வாஷிங்டன், அமெரிக்கா: செப்டெம்பர் 11 தாக்குதல்கள் நடைபெற்று சுமார் 10 வருடங்கள் ஆகியுள்ள நிலையில், அன்றைய தினத்தில் நடைபெற்ற முக்கிய உரையாடல்களின் ரிக்கார்டிங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அன்று காலை நடைபெற்ற பதட்டம் நிறைந்த வெவ்வேறு உரையாடல்களின் தொகுப்பு, இந்த ஆடியோ ஒலிப்பதிவுகள்.
உலகையே அதிர வைத்த அன்றைய தினத்தின் காலையில், பதட்டமான பல சம்பவங்கள் ஓரிரு மணி நேரத்துக்குள் நடந்து முடிந்தன. விமானங்கள் கடத்தப்படும் தகவல்கள் அடுத்தடுத்து வருகின்றன. ஏர் ட்ராபிக் கன்ட்ரோல் டவர் திரையிலிருந்து விமானங்கள் மறைந்து போகின்றன. ராணுவத்துக்கு தகவல் போகின்றது. மறைந்துபோன விமானங்களை தேட அமெரிக்க விமானப்படையின் போர் விமானங்கள் பறக்கத் தொடங்குகின்றன…
இப்படி வெவ்வேறு சம்பவங்கள் வெவ்வேறு இடங்களில் நடைபெற்றன. இவை எல்லாமே மிகவும் முக்கியமான இடங்கள் என்பதால், அங்கு மேற்கொள்ளப்படும் தொலைபேசி உரையாடல்கள் அனைத்தும் பதிவு செய்யப்படுவது வழக்கம்.
அந்த உரையாடல்களே, தற்போது வெளியிடப்பட்டுள்ளன.
செப்.11 தாக்குதலில் உளவுத்துறைகள் கோட்டைவிட்டது தொடர்பாக ஏற்கனவே விறுவிறுப்பு.காமில் படித்திருப்பீர்கள். இந்த ரிக்கார்டிங்குகள் அன்று நடைபெற்ற சம்பங்களின் மற்றொரு பக்கத்தைக் காட்டுகின்றன.
செப்டெம்பர் 11 தாக்குதல் முடிந்தபின், அதுபற்றிய விசாரணையில் பங்குகொண்ட புலனாய்வாளர் மைல்ஸ் காரா, “புலனாய்வில், பல அலுவலகங்களில் இருந்து எடுக்கப்பட்ட ஆடியோ ரிக்கார்டிங்களைக் கேட்க வேண்டியிருந்தது. அவை அனைத்தையும் இணைத்தால், ஆயிரக் கணக்கான மணி நேரம் கேட்க வேண்டியிருக்கும்.
அவற்றிலிருந்து, முக்கிய உரையாடல்களை மாத்திரம் பிரித்தெடுத்து, தொகுத்து தற்போது வெளியிடப்பட்டுள்ளது. ஒரு விஷயத்தை ஒப்புக் கொள்ள வேண்டும். செப்டெம்பர் 11ன் கதை, இதுவரை சொல்லப்பட்டதிலேயே மிக உச்சகட்ட ரியாலிட்டியுடன் இருப்பது இந்த ரிக்கார்டிங்களில்தான். மிகப் பயங்கரமான அன்றைய தினத்தில், நடந்த சம்பவங்களை, அது நடைபெற்ற கணங்களில், அதில் சம்மந்தப் பட்டவர்களின் குரல்களிலேயே கேட்கும் ரியாலிட்டி இது” என்கிறார்.
நியூயோர்க் ஏர் ட்ராபிக் கன்ட்ரோல் டவர்
தொகுப்பில் மொத்தம் 114 வெவ்வேறு ஒலிப்பதிவுகள் உள்ளன. வெவ்வேறு அலுவலகங்களில், அன்று காலை நடைபெற்ற டெலிபோன் உரையாடல்களின் போது, ரிக்கார்டிங் செய்யப்பட்டவை இவை.
இந்த ஆடியோ தொகுப்பு, 2001ம் ஆண்டு செப்டெம்பர் 11ம் தேதி காலை அமெரிக்காவில் நடைபெற்ற (இந்த விபத்து தொடர்பான) முக்கியமான இரு உரையாடல்கள் தவிர்க்கப்பட்ட நிலையிலேயே வெளியிடப்பட்டுள்ளது. அவற்றில் ஒன்று, யுனைட்டட் ஏர்லைன்ஸ் விமான இலக்கம் 93ன் காக்பிட் உரையாடல் ஒலிப்பதிவு. இது கிட்டத்தட்ட 30 நிமிடங்கள் நீளமானது.
அந்த விமானம் விபத்துக்குள்ளாகிய போது, அதிலிருந்த பயணிகள் சிலரது குடும்பத்தினர் இந்த ஒலிப்பதிவு வெளியாவதை விரும்பவில்லை. அதனால், குறிப்பிட்ட 30 நிமிட ஒலிப்பதிவு பகிரங்கப்படுத்தப்படுவது தடை செய்யப்பட்டுள்ளது.
அதேபோல, தவிர்க்கப்பட்ட மற்றொரு ஒலிப்பதிவு, செப். 11ம் தேதி காலை 9.28க்கு தொடங்கிய தொலைபேசி உரையாடல். கான்பிரன்ஸ் கால் முறையில் நடைபெற்ற இந்த உரையாடலில், அன்றைய அமெரிக்க அரசின் முக்கிய புள்ளிகளின் (சென்னி, ரம்ஸ்பீல்ட், மயர்ஸ்) குரல்கள் பதிவாகியுள்ளன. ராஜாங்க ரகசியம் என்ற பிரிவின்கீழ் வரும் இந்த ஒலிப்பதிவும், பகிரங்கப் படுத்தப்படவில்லை.
ஆடியோ தொகுப்பிலுள்ள ஓரிரு சுவாரசியமான உரையாடல்களைத் தெரிந்துகொள்ள விரும்புகிறீர்கள்? இதோ, விறுவிறுப்பு.காம் சில ஒலிப்பதிவு சாம்பிள்களின் எழுத்து வடிவத்தைத் தருகிறது. படித்துப் பாருங்களேன்.
ஏர் ட்ராபிக் கன்ட்ரோல் அலுவலக ராடாரில் விமானங்களில் பொசிஷன்கள்.
செம்.11ம் தேதி காலை. உலக வர்த்தக மையக் கட்டடத்தின் வடக்கு கோபுரத்தில் முதலாவர் விமானம் போய் மோதி 16 நிமிடங்களின்பின் தொடங்குகிறது இந்த ஒலிப்பதிவு. நியூபோர்க் ஏர் ட்ராபிக் கன்ட்ரோல் ராடார் சென்டரின் மேனேஜருக்கு வ6ந்த தொலைபேசி அழைப்பு இது.
“ஹேய். உங்களது ஜன்னல் வழியாக உடனே வெளியே பாருங்கள்” என்கிறது மறுமுனைக் குரல்.
“கிட்டத்தட்ட 4000 அடி உயரத்தில் பறக்கும் விமானம் ஒன்று தெரிகிறதா?”
“ஆம். நான் அதைத்தான் பார்க்கிறேன்”
“அந்த விமானம் ஒரு கட்டடத்தை நோக்கிப் போவது போல தெரிகிறதா?”
“ஆ.. மிகவேகமாக கீழ்நோக்கிச் சரிகிறது. 4000 அடி உயரத்துக்கு இறங்கிவிட்டது. ஒரே சரிவில் 800 அடி உயரம் குறைந்து விட்டது” என்றார் மேனேஜர். அவருக்கு முன்னால் இருந்த ராடார் திரையில் அந்த விமானம் பறக்கும் சரியான உயரத்தை இலக்கங்களில் அவரால் காண முடியும்.
“அது என்ன வகை விமானம் என்று உங்களால் கூறமுடியுமா?”
“இதோ.. ஒரு நிமிடத்தில் (ராடார்) திரையில் பார்த்து விடுகிறேன்”
அவர் ராடார் திரையில் அது எந்த விமானம் என்று பார்க்கும்வரை, ராடார் பிம்பம் திரையில் நிலைக்கவில்லை. மறைந்து விட்டது. அதாவது, கட்டடத்தில் போய் மோதிவிட்டது. ஏர் ட்ராபிக் கன்ட்ரோல் அலுவலகத்தில் இருந்த மற்றையவர்களின் குரல்கள் பதட்டமாக கூக்குரலிடுவது பதிவாகியுள்ளது. “கடவுளே.. மற்றொரு விமானம், உலக வர்த்தக மையக் கட்டடத்தில் வேகமாக மோதுகிறது”
இதுபோன்ற 114 தொலைபேசி உரையாடல்கள் இந்த ஒலிப்பதிவுத் தொகுப்பில் வரிசையாக உள்ளன. நீங்கள் முதலில் படித்த ஒலிப்பதிவில் ஒலித்த அதே மேனேஜர் எஃப்.ஏ.ஏ. அலுவலகத்தை அவசரமாக தொலைபேசியில் அழைப்பதும் பதிவாகியுள்ளது. “அவசரம். ராணுவ விமானங்களை வானத்துக்கு அனுப்பக்கூடிய அதிகாரம் உடைய யாராவது அதிகாரியுடன் நான் பேசவேண்டும். இணைப்பு தாருங்கள்” என்கிறார் நடுங்கும் குரலில்.
இந்த தொலைபேசி அழைப்பு வரும்வரை எஃப்.ஏ.ஏ. அலுவலகத்துக்கு விஷயமே தெரிந்திருக்கவில்லை!
ஏர் ட்ராபிக் கன்ட்ரோல் டவரில் வேலை செய்பவர்கள்
ராணுவத் தரப்புக்கும் விஷயம் உடனே தெரிவிக்கப்படவில்லை என்பதற்கு உதாரணமாக மற்றொரு ஒலிப்பதிவு உள்ளது. காலை 9.34க்கு நடைபெற்ற தொலைபேசி உரையாடல் அது.
ராணுவ ஏவியேஷன் பெண் அதிகாரி ஒருவர், வாஷிங்டன் சென்டரிலுள்ள எஃப்.ஏ.ஏ. அலுவலகத்தை தொலைபேசியில் அழைக்கிறார். அமெரிக்கன் ஏர்லைன்ஸின் விமான இலக்கம் 77 ராடாரில் இருந்து மாயமாக மறைந்துபோய், 30 நிமிடங்கள் ஆகின்றன என்பதை அறிந்து திகைக்கிறார் அவர்.
அந்த விமானத்துடன் தொடர்புகள் அறுந்து 30 நிமிடங்கள் ஆகியும், விஷயம் ராணுவத்துக்கு தெரியப்படுத்தப்படவில்லை!
போனை அட்டென்ட் பண்ணிய எஃப்.ஏ.ஏ. அலுவலக அதிகாரி ஒருவர், “பிளைட் 77 உடன், ராடார் தொடர்புகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டு விட்டன. விமானம் எங்கே என்பதோ, அதற்கு என்ன நடந்தது என்பதோ எமக்கு தெரியவில்லை. அது ஒரு போயிங் 767 விமானம் என்ற தகவல் மாத்திரமே தெரியும். எஃப்.ஏ.ஏ.யின் இன்டியானாபோலிஸ் சென்டர் தந்த தகவல் இவ்வளவுதான்” என்று கூறுவது பதிவாகியுள்ளது.
தொலைபேசியில் அழைத்த ராணுவ ஏவியேஷன் பெண் அதிகாரி, “எனக்கு தெரிய வேண்டியதெல்லாம், அந்த விமானம் எந்த இடத்தில் பறந்துகொண்டு இருந்தபோது கடைசியாக உங்களுடன் தொடர்பில் இருந்தது?” என்று கேட்கிறார். இந்த விபரம் தெரிந்தால்தானே, ராணுவம் தமது போர் விமானங்களை அந்த இடத்துக்கு தேடுதல் வேட்டைக்கு அனுப்ப முடியும்?
“ம்… அது எனக்கு சரியாகத் தெரியாது. எமக்கு தகவல் கொடுத்தது பாஸ்டன். அது, இன்டியானாபோலிஸ் சென்டர். நான் கடைசியாக அவர்களுடன் பேசியபோது, விமானம் 77, யோர்க் என்ற இடத்துக்கு கிழக்கில் பறப்பதாக சொன்னார்கள். யோர்க், எந்த மாநிலத்தில் இருக்கிறது என்றுகூட எனக்கு தெரியாது”
இந்த தொலைபேசி உரையாடல் முடிவடைந்து சரியாக 3 நிமிடங்களில், விமானம் 77, பென்டகனில் போய் மோதியது!
|
No comments:
Post a Comment