புதிய பிரச்னைகள், நவீன முன்னேற்றங்கள், கணைய செல் மாற்றுச் சிகிச்சையும், அதனால் நீரிழிவு நோய் நிரந்தரமாக குணமாகும் வாய்ப்பு குறித்தும் விவாதிக்கப்பட்டது. ஒரு மருத்துவர், இன்சுலினை மாதம் ஒருமுறை போடும் விதமாக மாற்றியமைப்பது பற்றி விவரித்தார். இதுவரை, எலியை வைத்தே இந்த பரிசோதனை செய்யப்பட்டுள்ளது, மனிதர்களிடம் ஆய்வு நடத்தப்படவில்லை என்றும் தெரிவித்தார். இந்தியாவில், 15 வயதுக்கு மேற்பட்ட, நகரங்களில் வாழ்வோர் 11 சதவீதத்தினரும், கிராமங்களில் 3 சதவீதத்தினரும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது தோராய மதிப்பீடு தான். 30 முதல் 40 சதவீதத்தினர், உடலில் சர்க்கரை அளவு கூடுதலாக இருப்பது தெரியாமல் இருக்கின்றனர் என்று கூறப்படுகிறது.
நீரிழிவு நோய்க்கு நாம் ஏன் அடிமையானோம்?
இந்தியா பலமுறை, பஞ்சத்தை பார்த்து விட்டது. அதன் விளைவாக, சிக்கனத்தை கடைபிடிக்கும் மனநிலையை கொடுக்கும் மரபணுக்கள் நம் உடலில் தோன்றி விட்டன. இவை, உடலில் சேரும் கலோரி சத்தை, அதிகம் செலவழிக்காமல், கொழுப்பாய் மாற்றி, அதை உடல் முழுவதும் பரவச் செய்து விடுகின்றன. இதனால் தான், ஒல்லியான உடல் கொண்ட இந்தியனுக்குக் கூட, தொப்பை விழுந்து விடுகிறது. நம் உடலில், முதன்முதலில் அதிக எடை கூடும் இடம், வயிறு தான்.
இத்தகைய வளர்சிதை மாற்றக் குறைபாடு, நீரிழிவு நோய் கொண்ட பெற்றோரிடமிருந்து குழந்தைகளுக்கு ஏற்படுகிறது. இந்தக் குறைபாடு கொண்ட பெண்கள், கர்ப்பப் பை கட்டி, கர்ப்ப காலத்தில் நீரிழிவு ஏற்படுவது ஆகியவற்றால் பாதிக்கப்படுகின்றனர்.
நீரிழிவு நோய் உருவாகுமா என்பதை அறிய, சில பரிசோதனைகளை மேற்கொள்ளலாம். வெறும் வயிற்றில் இருக்கும் போது, நம் உடலில் சர்க்கரையின் அளவு 125 மி.லி., / டி.எல்., என்பதற்கு அதிகமாகவோ, தோராயமாக எடுக்கப்படும் அளவு 250 மி.லி., / டி.எல்., என்பதற்கு அதிகமாகவோ இருந்தால், சர்க்கரை நோய் உள்ளதற்கான அறிகுறியாக கொள்ளலாம்.
சர்க்கரையை வெளியேற்றும் திறன் இவர்களிடையே குறைந்து காணப்படும். டிரைகிளிசரைடு அளவும் 150 மி.லி., / டி.எல்., என்பதற்கு மேலாகவும், எச்.டி.எல்., கொழுப்பு, ஆண்களுக்கு 40 மி.லி., / டி.எல்., என்பதற்கும், பெண்களுக்கு 50 மி.லி., / டி.எல்., என்பதற்கு குறைவாகவும் காணப்படும். ரத்த அழுத்தமும் 135/85 என்ற அளவுக்கு மேல் காணப்படும். இந்த அசாதாரண கணக்கீட்டை கொண்டவர்கள், வளர்சிதை மாற்றக் குறைபாடு அல்லது "எக்ஸ் சிண்ட்ரோம்' என்ற பாதிப்புக்கு உள்ளாகி இருப்பர் என கொள்ளலாம். உங்கள் உடல் கணக்கீடுகளை நீங்களாகவே பரிசோதித்து கொள்ளலாம். உடல் எடை அளக்கும் கருவியும், இடுப்பளவைக் கணக்கிடும் நாடாவும் இருந்தால் போதும். உடல் எடை குறியீட்டெண் (பாடி மாஸ் இன்டெக்ஸ்) முதலில் எடுக்க வேண்டும். உடல் எடையை கிலோ கணக்கில் அளந்து, அதை, உங்கள் உயரத்தின் (மீட்டர்) இரு மடங்கால் வகுத்தால், கிடைக்கும் எண்ணிக்கை தான், உங்கள் எடை குறியீட்டெண். இது, 23 என்ற அளவில் இருக்க வேண்டும். 30ஐ தாண்டினால், ஆபத்து கட்டத்தை நீங்கள் நெருங்குகின்றீர் எனக் கொள்ளலாம். இடுப்பின் மேல் பாகம் மற்றும் கீழ் பாகங்களுக்கு இடையேயான விகிதம் ஆண்களுக்கு ஒன்று என்றும், பெண்களுக்கு 0.8 என்றும் இருக்க வேண்டும். கீழ் பாக அளவை, மேல் பாக அளவால் வகுத்தால் கிடைக்கும் எண்ணிக்கை இது. இடுப்பில் மேல் பாகம், ஆண்களுக்கு 102 செ.மீ., என்பதாகவும், பெண்களுக்கு 88 செ.மீ., என்பதாகவும் இருந்தால், ஆபத்தின் துவக்கம். இந்த உடல் அளவீடுகளுக்கென, தனியாக மருத்துவரை நாடிச் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. மேலே சொன்ன அறிகுறிகளில் மூன்றுக்கு மேற்பட்டவை தென்பட்டால், வளர்சிதை மாற்றக் குறைபாடு ஏற்பட்டுள்ளது என்று கொள்ளலாம். மக்களிடையே நடத்தப்பட்ட பொதுவான ஆய்வில், 15 வயதுக்கு மேற்பட்டவர்களில், 40 சதவீதத்தினர், வளர்சிதை மாற்றக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. அப்படி எனில், நாம் நீரிழிவு நோயாளிகளாக இருக்க வேண்டும் என, சபிக்கப்பட்டவர்களா? வளர்சிதை மாற்றக் குறைபாட்டை தவிர்க்க, அது, நீரிழிவு நோயாக மாறுவதைத் தடுக்க, உடலில் தோன்றக் கூடிய உயிரி ரசாயன மாறுபாடுகளை சரிசெய்ய வேண்டும். உடல், இன்சுலினை எதிர்ப்பதால் தான், இந்த மாறுபாடுகள் தோன்றுகின்றன. நாம் உண்ணும் உணவு, குளூக்கோசாக மாறி, செல்களுக்கு சென்று, உடலுக்கு சக்தி கொடுக்கிறது. "எக்ஸ் சிண்ட்ரோம்' கொண்டவர்களின் உடல், இன்சுலின் செயல்படுவதை எதிர்க்கிறது. எனவே, செல்களுக்கு குளூக்கோஸ் சென்றடையும் பணியைச் சீராக்க, அதிகளவு இன்சுலின் சுரக்க நேரிடுகிறது. இந்த அளவு இன்சுலினைச் சுரக்க, உடலால் இயலவில்லை. எனவே, நீரிழிவு நோய் உண்டாகி விடுகிறது. இந்த பாதிப்பை தவிர்க்க மிகச்சிறந்த வழி, உடல் எடை குறியீட்டெண்ணை 23லேயே வைத்து கொள்வது தான். தினமும் 30 நிமிட நடை, இன்சுலினை எதிர்க்கும் திறனை குறைக்கும். வேகமான நடையாக இருக்க வேண்டும். இடையிடையே சற்று நின்று செல்லலாம். உடல் சக்தியைச் சேமிக்கும் வகையில், ஆசுவாசமாக நடப்பது பலன் தராது.
ஒரு மணி நேரத்திற்கு நான்கு கி.மீ., நடக்கும் வகையில் உங்கள் வேகம் அமைய வேண்டும். இந்தப் பயிற்சியே போதுமானதாக இருந்தாலும், நாள் ஒன்றுக்கு 1,500 கலோரிச் சத்து மட்டுமே உட்கொள்ளும் வகையிலான உணவு முறையையும் கடைபிடிக்க வேண்டும். இது முடியவில்லை எனில், சைக்கிளிங், நீச்சல் ஆகியவற்றையும் மேற்கொள்ளலாம். இதற்கும் நேரம் இல்லையெனில், தினமும் 20 நிமிடம், மாடிப்படி ஏறி இறங்கலாம். பளு தூக்குதல், உடல் வடிவமைப்பை சீராக்குதல் போன்ற பயிற்சிகள் உடலுக்கு வலு சேர்த்து, வளைந்து கொடுக்கும் தன்மை ஏற்படுமே தவிர, வளர்சிதை மாற்றக் குறைபாட்டை நீக்காது. நடைபயிற்சி, நீச்சல், சைக்கிள் ஓட்டுவது ஆகியவற்றையும் உடனுக்குடன் செய்தால் மட்டுமே, குறைபாடு நீங்கும். முழு உடல் எடையைக் குறைக்க முயற்சி செய்யாமல், தொப்பையை மட்டும் குறைக்கும் பயிற்சியும் பலன் தராது. கலோரி அளவைக் குறைக்கும் முயற்சியாக, நீங்கள் உண்ணும் உணவில் 25 சதவீதத்தை குறைத்து கொள்ளுங்கள். "டிவி' பார்த்து கொண்டே அல்லது மூளைக்கு ஏதாவது வேலை கொடுத்தபடியே சாப்பிட்டால், உடலுக்குள் செல்லும் கலோரி அளவு அதிகரித்து விடும். நொறுக்கு தீனி உண்பதை தவிர்க்க, பழங்கள், காய்கறிகள் சாப்பிட வேண்டும். எண்ணெய் பதார்த்தங்கள், கலோரி அளவை மறைமுகமாக அதிகரிக்கும். ஒருவருக்கு ஒரு மாதத்திற்கு 500 மி.லி., எண்ணெயே போதுமானது. குழந்தை பருவம் முதலே இந்த பழக்கத்தை கடைபிடிக்க வேண்டும்.
|
No comments:
Post a Comment