சென்னை, புளியத்தோப்பு பகுதியை சேர்ந்த தன்சிங் என்பவரின் மகன் ஆறுமுகம். இவர் கடந்த 2005-ம் வருடம் எர்ணாவூர் பகுதியில் நடந்த ஒரு கொலை வழக்கில் ‘வாழ்நாள்’ தண்டனை விதிக்கப்பட்டு இப்போது சேலம் நடுவன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
நேற்று காலை, உடலில் காயங்களுடன் சேலம் அரசு மருத்துவ மனைக்கு சிறைத்துறை காவலர்களால் சிகிச்சைக்கு அழைத்து வரப்பட்ட ஆறுமுகம் காலை இழுத்து இழுத்து நடந்து வந்தார்.
என்ன என்று விசாரித்த போது,
” கடந்த 6-ம் தேதியன்று சிறைவாசிகளின் குறைகளை கேட்க வந்த நீதிபதி அவர்களிடம் சிறையில் உள்ள குறைகளை புகாராக எழுதிக்கொடுத்தேன்.
இதனால் என்மீது கோபப்பட்ட சிறை அலுவலர்கள் கமராவுடன் கூடிய ஒரு செல்போன் வைத்திருந்ததாக பொய்யான குற்ற சாட்டின் மீது என் மீது ஒரு வழக்கு போட்டுள்ளனர்.
என்னோடு அறையில் இருக்கும் சில சிறைவாசிகளுக்கு சரியாக சாப்பாடு தருவதில்லை. இதுபற்றி நான் நேற்று சிறை அலுவலரிடம் கேள்வி கேட்டேன்.
இதனால், 8-ம் தேதி அதிகாலை 3.00 மணிக்கு சிறை காவலர்கள் ராஜமனோகரன், குணசேகரன், சக்திவேல் ஆகியோர் சிறை அலுவலர் (ஜெயிலர்) ஊர்மிளா அவர்களின் முன்னால் என்னுடைய ஆடைகளை எல்லாம் கழற்றி விட்டு என்னை நிர்வாணமாக நிற்க வைத்து அடித்து உதைத்து சித்தரவதை செய்தார்கள்.
அதில் ஏற்ப்பட்ட காயங்களுக்கு மருந்து போடத்தான் என்னை இப்போது இங்கு அழைத்து வந்துள்ளார்கள்” என்று ஆறுமுகம் மருத்துவமனைக்கு வந்த போது தெரிவித்தார்.
|
No comments:
Post a Comment