Sunday, December 11, 2011

விழித்துக் கொண்ட காம உலகம்! -மரண கானா விஜி


மரணத்தை அடிக்கடி பாத்து பழகிப் போய்ட்ட எனக்கு, மனசுங்கிறதே மரத்துப் போய்டுச்சு. சாவை பாத்தா எந்த சஞ்சலமும் ஏற்படறதே இல்ல. இப்படி தறிகெட்டுப் போன நான், அடிக்கடி ஜெயிலுக்குப் போற நெலமையும் வந்துச்சு. துட்டுக்காக, பொய்க் கேஸை ஒத்துக்கிட்டு ஜெயிலுக்குப் போவேன். 15 நாள் உள்ளே இருந்துட்டு வெளியே வந்துடுவேன்.

ஜெயில்லயும் நான் சும்மா இருந்தது கெடையாது. சாவை பத்தி கானா கட்டுவேன். ஜெயிலே ரசிக்கும். கைதி கள்லாம், "பாடுறா விஜி... பாடுறா!'ன்னு கைத்தட்டுவாங்கோ. ஒரு கானா பாடுனா... ஆயிரம், ரெண்டாயிரம்னு ரூவா கெடைக்கும். கைதிங்க அவங்ககிட்டே இருக்கிற காசை கொடுப்பாங்க. அதுதான் இந்த பணம்... அதனால எனக்கு ஜெயில்ல இருக்கிற ஃபீலிங்கே இருக்காது. ஜெயில்லயும் எனக்கு சில உறவுகள் கெடைச்சது. அந்த உறவுகளும் ஒரு கட்டத்துல செத்து போனது. அதையெல்லாம் என் மனசு ஈஸியா எடுத்துக்கிட்டது. அதுக்குப் பெறகு நான் ஜெயிலுக் குப் போறதே இல்லே. எல்லாத்தையும் விட்டுட்டேன்.

அப்புறம்தான் சாவு நடக்கிற வீடுகள்ல மரண கானா பாடறதுன்னு முடிவு பண்ணி பாட ஆரம்பிச்சேன். ராத்திரி முழுக்க மரண கானா பாட கூப்பிடுவாங்க. விடிய... விடிய... பாடிக்கிட்டே இருப்பேன். தொடர்ந்து 9 மணி நேரம் பாடுவேன். இந்த 9 மணி நேரத்துல, 24 கதைகள் என் கானா வுல சொல்லுவேன். எல்லா கதைகளுமே கறுப்பு பறையன் சொல்லிக் கொடுத்த மரண சித்தாந்தங்கள்தான் அடங்கியிருக்கும். ஒவ் வொரு சாவு வீட்லயும் எனக்கு ஒவ்வொரு அனுபவம் கெடைச்சது. அந்த அனுபவ மெல்லாம் ஜீரணிக்க முடியாத சோகமா இருக்கும்.

இன்னிக்கு 5 வகையான கானா இருந்தாலும் ஒரிஜினல் கானாங் கிறது மரண கானாதான். அந்த கானாவை பாடுற ஒரே ஆள் தமிழ்நாட்டுலயே நான் மட்டும்தான்.

கானாங்கிறதும் ஒரு மிகப் பெரிய இசை வடிவம்தான். ஆனா, ஒரிஜினல் கானாவை திருடி அதுக்கு மியூசிக் போட்டு பொழைச்சிக்கிட்டு இருக்காங்க சினிமாக்காரங்க. இன்னிக்கு சினிமாவுல வர்ற கானா எதுவும் உண்மையான கானாவோ கானா வடிவமோ கெடையாது. ரசினிகாந்த்தின் பாச்சா பாரு... பாச்சா பாரு... பாட்டு, நாக்க முக்க... நாக்க முக்க... பாட்டு எல்லாமே கானாவுல இருந்து திருடியதுதான்.

கானாங்கிற இசை வடி வத்தை மேடை இசை கச் சேரிகள்ல கொண்டு வரணும்னு ஆசைப்பட் டேன். இதுக்காக, கர்நாடக கச்சேரி நடக்கும் சபாக்கள அணுகி, கானாவுக்கு வாய்ப்புக் கேட்டு அலஞ்சேன். ஆனா, ரெண்டு காலும் சூம்பிப் போன என் உருவத்தையும் அழுக்குப் படிஞ்ச துணிமணிகளையும் பாத்து எல்லாருமே என்னை தொரத்தி அடிச்சாங்க. எல்லா எடத்துலயும் பாப்பானுங்க ஆதிக்கம்தான் இருந்துச்சு. தமிழிசையை அனுமதிக்காதவங்க என் மரண கானாவையா மேடை ஏத்துவாங்கன்னு ஆத்திரமெல்லாம் அப்போ வந்துச்சு.

இதுக்காக ஒருமுறை குன்னக்குடி வைத்தியநாதனை நான் பார்த்தப்போ, "ஏய்... ஏய்... வெளியே போ. மொதல்ல குளிச்சிட்டு வா! குளிக்க வழியில்லாதவனுக்கெல்லாம் எதுக்குடா இசை'ன்னு சொல்லி தொரத்தினாரு. அடுத்த நாளு குளிச்சிட்டு போனேன்.

"கானாங்கிறது சேரில பாடுறது. அது கேவலமானது. நீ, சங்கீதம் கத்துக்கிட்டு வா! அப்புறம் கானாங்கிற மசிர பத்தி பேசலாம்'ன்னாரு. அதுக்கு நான், "உங்க சங்கீதத்துக்குள்லெல்லாம் கானா அடங்காது. சங்கீதம் வேற, கானா வேற. என்னால சங்கீதம் கத்துக்க முடியும். அப்படி கத்துக்கிட்டா சங்கீதம்தான் இருக்கும் கானா இருக்காது'ன்னு கத்திட்டு வந்தேன்.

இப்படி ஏகப்பட்ட சோக அனுபவம் கிடைச்சது. அந்த கோவத்துலதான் கர்நாடக சங்கீதத்துக்கு போட்டியா... நானும் கானாவுல நிறைய ராகத்தைப் பிரிச்சேன். சங்கீதத்துல சரிகமபதநின்னு பிரிச்சாங்க. நான் அத கானாவுல எடுப்பு, தொடுப்பு, முடிப்புன்னு பிரிச் சேன். அவங்க தவள கல்யாணி ராகம்னாங்க. அதுக்குப் போட்டியா சட்டி முனியம்மா ராகத்தை வெச்சேன். சிந்து பைரவின்னாங்க. நான் குண்டு திருநான்னு ராகம் போட்டேன். பஞ்ச ரத்ன கீர்த்தனைன்னாங்க. நானோ கஞ்சாரத்ன கீர்த்தனை உருவாக்குனேன். பெயர்தான் இப்படி ஏட்டிக்குப் போட்டியா இருக்கும். ஆனா, அர்த் தங்கள்லாம் கர்நாடக இசையை விட ஒயர்ந்ததா இருக்கும்.

இப்படியெல்லாம் ராகங்களை உருவாக்கி கர்நாடக இசையை... ஆதிக்கத்தை ஒழிக்க மரண வீடுகள்ல கானா பாடுறதையே என்னோட வாழ்க்கையா மாத்திக்கிட்டேன். இதுவரை 3000-த்துக் கும் அதிகமான வீடுகள்ல பாடியிருக் கேன். என்னை அறிஞ்ச அய்யா வி.கே.டி. பாலன், என்னை வெளி உலகத்துக்கு அடையாளப்படுத்தினாரு. அதன் பெறகு முற்போக்கு எழுத்தாளர் சங்கமும், திராவிடர் கழகமும், கூத்துப்பட்டறையும் என்னை ஆதரிச்சி, அரவணைச்சி முற் போக்கு மேடைகள் அமைச்சு கொடுத் தாங்கோ. இந்த மேடைகள்ல அய்யா பெரியாரின் தத்துவங்களையும் கானா வடிவத்துல பாடுனேன். அது மட்டுமில் லாம பார்ப்பன இசைக்கு எதிரா அதனை கிழிக்கிற விதத்துல இந்த மேடைகள பயன்படுத்திக்கிட்டேன். விளிம்பு நிலை மக்களின் குரலா என் மரணகானா ஒலிச் சிக்கிட்டு இருந்தது. என் பணியைப் பாத்து, கானாவைக் கேட்டு மனம் உருகிய அய்யா தி.க.வீரமணி, எனக்காக ஒரு பாராட்டு விழா நடத்தி எனக்கு பெரியார் விருது கொடுத்து கௌரவிச்சாரு. அதே மாதிரி, என்னப் பத்தி தெரிஞ்சுக்கிட்ட கனிமொழி அவர்கள் சங்கம நிகழ்வில் எனக்கு வாய்ப்பு தந்து பெருமைப் படுத்தினாங்க. இந்த வாய்ப்புகள்தான் இன்னிக்கு கல்லூரிகளிலும் பல்கலைக் கழகத்திலும் படிக்கும் மாணவர்களுக்கு தன்னம்பிக்கை ஊக்கப்பாடல்களைப் பாடுபவனாக வலம் வருகிறேன்'' என்று நீண்டநேரம் மூச்சுவிடாமல் நம்மிடம் தன்னைப் பற்றி பகிர்ந்துகொண்டார் விஜி.

""நான் சொல்றதுக்கு நெறைய இருக்கு. ஆனா, அதையெல்லாம் தாங்கிக் கிற மனவலிமை உங்களுக்கு இருக்காது. வேறொரு சந்தர்ப்பத்துல நெறைய பேசறேன்.

இதுவரை நிஜ மனுசங்களோட சாவைப் பத்தி நெறைய சொல்லியிருக்கேன். ஆனா, என்னையும் பாதிச்ச ஒரு மரணம் இருக்கு. அதுதான்... சினி மாங்கிற நெழல் உலக அழகி சில்க்கின் சாவுதான். நடிகைகளிலே எனக்குப் பிடிச்ச முகம் சில்க்கோட மொகம்தான். அந்த அழகிய பார்த்துடணும்னு ரொம்ப நாள் முயற்சி பண்ணியிருக்கேன். ஆனா முடியலை. ஒருநா சில்க் செத்துட்டதா கேள்விப்பட்டு துடிச்சிட்டேன்.

சாவுலயாவது அந்த மொகத்தை தரிசிச்சிடணும்னு சில்க் வீட்டுக்குப் போனேன். உள்ளே விடாம தொரத்தி அடிச்சாங்க. கோபம் கோபமா வந்துச்சு. கோபம் வந்தா என்னால என்ன பண்ண முடியும்? அழுதுக் கிட்டே இருந்தேன். வி.ஆர்.புரம் சுடுகாட்டுக்குத்தான் சில்க்கின் பாடி வருதுன்னு தெரிஞ்சிக்கிட்டு முன்கூட்டியே அங்கு போயிட் டேன். அதே மாதிரி வந்துச்சு சில்க்கோட பாடி. ஏனோ... ஒண்ணு, ரெண்டு நடிகர்கள்தான் வந்திருந்தாங்க. சில்க்கை பொணமா பார்த்து தாங்க முடி யாம விம்மி விம்மி அழுதேன். அவ கால தொட்டு கும்பிட நகர்ந்து நகர்ந்து போனேன். அங்கிருந்த தாடிக்காரன் விடல. என்னை மெரட்டினான். வெளியே போடான்னு சத்தம் போட்டான்.

அதுவரைக்கும் பொறுமையா இருந்த நான் ஆவேசப்பட்டேன். தாடிக்காரன்ட்ட, "யோவ்... இங்கு நான்தான் வெட்டியான். நான் பாட்டுப் பாடாம எரிக்க முடியாது'ன்னு நான் அவன மிரட்டினேன். அங்கிருந்த பொணம் எரிக்கும் குணாவும் இத ஆமோதிச்சாரு. அதுக்குப் பெறகு தாடிக்காரன் என்னை தடுக்கல.

சில்க்கின் கால்மாட்டில் உட்கார்ந்து, அந்தக் கால தொட்டுக் கும்பிட்டுட்டு... பாட ஆரம்பிச்சேன். சில்க்கைப் பத்தி எப்படியோ பாட ஆரம்பிச்ச நான், "அழகுப் பெட்டகம் உறங்கிவிட்டது, காம உலகம் விழித்துக் கொண் டது'ன்னு என் மரண கானாவை முடிச்சேன். தாடிக்காரன் கண்ணிலிருந்து கண்ணீர் வழிஞ் சது. ரொம்ப நாளைக் குப் பிறகு அன்னிக்கு நான் அழுதேன்'' என்று பழைய சம்பவங்களில் ஆழ்ந்துபோன விஜி சோகமயமானார்.

கண்களைத் துடைத் துக்கொண்டு மீண்டும் நம்மிடம் பேசிய விஜி, ""உலக சித்தாந்தங் களுக்கு முன் என் மரண சித்தாந்தங் களை வைத்து கானா எனும் கலை மீது நம்பிக்கை கொண்டு அதுலயே வாழ்ந்துக் கிட்டு இருக்கேன். கடந்த 30 வருட காலங்கள்ல நான் ஒரு கானா கலைஞனா வாழ்ந்ததைவிட குற்றவாளியா வாழ்ந்ததுதான் அதிகம். அந்த கசப்பையெல்லாம் மறக்க நெனைக்கிறேன். மனுச வாழ்க்கையில வெளியே தெரியாத, காட்டப்படாத இன்னொரு பக்கத்தையும் வலியையும் இந்த ஒலகம் தெரிஞ்சிக்கிடட்டும். அதுமூலம் என் மனசுல இருக்கிற ரணம், வேதனை குறையட்டும்ங் கிறதுக்காகத்தான் நக்கீரனிடம் என்னைப் பத்தி பகிர்ந்துக்கிட்டேன்.

கடைசியா நான் வேண்டிக்கிறதெல்லாம்... என் வாழ்க்கையில இன்னொரு விஜியை நான் சந்திக்கக்கூடாது. ஆனா... அய்யா வி.கே.டி. பாலனைப் போல ஆயிரம் பேரை நான் சந்திக்கணும். இது என் ஆசை. நான் செத்துப் போயிட் டேன்னு என்னைக் காவது கேள்விப் பட்டா... எனக்காக நக்கீரன் வாசகர்கள் ரெண்டு சொட்டு கண்ணீர் சிந்துவாங்க. அது போதும் எனக்கு'' என்று முடித்தார் ரொம்பவும் உணர்ச்சி வயப்பட்டவராக மரணகானா விஜி.

No comments:

Post a Comment