Monday, December 27, 2010

தகவல் அறியும் உரிமை சட்டத்தை நாடியதால் வேலைவாய்ப்பு மறுப்பு : போராட்டத்தில் இளைஞர்


ராமநாதபுரம் : தகவல் அறியும் உரிமை சட்டத்தை நாடியதால், தட்டிப்பறிக்கப்பட்ட வேலையை பெற ராமநாதபுரம் இளைஞர் போராடி வருகிறார்.


ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் அருகே அளிந்திக்கோட்டையை சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவரது தந்தை முன்னாள் ராணுவ வீரர் முத்து. ராமமூர்த்தி இளங்கலை பட்டம் பெற்ற நிலையில், கர்நாடகாவில் உடற்கல்வி ஆசிரியர்(சி.பி.இ.டி.,)படித்தார். 2005 ஜன., 6ல் ராமநாதபுரம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் சான்றிதழை பதிவு செய்தார். முன்னாள் ராணுவ வீரரின் மகன் என்றதால், முன்னுரிமை சான்றிதழும் பதிவானது. வெளிமாநிலத்தில் படித்ததால், தமிழ்நாடு பள்ளிகல்வித்துறை வழங்கிய மதிப்பீடு சான்றிதழை சமர்ப்பித்து, அடையாள அட்டையில் வேலைவாய்ப்பு அலுவலரின் கையெழுத்திடப்பட்டது. இதற்கிடையில் அரசு அறிவித்த உடற்கல்வி ஆசிரியர் பணிக்கான 853 பணியிடங்களுக்கு பதிவு மூப்பு அடிப்படையில் பங்கேற்றார்.



இதற்கான சான்றிதழ் சரிபார்க்கும் பணி கடந்த மே 26ல் நடந்தது. இதில் தேர்வு குழு கேட்ட அனைத்து சான்றிதழையும் ராமமூர்த்தி ஒப்படைத்தார். பின் ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட தேர்வு முடிவில், ராமமூர்த்தி பெயர் மட்டும் விடுபட்டிருந்தது. அவருக்கு பின்னால் பதிவு செய்த வேறு மாவட்டத்தை சேர்ந்த ஏழு பேர் மட்டும் தேர்வு செய்யப்பட்டனர். "மதிப்பீடு பெறாததே, ராமமூர்த்தி தேர்வாகாமல் போனதற்கு காரணம்,' எனவும் தெரிவிக்கப்பட்டது. அழைப்பு கடிதத்தில் மதிப்பீடு சான்றிதழ் கேட்கப்படாத நிலையில், அதை காரணம் காட்டி நிராகரிக்கப்பட்டது ராமமூர்த்திக்கு ஏமாற்றத்தை தந்தது. இது குறித்து அறிய தகவல் அறியும் உரிமை சட்டத்தை நாடினார். இதை காரணம் காட்டி ஆசிரியர் தேர்வு வாரியம் அவரை கைவிட்டது. தேர்வான அனைவரும் பணியில் சேர்ந்த நிலையில், தனது வாய்ப்புக்காக பல்வேறு வழியில் தொடர்ந்து போராடி வருகிறார்.


ராமமூர்த்தி கூறியதாவது: அழைப்பு கடிதத்தில் குறிப்பிட்ட சான்றிதழ்களை முறையாக கொடுத்திருந்தேன். நான் மதிப்பீடு சான்றிதழ் பெற்றது குறித்து அடையாள அட்டையில் வேலைவாய்ப்பு அலுவலர் சான்று அளித்துள்ளார். இதை அறிய தகவல் அறியும் உரிமை சட்டத்தை நாடியதால், காழ்ப்புணர்ச்சியுடன் என்னை பழிவாங்குகின்றனர், என்றார்.

No comments:

Post a Comment