உங்களுக்குள் ஓர் உந்துதல் இருந்தால் மட்டுமே நீங்கள் நட்சத்திரமாக ஜொலிக்க முடியும்' எனும் ஃப்ரெடிரிக் நீட்சேவின் மேற்கோளுடன் துவங்குகிறது 'தி டர்ட்டி பிக்சர்!'
பலரும் எதிர்பார்த்தது போல இது 'சில்க்' ஸ்மிதாவின் வாழ்க்கையைச் சொல்லும் படம் அல்ல. வெறுமனே 'சில்க்' எனும் பிம்பத்தின் கவர்ச்சியை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட படம்.
படம் எண்பதுகளில் நடப்பதாகச் சித்தரிக்கப்பட்டு இருக்கிறது. சினிமாவில் சேரும் ஆசையுடன் தன் கிராமத்தில் இருந்து வெளியேறி நகரத்தை நோக்கி வருகிறாள், ரேஷ்மா. அங்கே அவளுக்கு ஆதரவு தருகிறார் ஒரு பெண்மணி. அவர் வீட்டில் தங்கி, முயற்சிகள் மேற்கொள்கிறாள்.
சினிமாவில் நடிக்க வாய்ப்புத் தேடிச் செல்லும் இடத்தில் 'நீ கனவுக்கன்னி மாதிரி இல்லை' என்று சொல்லிவிட்டு, 'இந்தா சாப்பாட்டுக்கு வெச்சுக்க' என்று ஐந்து ரூபாயை நீட்டுகிறான் திரைப்பட நிறுவனத்தின் ஆள் ஒருவன். அதை வாங்கிக் கொண்டு வரும் வழியில் தன் அன்புக்கும், மதிப்புக்கும் உரிய நடிகர் 'ஸ்மாஷிங் சூர்யா' எனும் சூர்யகாந்தின் படம் திரையிடப்பட்டிருப்பதைப் பார்க்கிறாள். அவரின் தீவிர விசறி இவள் என்பதால், உடனே டிக்கெட் வாங்கிக் கொண்டு திரையரங்கிற்குள் நுழைகிறாள்.
அங்கே அவளுக்கு அருகே அமர்ந்திருப்பவன் அவளிடம் சில்மிஷம் செய்ய... அவள் முறைத்துப் பார்க்க... ஐம்பது ரூபாயை நீட்டுகிறான். அவள் 'ஏன்?' என்று கேட்க, 'வா.. வேற இடத்துக்குப் போய் ஜாலியா இருக்கலாம்' என்று அழைக்கிறான். அவனை அவமானப்படுத்திவிட்டு, மீண்டும் அந்த திரைப்பட நிறுவனத்துக்கு வந்து அந்த ஆள் தந்த ஐந்து ரூபாயை விட்டெறிகிறாள். 'எவனோ ஒருத்தன் எனக்கு ஐம்பது ரூபாய் கொடுத்து கூப்பிடுறான். என்கிட்ட ஒன்னுமில்லாமையா அவன் தர்றான்..?' என்று கேட்டு விட்டு நடக்கிறாள்.
அந்த ஐம்பது ரூபாய் தான் அவளை அவளுக்கே தான் யார் என்பதை உணர்த்துகிறது. 'பசங்களுக்குத் தேவையானது என்கிட்ட இருக்கு. அப்ப நான் ஒசத்தியா, இல்ல அவங்களா?' என்று படத்தின் ஆரம்பக் காட்சி ஒன்றில் அவள் பேசும் வசனம் ஒன்று வருகிறது. அப்போது அவள் தன் உடலைப் பார்த்த விதத்துக்கும், அந்த ஐம்பது ரூபாய் உணர்த்திய விதத்துக்கும் உள்ள வேறுபாட்டையும் புரிந்து கொள்ள ஆரம்பிக்கிறாள். மீண்டும் ஒரு முறை திரைப்பட வாய்ப்பு கேட்கச் செல்லும் போது அங்கே நடன ஒத்திகை நடந்து கொண்டிருக்கிறது. ஆடவேண்டிய முக்கியமான பெண் வரவில்லை. 'நான் ஆடட்டுமா?' என்று கேட்டு விட்டு, சவுக்கால் தன்னைத் தானே அடித்துக் கொண்டு குனிந்து நிமிர்ந்து அவள் ஆடும் ஆட்டம் அந்தக் காட்சியின் கதாபாத்திரங்களை மட்டுமல்லாது ரசிகர்களையும் திருப்திப்படுத்துகிறது. பெண் உடல் என்பது போகத்துக்கான சந்தைப் பொருளாக மட்டுமே இருந்திருக்கிறது அன்றைக்கும், இன்றைக்கும்!
தான் நடித்த பாடல் காட்சி வரும் என்று ஆசையோடு திரையரங்கம் சென்று பார்க்கும் போது அவளுக்கு ஓர் ஏமாற்றம் காத்திருந்தது. அவள் நடித்த காட்சி வரவில்லை. படத்தின் 'ரஷ்' பார்க்கும் போது, காட்சியைத் துண்டித்துவிடுகிறான், அந்தப் படத்தின் இயக்குனர் ஆப்ரகாம். அதோடு மட்டுமல்லாமல், தன் காலணியைக் கழட்டி ரேஷ்மாவின் ஆட்டம் ஓடிக்கொண்டிருக்கும் திரையின் மீது வீசி எறிகிறான். இந்தக் காட்சியின் நுண்மையான அரசியல் என்னவெனில், நடிகையாக... அதுவும் கவர்ச்சி நடிகையாக இருக்கும் ஒருத்தியை அவள் துறை சார்ந்த ஒருவனே ஏற்றுக் கொள்வதில்லை என்பதைத்தான். படத்தின் பிற்பகுதியில், 'செக்ஸை வெச்சு படம் எடுக்குறீங்க... அதை திரையிடுறீங்க... அதை விமர்சிக்கிறீங்க... அதுக்கு விருதும் கொடுக்கறீங்க... ஆனா அதுல நடிக்கும் என்னை மட்டும் ஏத்துக்க மாட்டேன்றீங்க!' என்று ரேஷ்மா கேட்பாள். அந்தக் கேள்வி அன்றைக்கு இருந்த நடிகைகள், இன்றைக்கு இருக்கும் நடிகைகள் கேட்க நினைத்த / நினைக்கும் கேள்வியாகத்தான் தென்படுகிறது.
ஆப்ரகாம் இயக்கிய அந்தப் படம் விமர்சகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெறுகிறது. ஆனால் வணிக ரீதியாகத் தோல்வியைத் தழுவுகிறது. 'வேணுன்னா பாருங்க சார்... இந்தப் படத்துக்காக உங்க கையில ட்ராஃபி இருக்கும்!' என்று ஆப்ரகாம், தன் தயாரிப்பாளர் செல்வகணேஷிடம் சொல்ல அதற்கு அவர், 'ஆமா இன்னொரு கையில திருவோடு இருக்கும்!' என்கிறார். அவார்ட் ஃபிலிம் எடுப்பதை மட்டுமே குறிக்கோளாக வைத்து இயங்கி வந்த அந்தக் காலகட்டத்தின் இயக்குனர் மனப்பான்மையை விளக்குவதாக இந்தக் காட்சி இருக்கிறது. அப்போது, இயக்குனரின் உதவியாளர் ஒருவர் ரேஷ்மா ஆடிய காட்சி ஒன்று வெட்டப்பட்ட விஷயத்தை தயாரிப்பாளருக்குச் சொல்கிறான். அந்தப் பிரின்டுகளின் பாஸிட்டிவ்களை இயக்குனர் எரித்துவிட, தன்னிடம் இருக்கும் நெகட்டிவ்களைக் கொண்டு அந்தக் காட்சியைச் சேர்த்து படத்தை மீண்டும் திரையிடுகிறார் தயாரிப்பாளர். படம் வசூலை அள்ளுகிறது. ஆபாச நடனத்துக்குக் கிடைத்த வரவேற்பில் ஆப்ரகாம் காணாமல் போகிறான்.
அந்த ரேஷ்மாவைத் தேடிப் பிடித்து அவளை தன் படத்தில் நடிக்குமாறு அழைக்கிறார் செல்வகணேஷ். அவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருக்கும் போது சாலையில் 'சில்க்' என்று எழுதப்பட்ட விளம்பர வண்டி ஒன்று கடந்து செல்கிறது. 'இனிமே நீ ரேஷ்மா இல்லை. 'சில்க்'னு வெச்சிக்க!' என்கிறார் அவளிடம். 'சில்க்' உதயமாகிறாள்!
'சில்க்' வந்த பிறகு அடுத்தடுத்து காட்சிகள் விரைவாக நகர்கின்றன. முதல் படமே 'ஸ்மாஷிங் சூர்யா'வுடன்தான்! ஆரம்பத்தில் அவருடன் நடிக்கத் தயங்கி, அவமானம் அடைந்து, பிறகு அவர் அறைக்குச் சென்று அவரை 'செட்யூஸ்' செய்து, தன் அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு எல்லாவற்றையும் தூக்கி எறிந்துவிட்டு நடிக்க ஆரம்பிக்கிறாள். அப்போது துவங்கி க்ளைமேக்ஸுக்கு முன்பு வரை உடலை எடுத்துக் காட்டும் உடையுடன் வலம் வருகிறார் சில்க்.
'சில்க்' ஆக, வித்யா பாலன். தன்னுடைய கேரியரில் பெருமையாகச் சொல்லிக் கொள்ள ஒரு கேரக்டர் இது என்பதில் சந்தேகமே இல்லை. கிராமத்தில் இருந்து வரும் பெண்ணுக்குரிய 'தடால்' பேச்சு, சினிமாவுக்குள் நுழைந்த பிறகு ஆளுக்கு ஏற்றாற் போல் தன்னை மாற்றிக்கொள்ளும் குணம், 'மேடம் இன்னும் கொஞ்சம் ஹீட் வேணும்' என்று இயக்குனர் கேட்டதற்கு, 'ஸ்ஸ்... ஹா...' என்று ஒலி எழுப்பி, உடலை வளைந்து நெளிந்து நடிப்பது, 'ஒரு சில்க்குகே கண்ணு முழி பிதுங்குது... மூணு சில்க்னா லுங்கி கழண்டுறாது' என்று 'சில்க்' கெக்கலிக்கும் இடம், 'எத்தனை ஷகிலா வந்தாலும் 'சில்க்' ஆக முடியாது!' என்று சொல்லும் கம்பீரம், தான் தயாரித்த படம் ஃப்ளாப் ஆகும் போது கலங்கும் இடம், தன்னை பயன்படுத்திக் கொண்டவர்கள் தன்னை கைவிடும் போது கதறும் காட்சி, பணக் கஷ்டத்தினால் திண்டாடும் போது 'ப்ளூ ஃபிலிம்'மில் நடிக்கலாமா, வேண்டாமா என்று 'சில்க்' குழம்புவது என எல்லா ஸீன்களிலும் நீக்கமற நிறைந்து காணப்படுகிறார் வித்யா.
'ஸ்மாஷிங் சூர்யா'வாக நஸ்ரூதீன் ஷா. தனக்குக் கொடுக்கப்பட்ட கேரக்டருக்கு கச்சிதமாக நியாயம் செய்திருக்கிறார். இயக்குனர் தன்னிடம் கதை சொல்ல வரும் போது குறுக்கிட்டு, 'ஹீரோ அனாதையா இருக்குறதெல்லாம் சிக்ஸ்டீஸ்ல.. இப்ப ஹீரோவுக்கு ஒரு குடும்பம் இருக்கணும். ஒரு தங்கச்சி இருக்கணும். அவள் கற்பழிக்கப்படணும். அதுக்கு அவன் பழிவாங்கணும். படம் ஹிட்!' என்று சொல்லும் இடத்தில் அப்படியே அந்தக் காலகட்ட நாயகர்களை நம் கண் முன் நிறுத்திவிடுகிறார் ஷா.
இயக்குனர் ஆப்ரகாம் ஆக, இம்ரான் ஹாஷ்மி. 'மர்டர்', 'ஜன்னத்', 'ஒன்ஸ் அபான் எ டைம் இன் மும்பை' போன்ற பாலிவுட் படங்களில் நடித்தவருக்கு இதில் அவ்வளவாக ஸ்கோப் இல்லை எனினும், படம் முழுக்க இவர் பார்வையில் தான் நகர்கிறது.
சில காட்சிகளில் 'நைலா' என்ற பத்திரிகையாளர் வருகிறார். அன்றைய பாலிவுட் பத்திரிகைகள் எப்படி மஞ்சள் பத்திரிகைகளாக இருந்தன என்பதற்கு இவர் எழுதும் கட்டுரைகள் சான்றாக அமைகிறது. அண்ணன் சூர்யகாந்த்துடன் நடிப்பதையும், தம்பி ரமாகாந்த்துடன் பழகுவதையும் முடிச்சுப் போட்டு, 'சில்க் இன்றைய சினிமாவின் நவீன திரௌபதி' என்ற ஃப்ளேக்லைனுடன் வரும் கட்டுரையை 'சில்க்' வாசிப்பதாக வைத்திருக்கும் காட்சி இதை எதிரொலிக்கும். ஆனால் அதே பத்திரிகையாளர் சூர்யகாந்த்தைப் பேட்டி காண வரும் போது, 'என்ன செய்யறது... ஆண்களை மகான்களாகக் காட்ட, சில சமயம் பெண்களை பிசாசாகக் காட்ட வேண்டியிருக்கு!' என்று சொல்லும் இடம்... பிரமாதம்!
எண்பதுகளின் திரை உலகத்தை, ரசிகர் உள்ளத்தைக் கொள்ளை கொண்ட கனவுக்கன்னி 'சில்க்' ஸ்மிதாவின் வாழ்க்கையை எடுக்க நினைத்ததில் ஒன்றும் தவறில்லை. ஆனால் அவர் பட்ட கஷ்டங்களையும், பிறருக்குச் செய்த உதவிகளையும் மறந்துவிட்டு வெறுமனே கவர்ச்சி, சிகரெட், பிராண்டி, குதிரை ரேஸ் போன்ற நெகட்டிவ் பக்கங்களைக் காட்டியதில் தான் தோற்றுப் போகிறார் இயக்குனர் மிலன் லுதாரியா. அதேபோல ஒரே காட்சியில் தோன்றியவுடன், 'சினிமாவுக்குத் தேவையானது மூணு விஷயம் மட்டும்தான்... என்டர்டெயின்மென்ட்.. என்டர்டெயின்மென்ட்.. என்டர்டெயின்மென்ட்..' என்று 'சில்க்', ஆபரகாமிடம் சொல்லும் இடமும் 'அட போங்கப்பா...' ரகம்!
'அலைகள் ஓய்வதில்லை' படத்தில் ராதாவின் காதலுக்கு உதவி செய்ததை அறிந்து தியாகராஜன் 'சில்க்'கை அறைவார். கண்ணில் நீர் தேங்கி நிற்க, அவர் பேசும் வசனம் பார்ப்பவரை அவர்மேல் பரிதாபம் கொள்ளச் செய்யும். அந்த இரக்கத்தில் துளி அளவேனும், இந்தப் படத்தில் 'சில்க்' ரேஷ்மா க்ளைமேக்ஸில் இறக்கும் போது சுத்தமாகத் தோன்றவில்லை. 'சில்க்' ஸ்மிதாவை ஒரு 'போர்னோகிராஃபிக் ஆர்டிஸ்ட்' ஆக கற்பிதம் செய்து கொண்டுள்ள பாலிவுட்டில், வணிகத்தைத் தாண்டி ஒரு நடிகையின் வாழ்க்கையை உண்மையான அக்கறையுடன் செய்ய வேண்டும் என்று நாம் எதிர்பார்ப்பது ஏமாற்றமாகவே அமையும்!
படத்தில் விருது வழங்கும் நிகழ்வு ஒன்று வருகிறது. 'இப்ப நான் நாலு பட்டனை கழட்டுனா இங்க இருக்குறவங்களுக்கு வேர்த்துக் கொட்டும். ஆனா நான் செய்ய மாட்டேன். நீங்க எல்லோரும் நாகரிகம்கிற போர்வையில இருக்கீங்க. ஃபேமிலியா இருக்கும் போது மூஞ்சியைத் திருப்பிக்கிறீங்க. ஆனா தனியா படத்தைப் பார்த்துட்டு ஃபேமிலியைப் பெருக்கிக்கிறீங்க. நீங்க கடைசி வரைக்கும் நாகரிகப் போர்வையிலேயே இருங்க. ஆனா நான் என் ரசிகர்களுக்குக் காட்டிட்டேதான் இருப்பேன்!' என்று 'சில்க்' ரேஷ்மா பேசும் வசனம் நிச்சயம் உங்களைக் கைதட்ட வைக்கும். 'மேல போனாலும் 'சில்க்' ஜொலிச்சுகிட்டேதான் இருப்பா!' என்று 'சில்க்'கின் சவத்திற்கு சிதை மூட்டிய பிறகு ஆப்ரகாம் கலங்கும் இடத்தில்... தியேட்டரில் விசில்!
'எதிர்பாலினத்தவரை மனதளவில் துகிலுரித்துப் பார்க்கும் ஆர்வம் ஒவ்வொருவரிடத்திலும் இருக்கிறது' என்று பாலியல் தொடர்பான உளவியலை வரையறுக்கிறார் சிக்மன்ட் ஃப்ராய்ட். ஆனால் 'சில்க்' ரேஷ்மா சொல்வது போல நாம் நாகரிகம் என்கிற போர்வையைப் போர்த்திக் கொண்டு 'ச்சீ... அதெல்லாம் அழுக்கு. அசிங்கம்' என்கிறோம். நமக்கு அசிங்கமாக இருப்பது 'சில்க்'குக்கு அழகு மிகுந்ததாகத் தோன்றி இருக்கிறது. 'அழகு உண்மையானது. உண்மையே அழகு!' என்று ஓர் இடத்தில் எழுதுகிறான் கவிஞன் கீட்ஸ். அப்படிப் பார்த்தால், 'ஆபாசம்' என்று சொல்லப்படுகிற அந்த அசிங்கம் உண்மையானது தான். அழகானதுதான். Yes, Dirty is Beauty! (Not the Picture).
|
No comments:
Post a Comment