இரண்டு மணி நேர மின் தடையால்,மிக்சியில் மசாலா அரைக்க முடியாத பெண்கள் அம்மி, ஆட்டுக்கல், உரல் போன்ற பழமையான சாதனங்களை நாடுகின்றனர். அதனால், சமீப காலமாக மினி உரல்கள் விற்பனை அதிகரித்துள்ளது. தொழில் நுட்ப வளர்ச்சியால் மிக்சி, கிரைண்டர் போன்ற மின் சாதனங்கள் விற்பனைக்கு வந்ததால், பெண்கள் பல தலை முறையாக மசாலா, மாவு அரைக்க பயன்படுத்திய கல் அம்மி, ஆட்டுக்கல், உரல் போன்றவற்றை புறக்கணித்தனர். நகர் புறங்களில் அடுக்குமாடி குடியிருப்பு, வாடகை வீட்டில் வசிப்பவர்கள் அம்மி, ஆட்டுக்கல், உரல் போன்ற கல் சாதனங்களை வீடுகளில் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டதால், மின் சாதங்களைப் பயன்படுத்தினர். கிராமத்தில் கூட கல் சாதனங்கள் பயன்பாடு குறைந்தது. அதனால், கல்லில் அம்மி, உரல் தயாரித்த தொழிலாளர் குடும்பத்தினர் பெரிதும் பாதித்தனர். இந்நிலையில், தமிழத்தில் கிராமம் முதல் நகரம் வரை தினமும் இரண்டு மணி நேரம் சுழற்சி முறையில் மின் தடை செய்யப்படுகிறது. தவிர்க்க இயலாத சூழ்நிலையில் மின் தடை நேரத்தில் சமையல் செய்ய வேண்டிய நிலை உள்ளது. அப்போது மிக்சி, கிரைண்டர் போன்ற மின் சாதனங்களை பயன்படுத்த முடியாது என்பதால், மின் சாதனங்களுக்கு மாற்றாக தற்போது விற்பனைக்கு வந்துள்ள மினி கல் உரல்களை பெண்கள் உபயோகிக்க துவங்கியுள்ளனர். இரு ஆண்டாக மினி உரல்கள் விற்பனை அதிகரித்துள்ளது.
இது குறித்து மேட்டூரில் முகாமிட்டுள்ள கரூரை சேர்ந்த உரல், அம்மிக்கல் விற்பனையாளர்கள் கூறியதாவது: கிராமங்களில் மட்டுமே பெரிய அளவிலான உரல், அம்மி விற்பனையாகிறது. நகர் புறங்களில் விற்பனை குறைந்து விட்டால் தொழிலில் வருமானம் குறைந்து விட்டது. ஆனால், மின் தடை காரணமாக தற்போது எங்கள் தொழிலுக்கு மவுசு அதிகரித்துள்ளது. நகர் புறங்களில் அடுக்குமாடி கட்டடங்களில் வசிப்பவர்களும், வாடகை வீட்டில் வசிப்பவர்களும் பெரிதாக உள்ள அம்மி, ஆட்டுக்கல்லை வீட்டில் வைக்க முடியாது. எனவே, அவர்கள் உபயோகப்படுத்தும் அளவில் சிறிய அளவிலான உரலை உருவாக்கி விற்பனை செய்தோம். இந்த உரல்களுக்கு பெண்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. மின் தடை நேரத்தில் இஞ்சி, பூண்டு, வத்தல் போன்ற மசாலா பொருட்களை இடித்து இன்ஸ்டண்ட் சாம்பார், ரசம் போன்றவை தயார் செய்வதற்காக மினி உரலை பெண்கள் விரும்பி வாங்குகின்றனர். ஒரு உரல் 150 முதல் 250 ரூபாய் வரை விற்கிறோம். மின் தடை காரணமாக அழிந்து வந்த, எங்கள் தொழிலுக்கு மீண்டும் புத்துயிர் கிடைத்துள்ளது. நகர் புறங்களில் நாள் ஒன்றுக்கு பத்துக்கும் மேற்பட்ட மினி உரல்கள் விற்பனையாகி விடுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
No comments:
Post a Comment