நாடுகடத்தப்படும் ஆட்களை வீடியோ படம்பிடித்து இன்டர்நெட்டில் வெளியிடுவதன் மூலம், புதிதாக வரத் திட்டமிடும் ஆட்களுக்கு மிரட்டல் விட ஆஸ்திரேலியா திட்டமிட்டுள்ளது. உரிய அனுமதியின்றி நாட்டுக்குள் வருபவர்களின் கதி இப்படியாகும் என்று புரிய வைப்பதே இதன் நோக்கம் என்றும் கூறப்பட்டுள்ளது.
விசா இன்றி ஆஸ்திரேலியாவுக்கு படகுகளில் வரும் குடியேற்றவாசிகளை, மலேசியாவுக்கு அனுப்பி வைப்பதற்கான ஒப்பந்தம் ஒன்றை ஆஸ்திரேலியா செய்துள்ளது. இந்த ஏற்பாட்டின்படி ஆஸ்திரேலியாவில் குடியேறும் திட்டத்துடன் வந்த 800 பேர் விரைவில் மலேசியாவுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
இவர்கள் கப்பல்களில் ஏற்றப்பட்டு நாடுகடத்தப்படும் காட்சியையே வீடியோவில் படம்பிடித்து, இணையத்தில் வெளியிடத் திட்டமிடுகின்றது ஆஸ்திரேலியா.
ஆஸ்திரேலிய குடிவரவுத்துறை அமைச்சர் கிரிஸ் போவன், “இந்த ஒளிப்பதிவு, சட்டவிரோதமாக ஆஸ்திரேலியாவுக்கு வரத் திட்டமிடும் ஆட்களுக்கு கடுமையான சேதியொன்றைச் சொல்லப்போகின்றது. உரிய அனுமதியின்றி இந்த நாட்டுக்குள் நீங்கள் வந்தால், இதே கதிதான் உங்களுக்கும் ஏற்படும் என்பதே அந்த கடுமையான சேதி” என்று ஏ.பி.சி. ரேடியோவில் தெரிவித்துள்ளார்.
கடந்த காலத்திலும் ஆஸ்திரேலியா, சட்டவிரோத குடியேற்றவாசிகளை மிரட்டுவதற்காக சில ஒளிப்பதிவுகளை இணையத்தில் வெளியிட்டுள்ளது. ஆனால், அந்த ஒளிப்பதிவுகள் பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட விளம்பரங்கள் என்ற வகையிலேயே இருந்தன.
இம்முறைதான் முதல் தடவையாக நிஜமான குடியேற்றவாசிகளைப் படம்பிடித்து வெளியிடவுள்ளது.
இதில் சம்பந்தப்பட்டவர்கள், தமது படங்கள் வெளியிடப்படுவதை பிரைவசி ஆக்ட் சட்டப்படி எதிர்த்து சாலஞ்ச் செய்வது சாத்தியமே. படம் பிடிக்கப்படவுள்ளவர்கள் சரியான சட்ட ஆலோசனை பெற்றுச் செயற்பட்டால், படம் பிடிக்கும் திட்டம் ஆஸ்திரேலிய அரசுக்கு சிக்கலை ஏற்படுத்தலாம்.
|
No comments:
Post a Comment