ஏழாம் வகுப்பு மாணவியை கடத்தி, திருமணம் செய்து, கற்பழித்த டிராக்டர் டிரைவருக்கு பத்து ஆண்டு சிறை தண்டனை விதித்து ஈரோடு மாவட்ட தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஈரோடு மாவட்டம், குருவரெட்டியூர், பூலேரிக்காட்டை சேர்ந்தவர் கோபால். அவர், தனது குடும்பத்தினருடன் எலவமலை அருகே, பூலாங்காட்டில் தங்கி, அங்குள்ள கரும்பாலையில் பணிபுரிந்து வந்தார்.
அவரது மூன்றாவது மகள் சுமதி (14), பவானி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்தார். அவர் பள்ளிக்கு தினமும் டவுன் பஸ்ஸில் சென்று வந்தார். பஸ்ஸை தவற விட்ட நேரங்களில், கரும்பாலையில் டிராக்டர் டிரைவராக பணிபுரிந்த பரமத்தி வேலூர், சாணார்பாளையத்தை சேர்ந்த சேகர் (40), தனது பைக்கில் சுமதியை பள்ளிக்கு அழைத்து செல்வார்.
கடந்த, 2008 ஃபிப்ரவரி 11ம் தேதி, காலை 8.45 மணிக்கு, சேகருடன் பள்ளிக்கு சென்ற சுமதி வீடு திரும்பவில்லை. அவரது பெற்றோர் பள்ளியில் விசாரித்தபோது, சுமதி பள்ளிக்கு வரவில்லை என்று தெரிந்தது.
தனது உறவினர் மற்றும் சுமதியை கடத்தி சென்ற சேகரின் உறவினர் வீடுகளில் தேடிப்பார்த்தும் இருவரும் கிடைக்கவில்லை. சித்தோடு போலீஸில் கோபால் புகார் செய்தார். போலீஸார் இருவரையும் தேடி வந்தனர். ஆகஸ்ட் 15ம் தேதி பவானி பஸ் ஸ்டாப், மேட்டூர் ரோட்டில் நின்றிருந்த சேகரை கைது செய்து, சுமதியை போலீஸார் மீட்டனர்.
போலீஸ் விசாரணையில், சுமதியை கடத்தி சென்று ஜலகண்டாபுரம் விநாயகர் கோவிலில் சேகர் திருமணம் செய்துள்ளார். பின், பெங்களூரு, கோழிபிறான் கேட்டில் பாலகிருஷ்ணன் என்பவருக்கு சொந்தமான கல் குவாரியில் இருவரும் தங்கி, பணிபுரிந்துள்ளனர். அங்கு குடும்பம் நடத்தியுள்ளது தெரியவந்தது.
சிறுமியை கடத்தி சென்று, கற்பழித்ததாக சேகர் மீது, ஈரோடு மாவட்ட தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில், போலீஸார் வழக்கு தொடர்ந்தது. பள்ளி மாணவியை கடத்தி சென்று, கட்டாய திருமணம் செய்து, கற்பழித்த சேகருக்கு பத்தாண்டு சிறை தண்டனையும், இரண்டு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து, நீதிபதி நம்பிராஜன் உத்தரவிட்டார்.
அபராதத் தொகையில், ஒரு லட்சத்து 75 ஆயிரம் ரூபாயை, பாதிக்கப்பட்ட சுமதிக்கு வழங்கும்படியும், அபராத தொகையை செலுத்தவில்லையெனில், சேகருக்கு மேலும் ஆறு மாதம் சிறை தண்டனை விதித்தும் நீதிபதி உத்தரவிட்டார்.
|
No comments:
Post a Comment