொலைபேசி கையில் வைத்திருப்பது பெருமைக்குரிய விசயமாக இருந்த காலம் 1990கள்.
ஆனால் ஹமீத் ஹாஜியார் பணக்காரராக இருந்தாலும் பெருமை விரும்பாதவர். நல்ல மனிதர். தனது வியாபாரத் தேவைக்காக கைத்தொலைபேசியைக் கையில் கொண்டு திரிந்தவர்.
அதனை லேஞ்சியால் சுற்றி மறைத்துத்தான் அந்தப் பெரிய கைத்தொலைபேசியைக் கொண்டு திரிந்தார்.
பிறகு அக்குறணையில் நான் பார்த்த இரண்டாவது கைத்தொலைபேசி ஒரு நகைக் கடைக்காரரின் மகன் சின்னப் பெடியன், அவரும் பணக்காரன் என்பதனால் தகப்பனிடம் கேட்டு வாங்கிக் கையில் கொண்டு திரிவார். அவருக்கு அப்போது அது தேவையில்லாத ஒன்று. ஆனால் அதனைக் கையில் வைத்திருந்தால் பெருமை தானே, அதற்குத்தான்.
பொலிஸ்காரர் கையில் வைத்திருக்கும் ‘வோக்கி டோக்கி’ போலத்தான் அந்தக்காலத்து கைத்தொலைபேசி இருந்தது.
அக்குறணையில் நான் பார்த்த மூன்றாவது கைத்தொலைபேசி ஒரு மௌலவி வைத்திருந்தார்.
அதற்கு பிறகு கைத்தொலைபேசிகள் வந்து குவிய ஆரம்பித்தன.
ஆனால் அக்குறணையில் இருந்து ஹொலன்ட் வந்து லண்டன் வரும்வரை கைத்தொலைபேசியை நான் பாவிக்கவே இல்லை. அதற்கான தேவையும் எனக்கு ஏற்படவில்லை.
இந்தப் பதினைந்து வருடத்தில் கைத்தொலைபேசி உருமாறி உருமாறி இன்று ‘டச் ஸ்கிறீன்’வரைக்கும் போய் ‘ஐ போன்’ என்கின்ற உயர் தொழில்நுட்பங்களைச் சுமந்து நிற்கின்ற ஒரு விசயமாக மாறி விட்டது.
இப்பொழுது என்னிடம் இருக்கும் கைத்தொலைபேசியில் ஸ்கைப் வசதி இருக்கிறது. உலகத்தில் எங்குள்ளவரோடும் இலவசமாக வீடியோ உரையாடல் நடத்தலாம்.
இதுதான் தொல்லை என்கிறேன். அண்மையில் எழுத்தாளர் கருணாகரமூர்த்தி ஜெர்மனியில் இருந்து லண்டன் வந்திருந்தார். அவர் தனது வாழ்நாளில் கைத்தொலைபேசி வைத்திருக்காத மனிதர். கைத்தொலைபேசியை ஒரு வேண்டாத பொருளாகவே சொல்கிறார்.
தன்னை அது கட்டுப்படுத்துவது விருப்பமில்லை என்கிறார். அவர் 20 வருடமாக வாடகைக்கார் ஓட்டுனராக ஜெர்மனியில் இருக்கிறார். கைத்தொலைபேசி தனது சிந்தனையில் குறுக்கிட அவர் விரும்புவதே இல்லை என்கிறார்.
இங்கு லண்டனில் எனக்குத் தெரிந்த இரண்டு சட்டத்தரணிகள் இருக்கின்றனர். அவர்கள் கைத்தொலைபேசி வைத்திருப்பதே இல்லை. அவர்கள் சொல்லும் காரணம், அது நேரத்தைக் கொன்றுவிடும் என்பதுதான். அலுவலகத்தில் தொலைபேசி இருக்கிறது. வீட்டில் தொலைபேசி இருக்கிறது. பிறகு என்னத்துக்கு கைத்தொலைபேசி என்பது அவர்கள் இருவரினதும் கொள்கை.
இங்கே லண்டனில் கைத்தொலைபேசி பேசிக் கொண்டு வாகனம் ஓட்டினால் மூன்று பொயின்ஸ் றைவிங் லைசன்ஸில் இருந்து பறித்து விடுவார்கள். அதோடு 60 பவுண்ட் அபராதமும் விதிப்பார்கள். ஆபத்தான முறையில் வாகனத்தை கைத்தொலைபேசி பேசிக்கொண்டு ஓட்டினால் சிறையில் கூட போடும் அதிகாரம் பொலிஸுக்கு உண்டு.
கைத்தொலைபேசி எப்பொழுதும் பிரச்சினைகளை அள்ளிக் கொண்டு வரும் ஒரு சாதனமாகவே இருக்கிறது.
எனக்குத் தெரிந்த குடும்பம் ஒன்று இத்தாலியில் இருக்கிறது. புதிதாகத் திருமணம் முடித்தவர்கள்.
ஆனால் பெடியனுக்கு சிலோன் முழுக்கப் பெண்கள் தொடர்பு இருக்கிறது. பெண்களை கவருவதில் அவன் விண்ணன். ‘எல்லாம் விட்டாச்சு’ என்று சொல்லித்தான் ஒரு பெண்ணைக் காதலித்து கலியாணம் முடித்தவர். ஆனால் கைத்தொலைபேசி கையில் இருக்கும் வரை பெண்கள் தொடர்பு எப்படி இல்லாமல் போகும். அவருக்கு சிலோனில் இருந்து ஒரே எஸ்.எம்.எஸ். வந்து கொண்டிருக்கும். எல்லாம் காதலிக்கிறேன் வகை எஸ்.எம்.எஸ்.கள்தான். புதிதாகக் கலியாணம் முடித்த பெண்மணி அழுது குளறி டிவோஸ் வரைக்கும் போய் இப்பொழுது ஒருவாறாகச் சேர்ந்து வாழுகிறார்கள். குடும்பங்களில் குழப்பத்தை ஏற்படுத்தும் ஒரு சாதனமாகவே கைத்தொலைபேசி இருக்கிறது பார்த்தீர்களா?
அதுமட்டுமல்ல, உலகில் அதிகமான விபத்துகளும் விபத்துகளினால் ஏற்படும் உயிரிழப்புகளும் கைத்தொலைபேசியினால் ஏற்படுகின்றன.
குடும்பங்கள் குலைந்து போவதற்கும் கைத்தொலைபேசிகளே பல இடங்களில் காரணமாக அமைகின்றன.
எனக்குத் தெரிந்த ஒரு குடும்பத்தில் கணவன் எங்கு போனாலும் வீடியோ ஃபோனில் தான் பேச வேண்டும் என்று மனைவி கட்டளை போட்டிருக்கிறார். அப்பொழுதுதான் கணவன் எங்கு இருக்கிறார் என்று இடத்தைப் பார்க்க முடியுமாம். மனிதர்கள் மத்தியில் நம்பிக்கையீனம், அக்கறையின்மை இவற்றைச் சுமந்து கொண்டு கைத்தொலைபேசிகள் அலைந்து கொண்டிருக்கின்றன.
இப்பொழுது ஐரோப்பிய நாடுகளில் விமானங்களில் வைத்து கைத்தொலைபேசிகள் பேசலாம்.
கைத்தொலைபேசிகள் எமது அந்தரங்கத்தை தோலுரித்துக் கொண்டு போகும் ஒன்றாகவே இருக்கின்றன.
இன்ரநெட்டில் கொட்டிக்கிடக்கின்ற செக்ஸ் வீடியோக்கள் அனேகமாக கைத் தொலைபேசியில் எடுக்கப்பட்ட வீடியோக்கள்தான் அதிகம்.
நண்பர்கள் நண்பிகள் என்று மது பார்ட்டில்களில் கலந்துகொண்டு விட்டு இளம் பெண்கள் ஆண்களின் அந்தரங்கக் காட்சிகளைக் கைத்தொலைபேசியில் வீடியோ எடுத்து விட்டு யு டியூப், பேஸ்புக் என்று எந்த அனுமதியுமில்லாமல் உலகத்துக்கு காண்பித்து விடும் பெரும் அபாயம் ஒவ்வொரு நாளும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.
கள்ள உறவுகளைக் கைத்தொலைபேசியில் படம்பிடித்து விட்டுப் பணம் கேட்டு மிரட்டும் பெரும் கொள்ளையும் செல்போன் மூலம்தான் நடக்கிறது.
எங்கு நின்றாலும் யாராவது ஒருவரின் அல்லது பலரின் தொலைபேசி உரையாடல்கள் எமது காதுக்குள் விழுந்தவண்ணம்தான் இருக்கும்.
கைத்தொலைபேசி இல்லாவிட்டால் மற்றவர்களின் அந்தரங்கம் எமக்குத் தெரியாமல் போய்விடும்.
கடந்த வியாழக்கிழமை மதியப்பொழுது ஒன்றில் நான் விரும்பாவிட்டாலும் என்னைச் சுற்றி நடந்த கைத்தொலைபேசி உரையாடல்களைப் பாருங்கள்.
1. அவரின் மனைவி கொழும்புக்கு போய் விட்டார். மகளோடு அங்கு போனவருக்கு டெங்கு காய்ச்சல் பிடித்துவிட்டது. அது மகளுக்குத் தொற்றுமா என்று மனைவி கேட்கிறார்.
மகள் எதற்கெடுத்தாலும் முகத்தில் அடிக்கிறா. ஒருவயது பேர்த்டேயைக் கொழும்பில் கொண்டாடுவோமா என்று மனைவி கேட்கிறார். அந்தப் புதிய மனைவிக்கு இவர் கைத்தொலைபேசியில் கொஞ்சுகிறார். முத்தம் கொடுக்கிறார்.
2. அந்தப் பெண்மணியின் காணி நல்லூரில் இருக்கிறது. அதை விற்கிறதா அல்லது வீடுகட்டி வாடகைக்குக் கொடுக்கிறதா என்று தனது கணவனோடு மிகவும் சீரியஸாக உரையாடிக் கொண்டிருக்கிறார்.
3. இங்கு லண்டனில் அகதி அந்தஸ்து கிடைத்து மூன்று வருடமாகிவிட்டது அவருக்கு. அவர் சிலோனில் இருக்கும் மனைவியை இங்கு கூப்பிடுவதற்கு விசாவுக்கு விண்ணப்பித்து இருந்தார் அது றிஜக்ட் ஆகி விட்டது. பிறகு அப்பீல் பண்ணி முடிவுக்குக் காத்திருக்கிறார். மனைவி சிலோனில் இருந்து அழுது வடிகிறது.
இவர் இமிக்கிறேஸன் விவகாரங்களைச் சொல்லி அந்தப் பெண்ணின் கண்ணீரைக் கைத் தொலைபேசியினூடே துடைக்கிறார். அப்பீல் பண்ணியும் விசா கிடைக்காமல் விட்டால் லண்டனில் இருக்கக் கூடாது. என்னிடம் வந்து விட வேண்டும் என்று மனைவி சொல்வதைக் கேட்டு அப்செட் ஆகி தொலைபேசியில் தொங்கிக் கொண்டு இருக்கிறார்.
4. தமிழ்நாட்டில் உள்ள காதலன் ‘உப்பிடியே லண்டனில் இருந்தால் நீ அங்கேயே கிட’ என்று திட்டியிருப்பான் போல. பொலுபொலென்று கண்ணீர் கொட்டுகிறது அந்தப் பெண்ணுக்கு. நான் கண்டும் காணாதது மாதிரி போக நிர்ப்பந்திக்கப்படுகிறேன். காதலனுக்கு மெதுவாகப் பெண் ஏதோ தேற்றுகிற மாதிரி சொல்கிறாள்.
5. கணவன் செத்துப் போனதுக்கு அந்தப் பெண்ணுக்கு கைத்தொலைபேசியில் ஆறுதல் சொல்கிறார்கள். அவள் அழுது வடிகிறாள்.
6. 2011இல் விசா கிடைத்து விடுமா என்று லோயரிடம் ஒரு அகதிப் பெண்மணி கேட்டு மனம் சலித்துக் கொள்கிறாள்.
7. இளம்பெண் ஒருத்தி தனது காதலனுடன் கொஞ்சிக் கொண்டிருக்கிறாள்.
இது என்னைச் சுற்றி நடந்த ஒரு மணிநேர கைத்தொலைபேசி உரையாடல்கள். எனக்குத் தேவையில்லாத இவ்வளவையும் நான் என்னை மீறி ஏன் கிரகிக்க வேண்டும். என்னை இவை கிரகிக்க நிர்பந்தப்படுத்துகின்றன.
எனக்குச் சம்பந்தமில்லாதவர்கள் என்னை நெருக்குகிறார்கள். உண்மையில் தங்களது அந்தரங்கங்களை யாருக்கும் சொல்ல யாரும் விரும்புவதில்லை. ஆனால் கைத் தொலைபேசி வாயிலாக எல்லாவற்றையும் எல்லோரும் அறிந்து கொள்கிறோம்.
என்னைச் சுற்றி எனது அலுவலகத்தில் நடந்த இந்த ஏழு உரையாடல்கள் மூலமாக அந்த ஏழு பேரின் அந்தரங்கமான விடயங்களை நான் எந்தத் தேவையுமில்லாமல் அறிந்து கொள்கிறேன்.
மனைவியின் டெங்கு காய்ச்சல், நல்லூர்காணி, மனைவியின் விசா, காதலியின் கண்ணீர், செத்துப்போன கணவன், அகதிப் பெண், கொஞ்சும் காதலி. இவை என்னோடு சம்பந்தப்படாத அவர்களின் அந்தரங்கங்கள் எனக்குள் வந்து விழுந்திருக்கின்றன. கைத்தொலைபேசி இல்லாமல் இருந்திருந்தால் எனக்கு இவை தெரிந்திருக்காது. கைத்தொலைபேசி உணர்வுகளை மறைத்து சுற்றம் சூழ உள்ள நிலைமைகளைக் குருடாக்கி விடுகிறது. கைத்தொலைபேசியில் பேசும்பொழுது சுற்றி என்ன நடக்கிறது என்பதனை நாம் மறந்து விடுகிறோம்.
செல்போனில் காதலிக்காகப் பாட்டுப் பாடுகிறோம், முத்தம் கொடுக்கிறோம், மனைவியை ஏசுகிறோம், கணவனைக் கண்காணிக்கிறோம், காதலனை கண்டு பிடிக்கிறோம்.
எல்லாம் கைத்தொலைபேசி காட்டிய விந்தைதான்.
அந்தரங்கம் இப்படிக் காற்றில் போவதைப் பற்றி யாருமே கவலைப்படுவதில்லை. கைத் தொலைபேசியில் அந்தரங்கங்களைப் பகிர்ந்து கொள்வதில் முகம் தெரியவேண்டியது என்ற அசௌகரியம் இல்லாமலே எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்கிறோம். ஒரு இனிமையான குரல் போதும் உணர்வுகளை எல்லாம் பகிர்வதற்கு என்னும் நிலைமை வந்து விட்டது.
இங்கு லண்டனில் கைத்தொலைபேசியில் செக்ஸ் உரையாடல்களைத் தமிழில் செய்வதற்குக் கூட தொலைபேசிகள் வந்திருக்கின்றன என்றால் பாருங்களேன்.
சுற்றியுள்ளவர்களைக் கவனிக்காமல் எதையும் பேசுவதற்கு ஒரு அசட்டுத் துணிச்சலைக் கைத் தொலைபேசி கொடுத்திருக்கிறது.
பக்கத்தில் உள்ளவர்கள் பேசிப் பேசியே என்னைத் துன்புறுத்துகின்றனர். நான் படுக்கும்போது எப்பொழுதும் கைத்தொலைபேசியை அமைதியாக்கி விட்டுத்தான் தூங்குவேன். எனது நித்திரையைக் குலைப்பதற்கென்றே பலர் திரிகிறார்கள். அவர்களுக்கு நான் இடம் கொடுப்பதில்லை. என்னைக் கஸ்டப்படுத்தவென்றே கைத்தொலைபேசியைக் கொண்டு சிலர் அலைகிறார்கள். நான் பேசுவதைக் குறைக்க வேண்டும் என்று திட்டம் தீட்டிச் செயல்படுபவன். பேசுவது குறைந்தால் பிரச்சினைகளும் குறையும்.
உண்மையில் கைத்தொலைபேசியை வைத்திருக்கும்படி எனது வேலையிடம் வற்புறுத்துவதனால் மட்டுமே அதனை வைத்திருக்கிறேன்.
ஆனால் எப்பொழுதும் எனது கைத்தொலைபேசியைத் தூர எறிந்து விட்டு ஒரு சுதந்திரமானவனாக, என்னை நான் மற்றவரின் தொந்தரவு இல்லாமல் வாழும் நாளை மட்டுமே ஆவலோடு எதிர்பார்த்துக் காத்து நிற்கிறேன். எனக்கு மொபைல் போன் வேண்டாம்.
|
No comments:
Post a Comment