Sunday, December 11, 2011

அணை 'வீக்' இல்லை... கேரள அரசியல் கட்சிகள்தான் 'வீக்'! - கே.எம்.அப்பாஸ் அதிரடி

'போராட்டம், மறியல், உருவப் பொம்மை எரிப்பு என்று நாளுக்கு நாள் முல்​லைப் பெரியாறு விவகாரம் தீவிரம் அடைகிறது. இதற்குக் காரணம் அணை அல்ல, கேரள அரசியல்தான்’ என்று புதியதோர் கோணத்தைச் சொல்கிறார் விவசாயிகள் சங்கத் தலைவர் கே.எம்.அப்பாஸ். பல ஆண்டுகளாக முல்லைப் பெரியாறு பிரச்னைக்காக தனிமனிதராக நின்று குரல் கொடுத்து வருபவர் இவர். 

அணையின் வரலாற்றையும் இன்றைய அரசியலையும் நமக்குச் சொல்கிறார்...


''முன்பு தேனி, மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய பகுதி மக்கள் குளத்து நீரையும், மழை நீரையும் மட்டுமே நம்பி விவசாயம் செய்துவந்தனர். நிரந்தரத் தண்ணீருக்குத் தீர்வு வேண்டி ஆய்வு செய்தபொழுது சிவகிரி மலையில் உற்பத்தி ஆகி வரும் முல்லை ஆறும், சதுரகிரி மலையில் உற்பத்தி ஆகி வரும் பெரியாறும் ஓர் இடத்தில் கலக்கும் இடத்தில் அணை கட்டுவதற்குத் திட்டமிடப்பட்டது. அதுதான், முல்லைப் பெரியாறு அணை. இதற்கு முன்னிலை வகித்தவர் ஆங்கிலப் பொறியாளர் ஜான் பென்னி குக். 1886-ல் சென்னை ராஜதானி கவர்னர் ஹாமில்டன் முன்னிலையில் தமிழகம் மற்றும் கேரளமும் இணைந்து 999 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் போடப்பட்டது. இதனால் ஓர் ஆண்டுக்கு ஏக்கருக்கு ஐந்து ரூபாய் வீதம் 8,000 ஏக்கருக்கு 40 ஆயிரம் ரூபாயை தமிழகம் கேரளாவுக்குக் கட்ட வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது. சென்னை பொறியாளர்கள் ரியாஸ், ஸ்மித் லோகன்பால் இவர்களோடு தலைமைப் பொறியாளர் பென்னி குக் முன்னிலையில் 1886-ம் ஆண்டு அணை கட்டத் தொடங்கி 10-10-1895 அன்று திறப்பு விழா நடந்தது.
இந்த அணை கட்டுவதற்கு ஏகப்பட்ட பொருட் செலவும் உயிர் சேதமும் ஏற்பட்டது. காலரா, பூச்சிக் கடி, யானை மற்றும் புலி போன்ற வன விலங்குகளால் 422 பேர் கொல்லப்பட்டதாக அரசுப் புள்ளி விவரங்கள் கூறுகிறது. அணையைக் கட்டிய கிழக்கிந்திய கம்பெனி போதுமான நிதி இல்லை என்று கைவிட்ட நிலையில், பென்னி குக், 'நான் பிறந்தது ஒரு முறைதான். அதற்குள் என் லட்சியத்தை அடைவேன்’ என்று தன்னுடைய நாட்டுக்குச் சென்று மனைவியின் நகைகள், சொத்துக்கள் எல்லாவற்றையும் விற்றுப் பணம் கொண்டுவந்து அணையைக் கட்டி முடித்தார். அதனால்தான் அவரது பெயரை.. லோகன், லோகி, லோக நாயகன், லோகநாயகி, பென்னிகுக் என்று இப்பகுதி மக்கள் சூட்டுகிறார்கள். அவர்கள் உருவில் பென்னி குக் இன்றும் வாழ்கிறார். கடைகள், வீதிகள், மன்றங்களுக்கும் அவர் பெயர் வைத்து நன்றி செலுத்துகிறார்கள். நீர் இருக்கும் வரை அவர் பெயர் இருக்கும்.

சமீப காலம் வரை எந்தப் பிரச்னையும் இல்லை. '999 ஆண்டு ஒப்பந்தம் பழமையானது. அதனால் புதிய ஒப்பந்தம் போடவேண்டும். புதிய அணை கட்ட வேண்டும்’ என்று கேரள அரசு 2006-ம் ஆண்டு சட்டசபையில் கேரள அணைகள் பாதுகாப்புச் சட்டம் என்று ஒரு மசோதாவை உருவாக்கியது. அதனால், தமிழக அரசு வழக்கமாக கொடுக்கும் 2.40 லட்சம் ரூபாயைப் பல கோடிகளாக உயர்த்தலாம் என்றும், புதிய அணை கட்டினால் மின்சாரம், சுற்றுலா பெருகும் என்றும் யோசித்தது கேரள அரசு.

தமிழகத்தில் முல்லைப் பெரியாறு அணை நீர் பாயும் வழித்தடங்களில் சுமார் 26 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் கேரளா மக்களுடையது. இது வரை தமிழகம் முல்லைப் பெரியாறு தண்ணீரைப் பயன்படுத்தியதற்காக 27 கோடியே 8 லட்சம் ரூபாய் கட்டியுள்ளது. இது போக கேரள மின்சாரத்திற்கு உத்தேசமாக சுமார் 116 கோடி செலவழித்துள்ளது. 1961 முதல் 2001 வரை கேரள போலீஸாருக்கு 1:4 என்ற விகிதத்தில் 50 ஆண்டுகளாக பல லட்சம் ரூபாய் சம்பளத்தை தமிழக அரசு வழங்கியுள்ளது.

1979-ம் ஆண்டு ஏற்பட்ட நில நடுக்கத்தில் அணையில் விரிசல் என்று கூறியது கேரள அரசு. அதனால் அணையைப் பலப்படுத்த தமிழக அரசு சுமார் 26.75 கோடி செலவிட்டது.

இப்போது விரிசல், நில நடுக்க ஆபத்து என்று கேரள மக்கள் இடையே வீண் பீதியைக் கிளப்புவதற்குக் காரணம் இருக்கிறது. அது, கேரளாவில் தற்போது நிகழும் அரசியல் சூழ்நிலைதான். கடந்த 2011-ம் ஆண்டு நடந்த கேரள சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி 72 இடங்களையும், இடதுசாரிகள் (கம்யூனிஸ்ட்) 68 இடங்களையும் கைப்பற்றினார்கள். இதனால், காங்கிரஸ் கட்சியின் உம்மண் சாண்டி முதல்வரானார்.

காங்கிரஸ் அமைச்சர் ஜேக்கப் கடந்த அக்டோபரில் இறந்ததால், விரைவில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. 140 இடங்களைக்கொண்ட கேரள சட்டசபையில் காங்கிரஸ் 71 இடங்களைப் பெற்றுள்ளது. இதில் ஆளும் கட்சியின் சட்டசபைத் தலைவர் ஒருவர் போக 70 என்று பலம் இருக்கிறது. ஒருவேளை காங்கிரஸ் தோற்றுவிட்டால், இடது சாரிகள் சம பலம் பெற்றுவிடுவார்கள். அதனால் எப்படியும் தேர்தலில் ஜெயிக்க வேண்டும் என்பதற்காக முதல்வர் உம்மண் சாண்டி, இந்த முல்லைப் பெரியாறு விவகாரத்தைப் பெரிதுபடுத்துகிறார். இதற்கு எதிர்ப்பு அரசியல் பண்ணவே, கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன், நடக்கவே முடியாத நிலையிலும் வந்து அணையைப் பார்வை​யிட்டு, 'கேரள மக்களின் உயிருக்​கும் உடைமைக்கும் பாதிப்பு’ என்று பொய்ப் பிரசாரம் செய்தார். அடுத்த நாளே, கேரள சட்டசபை பேச்சாளர் கார்த்திகேயன், மத்திய நீர்ப்பாசனத் துறை அமைச்சர் ஜோசப் உள்ளிட்டோர் வந்து அணையைப் பார்வையிட்டு, 'அணையில் நீர்க் கசிவு, விரிசல், நிலநடுக்கம்’ என்று பொய்ப் பிரசாரம் செய்கிறார்கள். உண்மையில் அணை வீக் இல்லை. கேரள அரசியல் கட்சிகள்தான் வீக்.

முல்லைப் பெரியாறு அணையின் உண்மை நிலை தெரியும் என்பதால், கேரள உயர் அதிகாரிகள் மௌனம் காக்கின்றனர். கடந்த வாரம் கேரள உயர் நீதிமன்றம், 'அணை உடையப்போகிறது என்கிறீர்கள், மக்களைப் பாதுகாக்க என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள்?’ என்று கேள்வி எழுப்பியது. அப்போது, 'அணை உடைந்தால் 480 வீடுகள்தான் பாதிக்கும்’ என்று பதில் தந்தது கேரள அரசு. 'அணை உடைந்தால் ஐந்து மாவட்டங்கள், 45 லட்சம் மக்கள் கொல்லப்படுவார்கள்’ என்று கூறப்பட்ட கருத்தை கேரள அட்வகேட் ஜெனரல் தண்டபாணி நிராகரித்த காரணத்தால்தான், அவரது உருவ பொம்மையை எரித்து வருகின்றனர் கேரள அரசியல்வாதிகள்.

முல்லைப் பெரியாறு அணை இரு புறமும் மலைகளால் சூழ்ந்துள்ளது. அதனால் அணை உடைந்தால், உப்புத் துறையில் 420 குடும்பங்களும், சப்பாத்துப் பகுதியில் 580 குடும்பங்களும் மட்டுமே பாதிப்பு அடையும். அந்த இரண்டு கிராமங்களுக்கும்கூட, பாதுகாப்பாக 36 அடி உயரத்தில் கரை கட்டப்பட்டு உள்ளது. இந்த உண்மையை எடுத்துக்கூறிய பொறியாளர்களையும், அங்கு உள்ள அரசியல்வாதிகள் கடுமையாக விமர்சிக்கிறார்கள். முன்பு அணை உடைவது போலவும், வெள்ளத்தால் மக்கள் அடித்துச் செல்லப்படுவதாகவும் குறும் படம் இயக்கினார்கள். இப்போது அதையே டேம் 999 என்ற பெயரில் படம் எடுத்து, கேரள மக்களின் உணர்வுகளைத் தூண்டுகிறார்கள்.

ஒரு கிலோ அரிசி உற்பத்திக்கு 236 லிட்டர் தண்ணீரும், ஒரு கிலோ காய்களுக்கு 86 லிட்டரும் ஒரு கிலோ பழத்துக்கு 112 லிட்டர் தண்ணீரும் தேவைப்படுகிறது. கேரளத்தில் இருந்து ஓர் ஆண்டிற்கு 12 முதல் 15 டி.எம்.சி. தண்ணீரை தமிழகம் வாங்குகிறது. ஆனால், இங்கே உற்பத்தி செய்த 3.26 லட்சம் டன் காய்கள், பழங்களை ஆண்டுதோறும் கேரளாவுக்கு அனுப்புகிறது. 2,000 மெட்ரிக் டன் பால் அனுப்புகிறது. இது வாங்கும் தண்ணீரைவிட அதிகம். ஒட்டுமொத்தமாகச் சொல்வது என்றால் 48% உணவுப்பொருளை கேரளாவுக்கு அனுப்புகிறது தமிழகம். ஆனாலும் தமிழன் வஞ்சிக்கப்படுவதுதான் வேதனை'' என்கிறார் அப்பாஸ்.

கேரள அரசியலுக்காக தமிழர்களின் வாழ்க்கை பணயம் வைக்கப்படுவதுதான் வேதனையான விஷயம்! 

-

முதல்வர் சொல்வது பொய்!

முல்லை பெரியாறு விவகாரம் குறித்து, 'நாம் தமிழ் மக்கள் பேரவை’ மற்றும் 'நிலம் நீர் சங்கம்’ இணைந்து சென்னையில் கருத்தரங்கு ஒன்றை நடந்தியது.

அதில் பேசிய தமிழக அரசின் முன்னாள் தலைமைப் பொறியாளர் அ.வீரப்பன், ''நில‌ ந‌டுக்க‌ம் ஏற்ப‌ட்டால் முல்லை பெரியாறு அணை உடைந்துவிடும் என்றும் சில‌ தின‌ங்க‌ளுக்கு முன் ஏற்ப‌ட்ட‌ சிறு ந‌டுக்க‌த்தில் அணை விரிச‌ல் விட்டிருப்ப‌தாக‌வும் போலியான‌ த‌க‌வ‌ல்க‌ளை அளித்து வ‌ருகிறார் கேர‌ள‌ முத‌ல்வ‌ர். நில‌ ஆய்வின் ப‌டி அந்த பகுதியில் 3.5 முதல் 4.2 ரிக்ட‌ர் அள‌வுதான் நில நடுக்கம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இது அணைக்கு எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது. ஒரு க‌ன‌ரக‌ லாரி ந‌ம்மைக் க‌ட‌ந்து செல்லும் போது ஏற்படும் உணர்வுதான், இந்த‌ அதிர்விலும் ஏற்ப‌டும்'' என்றார்.

No comments:

Post a Comment