Monday, December 27, 2010

ரகசியம் இப்போது தெரிகிறதல்லவா?


காலையில் எழும்போது தேநீருக்கு பதில் தேனும், சுடுநீரும், காலை உணவாக பாலில் ஊறிய அவல், காரட் மற்றும் துளசி, மதிய உணவாக இஞ்சி சூப்புடன், ஆவியில் வெந்த பச்சை காய்கறிகளுடன் சுட்ட சப்பாத்தி மற்றும் பருப்புக்கூட்டு, மாலையில் பாகற்காய் சூப் அல்லது எலுமிச்சை சர்பத், இரவில் முளைவிட்ட தானியங்களுடன் ஆப்பிள், வாழைப்பழம், பப்பாளி, மாதுளை, அன்னாசி, திராட்சை பழக்கலவைகள் என, ஒருநாள் உணவில் இடையிடையே போதுமான அளவு, தண்ணீருடன் கூடிய இயற்கையான வாழ்க்கை எல்லோருக்கும் பிடிக்கக் கூடியது தான். ஆனால், பலவகையான பணி, மாறுபட்ட பழக்க வழக்கம், இயற்கை உணவு கிடைப்பதில் சிரமம் போன்ற காரணங்களால் வேகவைத்த, எண்ணெயில் பொறித்த உணவுகளின் ஆதிக்கம், நம் வாழ்க்கை சூழலை மாற்றியமைத்து விட்டது. இதனால், பல உணவுகள் தன் இயற்கை குணத்தை இழந்து விடுகின்றன. ஆனால், எளிதில் கிடைக்கக்கூடிய சில பழங்களில் கூட ஏராளமான இயற்கை ஊட்டச்சத்துகள் நிரம்பியுள்ளன. "சிட்ரஸ் மேக்சிமா' என்ற தாவரவியல் பெயர் கொண்ட, "ரூட்டேசியே' குடும்பத்தைச் சார்ந்த சுளைகள் உள்ள, பம்ப்ளிமாஸ் பழம் மட்டுமின்றி அனைத்து பாகங்களும் ஏராளமான மருத்துவ குணங்களை உள்ளடக்கியுள்ளன.
பழச்சுளைகள் இதயத்தை வலுப்படுத்தி உடல் வீக்கத்தை குறைக்கும். இலைகள் நரம்பு மண்டலம் மற்றும் ரத்தக்குழாய் களை பாதுகாக்கும். வேர் மற்றும் பட்டைகளிலுள்ள கவமாரின்கள், பாக்டீரியா, பூஞ்சை மற்றும் பல வகையான ஒட்டுண்ணி கிருமிகளை அழிக்கும் ஆற்றல் உடையன. பம்ப்ளிமாஸ் பழங்களை கழுவி, சாறெடுத்து, எட்டு பங்கு நீருடன் கலந்து, தேவையெனில் சர்க்கரை சேர்த்து குடித்துவர, உடல் குளிர்ச்சியடையும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். கால் வீக்கம் வற்றும். எலுமிச்சம் பழத்தை ஜூஸ், ஊறுகாய், சாதம் செய்து சாப்பிடுவதை போல் பம்ப்ளிமாஸ் பழத்தையும் அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள உடல் பருமனும் குறையும்.
மதி, சென்னை: எனக்கு அடிக்கடி, வலது கை மற்றும் வலது காலில் உணர்ச்சி இல்லாதது போன்ற உணர்வு உள்ளது. இவ்வாறு இருப்பதால், வாதம் ஏற்படுவதற்கான அறிகுறியா என்று பயமாக உள்ளது. இதற்கு என்ன செய்வது?
கழுத்து மற்றும் இடுப்பு முள்ளெலும்புகளில் அழுத்தம் ஏற்படுவதால் ஏதேனும் ஒரு பக்கத்தில் ரத்த ஓட்டம் மற்றும் நரம்புகளின் செயல்பாடு குன்றலாம். அதுபோல அதிக கொழுப்புச்சத்து, அதிக ரத்த அழுத்தம் மற்றும் ரத்த உறைவு போன்ற காரணங்களால், மூளை செல்களுக்கு உயிர்காற்று பற்றாக்குறை ஏற்பட்டு இவ்வாறு தோன்றலாம். அமுக்கிரா சூரணம்-1 கிராம் தினமும் இரண்டு வேளை உணவுக்கு பின், பாலுடன் கலந்து சாப்பிடலாம். அத்துடன் எட்டி தைலம் அல்லது விஷமுஷ்டி தைலத்தை மரத்துப்போன பகுதி களில் தடவி, தேய்த்து வரலாம். கொழுப்பு மற்றும் வாயுவை அதிகரிக்கும் உணவுகளை யும், உப்பையும் உணவில் குறைத்துக் கொள்வது நல்லது.

அல்சரை தடுக்க உதவும் "மஞ்சள்'
ஆஸ்பிரின், இன்டோமெத்தசின் போன்ற வேதிப்பொருட்கள் வலி நீக்குவதற்காக தரப்படுகின்றன. குறிப்பாக ரத்த உறைவை தடுக்க ஆஸ்பிரினும், மிகைப்பட்ட யூரிக் அமிலத்தினால் தோன்றிய வலியை குறைக்க இன்டோமெத்தசினினும், நோயாளிகளால் நீண்ட காலம் எடுத்து கொள்ளப்படுகின்றன.இதனால் வயிற்றுப்புண்கள் ஏற்படுகின்றன. இதை தவிர்க்க அல்சர் நோயை கட்டுப்படுத்தும் மருந்துகள் தரப்படுகின்றன. இருந்தபோதிலும் பெரும்பாலானோருக்கு இரைப்பையில் புண்கள் தோன்றி, வலியும், ரத்தக்கசிவும் உண்டாகின்றன. ஆகையால் மேற்கண்ட மருந்தை உட்கொள்பவர்கள், உணவில் அதிகளவு மஞ்சள் சேர்த்து கொண்டால், அல்சர் வராமல் காத்து கொள்ளலாம் என, விஞ்ஞானிகள் தற்போதைய ஆய்வின் மூலம் கண்டறிந்துள்ளனர். உணவுப் பாதையிலுள்ள ஹைட்ரோகுளோரிக் அமிலம், பெப்சின் மற்றும் உமிழ்நீர், பைகார்பனேட் போன்றவற்றின் சமன்பாட்டை சரி செய்து, இரைப்பையின் சளிச்சவ்வு படலத்தை பாதுகாக்கும் தன்மை மஞ்சளுக்கு உள்ளது. அதுமட்டுமின்றி, வயிற்றில் அமில சுரப்பையும் கட்டுப்படுத்துகிறது. மஞ்சளை பாரம்பரியமாக நமது உணவிலும், திருவிழாக்களிலும், வீட்டு விசேஷங்களிலும் நமது முன்னோர் பயன்படுத்தி வந்ததன் ரகசியம் இப்போது தெரிகிறதல்லவா?

No comments:

Post a Comment