விண்ணப்பித்த தகுதியுள்ள அனைவருக்கும் இரண்டு மாதங்களுக்குள் புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்படும் என முந்தைய திமுக அரசு அறிவித்திருந்தது. செல்லும் இடங்களிலெல்லாம் இதை அத் துறையின் அப்போதைய அமைச்சரும், அதிகாரிகளும் சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளைகள்போல சொல்லிச் சென்றனர். ஆனால், நடைமுறையில் அது கடைப்பிடிக்கப்படவில்லை.
விண்ணப்பித்தால் குறைந்தது ஐந்தாறு மாதங்களாவது கழித்துத்தான் (பெரும் போராட்டத்துக்குப் பிறகு ஒருவழியாக) குடும்ப அட்டைகள் கிடைத்துவந்தன.
ஆட்சி மாறிவிட்டது. எதிர்பார்க்காதவகையில் பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. அவ்வகையில், இப்போதாவது விண்ணப்பித்த இரண்டு மாதங்களில் குடும்ப அட்டைகள் கிடைக்குமா என எதிர்பார்த்துக் காத்திருந்தோருக்கு ஏமாற்றமே பதிலாய் அமைகிறது.
எந்தக் கட்சியின் ஆட்சி என்றாலும் மதுவைப்போல மாறாத ஒருசில விஷயங்களில் குடும்ப அட்டைப் பிரச்னையும் ஒன்றாகவே தொடர்கிறது.
மனைவியைப் பிரசவ வார்டில் அனுமதித்துவிட்டு, சுகப் பிரசவம் என்ற சொற்கள் காதில் விழ வேண்டுமே என்ற பதைபதைப்புடன் காத்திருக்கும் கணவனின் நிலைதான், புதிய குடும்ப அட்டை கேட்டு விண்ணப்பிப்போரில் பெரும்பாலானோரின் நிலை.
சில வட்ட வழங்கல் அலுவலகங்களில் வாரத்தில் இரண்டு நாள்களில் மட்டுமே புதிய குடும்ப அட்டைகளுக்கான விண்ணப்பங்கள் ஏற்கப்படுகின்றன. இதனால் குடும்ப அட்டை கோரும் கூலித் தொழிலாளிகளுக்கு சில நாள்கள் வேலை பாதிக்கப்படுகிறது.
குடும்ப அட்டை விண்ணப்பங்களைப் பெற்றுக்கொண்டு ரசீது வழங்கும் ஊழியர் புதிய குடும்ப அட்டைக்கான ஆவணங்கள் முழுமையாக இருக்கின்றனவா என்பதை அப்போதே தெரிவித்துவிட்டால் விண்ணப்பிப்பவர்களுக்கு பெரும் சுமை குறையும். ஆனால், அப்படிச் செய்வதில்லை.
விண்ணப்பித்த 15 நாள்களுக்குள் நேரில் வந்து விசாரணை நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்படுகிறது. ஆனால், அதுவும் நடைமுறையில் கடைப்பிடிக்கப்படுவதில்லை.
விசாரிக்க அதிகாரி வரவில்லையே எனக் காத்திருந்து அறுபது நாள்கள் கழித்து ஆவலோடு அலுவலகம் சென்று விசாரித்தால் விண்ணப்பம் சில நேரங்களில் நிராகரிக்கப்பட்டதாகவும் பதில் கிடைக்கலாம். அவ்வாறு இருந்தால் விண்ணப்பதாரருக்கு மீண்டும் முதலில் இருந்து தொடங்க வேண்டிய நிர்பந்தம். நிராகரிப்புக்குக் காரணம் கேட்டால் மழுப்பலான பதில்களே கிடைப்பதும் வாடிக்கை.
எல்லாம் இருந்தாலும் ஏதேனும் ஓர் ஆவணம் இல்லை என பொதுமக்களை அலையவிட்டு, புதிய குடும்ப அட்டைகள் வழங்குவதற்கு சாதாரணமாக ஆறேழு மாதங்களாகி விடுகின்றன. சிலர் ஓராண்டாகியும் குடும்ப அட்டை கிடைக்கவில்லை எனப் புலம்பித் தவிப்பதை சம்பந்தப்பட்ட அலுவலகங்களுக்குச் சென்றால் கேட்கலாம்!
விண்ணப்பங்கள் காணாமல்போயின என்பதில் தொடங்கி அதிகாரிகளின் பல்வேறு பதில்களை எதிர்கொள்ள வேண்டிய நிலைக்கு குடும்ப அட்டை கேட்டு விண்ணப்பிப்போர் தள்ளப்படுகின்றனர்.
விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தால், எந்த நாளில் புதிய அட்டை வழங்கப்படும் என்பதைத் தெரிந்துகொள்ள பலமுறை அலுவலகத்துக்கு நடையாய் நடக்க வேண்டும்.
சில இடங்களில் அதிகாரிகள் காலையில் வழக்கமான பணிகளை மேற்கொள்ள வேண்டியிருப்பதால் புதிய குடும்ப அட்டைகள் பெற மாலையில் வரச் சொல்வர். இதனால் தனியார் நிறுவன ஊழியர்கள், கூலித் தொழிலாளிகள் அவதிக்கு உள்ளாகின்றனர்.
அதற்காகவும் சில நாள்கள் நடந்து குடும்ப அட்டையைக் கையில் வாங்கும்போது மீண்டும் பதைபதைப்பு தொற்றிக் கொள்ளும். சுகப்பிரசவம் ஆனாலும் குழந்தை உடல் குறைபாடுகள் இல்லாமல் பிறந்திருக்க வேண்டுமே எனக் கவலைப்படும் தகப்பனைப்போலத்தான் நிலை.
குடும்ப அட்டையில் புகைப்படம் மாறாமல், பெயர்கள், முகவரி பிழைகளின்றி இருந்தால், வணங்கிய கடவுள் கைவிடவில்லை எனப் பொருள். மாறாக ஏதேனும் பிழைகள் இருந்தால்.... திருத்தத்துக்காக மீண்டும் நடைப்பயணம் தொடர வேண்டியதுதான்.
ஒருவழியாக பிழையில்லா குடும்ப அட்டை கைகளில் வந்ததும் ரேஷன் கடைகளுக்குப் பொருள்கள் வாங்கச் சென்றால் அனைத்துப் பொருள்களும் அனைத்து மாதங்களும் அனைவருக்கும் கிடைப்பதில்லை.
ஆக, போராட்டங்கள் அங்கும் தொடரவே செய்கின்றன.
|
No comments:
Post a Comment