Sunday, December 11, 2011

ராஜிவ் கொலை வழக்கில், இவரது கூற்றுதான் நிஜமான திருப்பம்!

“ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்கு விதிக்கப்பட்டுள்ள தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டால் மகிழ்ச்சி அடைவேன்” இவ்வாறு ராஜிவ் கொலை வழக்கு சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு தலைமை வகித்த டி.ஆர்.கார்த்திகேயன் கூறியிருக்கிறார்.


இவரது கூற்று, இந்த விவகாரம் பற்றி வெளியே உள்ள எதிரான கருத்தின் வீரியத்தை, குறைக்கும் வகையில் உள்ளது.

தண்டனை விதிக்கப்பட்ட மூவரின் தூக்குத் தண்டனையையும் ரத்து செய்ய வேண்டும் என்று, தமிழக அரசு முதல், அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள் என பல தரப்பினரும் கோரிவரும் நிலையில், இந்த விவகாரம் பற்றிய இரண்டாவது கருத்து ஒன்றும் சமீப காலமாகப் பரப்பப்பட்டு வருகின்றது.

ராஜிவ் கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதித்தவர்களின் தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என்றும், அவர்களுக்கு கருணை காட்ட வேண்டியது அவசியமில்லை என்றும் உள்ளது இந்த இரண்டாவது கருத்து. இதே கருத்துடன் பிரபல நாளிதழ் தினமலரில் வெளியான ஒரு கட்டுரை பலத்த எதிர்ப்பைச் சந்திக்க நேர்ந்தது.

அப் பத்திரிகையின் பிரதிகளை நீதிமன்றத்தின் முன் எரிக்கும் போராட்டம் ஒன்றும் கோபமடைந்த வக்கீல்களால் நடாத்தப்பட்டது.

இப்படியான சூழ்நிலையில்தான் இந்த வழக்குப் பற்றி மற்றைய யாரையும்விட மிக நன்றாக அறிந்த டி.ஆர்.கார்த்திகேயன், “இந்த மூவருக்கும் விதிக்கப்பட்டுள்ள தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டால் மகிழ்ச்சி அடைவேன்” என்று கூறியுள்ளார்.

தற்போது தூக்குத் தண்டனையை எதிர்நோக்கியுள்ள மூவரையும் கைது செய்ததே, டி.ஆர்.கார்த்திகேயன் தலைமையிலான புலனாய்வுக் குழுதான். ராஜிவ் கொலை மர்மத்தைக் கண்டு பிடித்ததாக மத்திய அரசினால் கூறப்படுபவர்களும், இதே குழுதான்.

அந்த வகையில், ராஜிவ் கொலை வழக்கில் நிஜமான குற்றவாளிகள் யார், இந்த மூவருக்கும் ராஜிவ் கொல்லப்பட்டதில் உள்ள சம்மந்தம் எவ்வளவு, இவர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் எந்த ஆதாரங்களில் உறுதிப்படுத்தப்பட்டன, அந்த ஆதாரங்கள் எப்படிக் கிடைத்தன என்ற விபரங்கள் அனைத்தும் மிக நன்றாகத் தெரிந்த நபரும், டி.ஆர்.கார்த்திகேயன்தான்!

நிருபர்களுக்கு கருத்து தெரிவித்த டி.ஆர்.கார்த்திகேயன், “ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது எனக்கு தனிப்பட்ட முறையில் எந்த விரோதமும் இல்லை. நான் எனது கடமையை செய்தேன். தற்போது அரசாங்கம் தனது கடமையை செய்யட்டும். அவர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தூக்கு தண்டனை குறைக்கப்பட்டு ஆயுள் தண்டனையாக மாற்றப்படுமானால் நான் மகிழ்ச்சி அடைவேன்” என்று கூறியிருக்கிறார்.

1991ம் ஆண்டு மே மாதம் 21ம் தேதி இரவு, ராஜிவ் காந்தி குண்டு வெடிப்பில் கொல்லப்பட்டார். கொல்லப்பட்டது, ராஜிவ் காந்திதான் என்பது உறுதிப் படுத்தப்பட்டு 12 மணி நேரமாகியும், கொலையை புலனாய்வு செய்யப்போவது யார் என்ற முடிவு எடுக்கப்படவில்லை. யாருடைய தலைமையில் புலனாய்வுக் குழுவை அமைப்பது என்ற குழப்பமே தாமதத்துக்கான காரணம்.

அதன்பின் இந்த விசாரணையில் டி.ஆர்.கார்த்திகேயன் எப்படிக் கொண்டுவரப்பட்டார் என்பதைத் தெரிந்து கொண்டால்தான், தற்போது அவரது கூற்றுக்கு வேல்யூ அதிகம் இருப்பதை நன்றாகப் புரிந்து கொள்ளலாம். விறுவிறுப்பு.காம், கடந்த வாரம் வெளியிட்ட ‘ராஜிவ் காந்தி கொலையில், புலிகள் சிக்கிய கதை’ தொடரின் 7ம் அத்தியாயத்தின் பெயரே, ‘கார்த்திகேயன் காட்சிக்குள் வருகிறார்’ என்பதுதான்.

அதை ஒருமுறை படித்துப் பாருங்கள். டி.ஆர்.கார்த்திகேயன் யார் என்பது புரியும்!

No comments:

Post a Comment