எனக்கு எப்பொழுதும் ஒரு பழக்கம் உண்டு. விலை அதிகாமான காய்கறிகளை வாங்குவதை தவிர்த்துவிடுவேன். விலைக் குறைந்தவைகளை அதிகமாக வாங்குவேன்.
நான் கிராமத்தில் பிறந்து வளர்ந்ததால், எனக்கு புடலங்காய், முருங்கைக்காய் போன்றைவைகள் எப்பொழுதும் சாதாரணமாகப்படும். கிராமத்தில் அவைகளை யாரும் வாங்க மாட்டார்கள்/விரும்பமாட்டார்கள். மற்றவரை திட்டுவதற்கு கூட 'புடலங்காய்' என்று சொல்வார்கள். அவ்வளவு மதிப்பு அந்த புடலங்காய்க்கு! முருங்கைக்காய் பறிப்பார் யாருமின்றி மரத்தில் முற்றித் தொங்கும். இது சில வருடங்களுக்கு முந்தைய நிலை.
இப்பொழுதும், அதே நிலம் இருக்கிறது. ஆனால், மரமில்லை. மரத்தை பராமரிக்க மக்களிடம் மனமுமில்லை. இதற்கெல்லாம் அடிப்படைக் காரணம் விவசாயத்தின் மீது மக்களுக்கும் அரசுக்கும் அக்கறை இல்லாமல் போனதுதான்.
கிலோ 50 ரூபாய் விற்கப்படும் தக்காளி திடிரென்று ஒருநாள் கிலோ 50 காசுக்கு விற்கப்படும். அன்று விவசாயிகள் அதை ரோட்டில் கொட்டி அழிப்பார்கள். இது மாதிரி உற்பத்தியாகின்ற பொருட்களை விற்க முடியாமல் அவதிப்படும் விவசாயி, எதை நம்பி மீண்டும் தக்காளி பயிரிடுவார்?
எதிர்காலத்தில், "கையில் பணமிருக்கும், வாங்க பொருட்கள் இருக்காது" என்று சிலர் அடிக்கடி சொல்வார்கள். அது இப்பொழுதே உண்மையாகி வருவது, நிச்சயம் வேதனைதான்.
இதைப் படிப்பவர்கள், உங்களுடைய எண்ணங்களையும், தீர்வுகளையும் பின்னூட்டமாகவோ அல்லது தனிப்பதிவாகவோ எழுதினால் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படும் என்று நம்புகிறேன். அதனால்தான், இந்தப் பதிவை மிக விரிவாக எழுதவில்லை. எல்லோரும் இதில் பங்கேற்க வேண்டும் என்பதே எனது விருப்பம்.
|
No comments:
Post a Comment