கல்லூரியில் படித்த 'நெருங்கிய' நண்பர்களின் முகவரியை எனது ஞாபகத்தில் வைத்துக் கொண்டு, மற்ற நண்பர்களின் முகவரியை மட்டும் எழுதி வைத்துக் கொண்டேன். காலப்போக்கில், வாழ்க்கைப் போராட்டத்தில் ஞாபகத்திலிருந்த 'நெருங்கிய' நண்பர்களின் முகவரிகள் மறந்து போய்விட்டது. இப்பொழுது அவர்களைக் கண்டறிய பல வழிகளில் முயற்சி செய்தேன். என் ஞாபகத்தில் உள்ள ஊர் பெயரைக் கொண்டு, சிலருக்கு கடிதம் எழுதினேன். அதன் படி ஒரு நண்பரை கண்டறிந்தேன். அவர் மூலம் மற்றவரைப் பிடிக்கலாம் என்றால், அவரும் மற்றவர்களின் பெயரை மட்டும் சொல்கிறார். மற்றபடி ஒரு முன்னேற்றமும் இல்லை.
அண்மையில் தமிழக அரசு, என்னுடன் படித்தவர்களுக்கு பதிவு மூப்பு அடிப்படையில் வேலை வழங்க உள்ளதை அறிந்தேன். இணையத்தில் பதிவு மூப்பு பட்டியலில் நண்பர்களின் பெயரைத்தேடினேன். அவர்களின் பெயர் இருந்ததும், அவர்களை நேரில் சந்தித்த மகிழ்ச்சி ஏற்பட்டது. அவர்கள் பணி நியமன ஆணை வாங்க வரும் தேதியறிந்து, அங்கு சென்று நண்பர்களை மீட்டெடுத்தேன். அவர்கள் நான் அங்கு வருவேன் என்று எதிர்பார்க்கவில்லை. இருபத்தி ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக எந்தவித தகவல் தொடர்பும் இல்லாமல், திடிரென்று நண்பர்களைச் சந்தித்ததில் என்னுடைய கல்லூரி நாட்களின்
நினைவுகளும், அந்த மனநிலையும் எனக்கு வந்துவிட்டதாக தோன்றுகிறது.
இப்பொழுது எனக்குள் ஓர் இருபது வயது இளைஞன் இருப்பதாக உணர்கிறேன்.
நீங்களும், நீண்டநாள் சந்திக்காத உங்களுடைய 'நெருங்கிய' கல்லூரி தோழர்கள்/தோழிகளை சந்தித்து, புத்துணர்ச்சிப் பெற வேண்டும் என்பதே என்னுடைய ஆசை.
|
No comments:
Post a Comment