Monday, December 12, 2011

இவரை தெரிகிறதா?


இரண்டாம் நாள் நிகழ்ச்சியாக நேற்று நோபல் பரிசு வென்ற வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன், குழந்தைகளுக்கான அறிவியல் மாநாட்டை துவங்கி வைத்து பேசியதாவது: அறிவியல் என்பது நெடுங்கால ஆராய்ச்சிக்கு உட்பட்டது. இந்தியாவில் மட்டும்தான், அதிகமான சம்பிரதாயங்கள் இருப்பதை காண முடிகிறது. இங்கு ஆராய்ச்சியாளர்களையும், சினிமா நட்சத்திரங்களையும் ஒன்றாக பார்க்கும் கலாசாரம் உள்ளது. ஆராய்ச்சியாளர்களுக்கு மாலை, மரியாதை செய்யாவிட்டால் அவர்கள் தவறாக நினைத்துக் கொள்வார்கள் என்று கருதுகின்றனர். உங்களுடைய மாலை, மரியாதைகள் எங்களுக்கு தேவையில்லை. எங்களுக்கு ஆராய்ச்சிதான் முக்கியம்.டார்வின், நியூட்டன் ஆகியோரின் புத்தகங்களை படித்ததன் மூலம் அவர்கள் என்னை கவர்ந்தனர். அதற்காக நான் என்றும் அவர்களை என் முன்மாதிரியாக நினைத்துக் கொள்ளவில்லை. அவர்கள் புத்தகங்களை படித்ததால், அவர்கள் செய்த தவறுகளை அறிந்து கொண்டு, நான் அதை திருத்திக் கொண்டேன். 

மாணவர்கள், உங்களுடைய ஆசிரியர்களை மதியுங்கள். ஏனென்றால், ஆசிரியர்கள் தான் உங்கள் வழிக்கட்டிகள். அவர்களால்தான் உங்களுக்கு சரியான வழி காட்ட முடியும். அறிவியல் என்பது முற்போக்கு சிந்தனை உடையது. அறிவியல் அறிஞராகிய நான் ஒன்றும் கிரிக்கெட் நட்சத்திரமோ அல்லது சினிமா நட்சத்திரமோ இல்லை. என்னிடம் ஆட்டோகிராப் வாங்கி ஒன்றும் ஆகப்போவது இல்லை. இன்டர்நெட் என்பது இந்தியாவில் ஒரு புரட்சியையே ஏற்படுத்தி உள்ளது. இது, இந்திய அறிவியலில் ஒரு மறுமலர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இன்டர்நெட் மேற்கத்திய நாடுகளில் உருவாகி, இந்தியாவில் அதிகமாக பயன்பட்டு வருகிறது. அறிவியல் எந்த நாட்டிலும் உருவாகலாம். யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.

உதாரணமாக, காலரா நோயை வங்கதேசத்தில் உள்ள ஒரு அறிவியல் ஆராய்ச்சியாளர் கண்டறிந்தார். ஆனால், இந்த நோய்க்கான தடுப்பு மருந்தை அமெரிக்காவில் உள்ள ஒரு ஆராய்ச்சியாளர் கண்டுபிடித்தார். அறிவியலும், ஆராய்ச்சியும் நாடுகளை கடந்து செல்லக்கூடியவை. ஆராய்ச்சி என்பது நாட்டிற்காக செய்யப்படுவது கிடையாது. நான் செய்த ஆராய்ச்சி இந்தியாவிற்காக இல்லை. உலகத்திற்காகவும், உலக நன்மைக்காகவும் செய்தேன். அறிவியல் மற்றும் ஆராய்ச்சியில் தேசிய உணர்வை புகுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் பேசினார்.

எஸ்.ஆர்.எம்., பல்கலைக்கழக துணை வேந்தர் சத்தியநாராயணன், இந்திய அறிவியல் கழக தலைவர் பாண்டே உட்பட பலர் கலந்து கொண்டனர். பல்வேறு பகுதிகளில் இருந்து மாநாட்டில் கலந்து கொண்ட இளம் விஞ்ஞானிகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. 

No comments:

Post a Comment