Sunday, December 4, 2011

குரங்கு விரட்டியதால் கல்லூரி மாணவி மாடியிலிருந்து தவறி விழுந்து பலி! (பட இணைப்பு)


காரைக்கால் அடுத்த நிரவி கீழராஜவீதியை சேர்ந்தவர் நைனா மரைக்காயர். சவுதியில் வேலை செய்கிறார். இவரது மகள் மெகபூப்நிஷா(19). அங்குள்ள அவ்வையார் அரசு மகளிர் கல்லூரியில் முதலாமாண்டு ஹோம் சயின்ஸ் படித்து வந்தார். கல்லூரியில் குரங்குகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது.

இவர் நேற்று காலை வழக்கம்போல் கல்லூரிக்கு சென்றார். கல்லூரியின் பழைய கட்டிடத்தில் 2வது மாடியில் உள்ள இவரது வகுப்புக்கு அருகே திடீரென மெகபூப்நிஷாவின் அலறல் சத்தம் கேட்டது. சக மாணவிகள் ஓடி வந்து பார்த்தனர்.

அப்போது அவர், மாடியிலிருந்து கீழே விழுந்து நிலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த மாணவிகள் பதறி துடித்தனர். இது குறித்து கல்லூரிக்கு எதிரே உள்ள மகளிர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

போலீசார் வந்து மாணவியை மீட்டு காரைக்கால் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மெகபூப்நிஷா பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து மாணவிகள் கூறுகையில், ‘‘ கல்லூரி வளாகத்தில் குரங்குகள் அடிக்கடி நிறைய வந்து செல்கிறது. இதனால் பல மாணவிகள் அச்சமடைந்துள்ளனர்.


மெகபூப்நிஷா வும் குரங்குக்கு பயந்து ஓடுகையில் தவறி கீழே விழுந்து இறந்திருக்கலாம்‘‘ என்றனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அமைச்சர் முற்றுகை: காரைக்கால் அரசு விழாவுக்கு வந்த புதுச்சேரி சமூக நலத்துறை அமைச்சர் ராஜவேலு, எம்எல்ஏ நாஜிம் ஆகியோர் மருத்துவமனைக்கு சென்று மாணவியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

கல்லூரிக்கு விசாரணை நடத்த வந்த அமைச்சரை தமுமுக, தவ்கீத் ஜமாஅத், மனிதநேய மக்கள் கட்சியினர் முற்றுகையிட்டு கல்லூரி வளாகத்தில் நடமாடும் குரங்குகளை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் உறுதியளித்ததை அடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்

No comments:

Post a Comment