“சி.ஐ,ஏ. உளவாளிகளை நாம் பிடித்திருக்கின்றோம்” என்று ஹிஸ்பொல்லா அமைப்பு வெளியிட்ட தகவல் உண்மைதானா அல்லது போலியான திசைதிருப்பலா என்ற சர்ச்சைகள் மிகச் சூடாக சர்வதேச மீடியாக்களில் ஒரு ரவுன்ட் ஓடிக்கொண்டிருக்கிறது.
தாம் கைது செய்துள்ள உளவாளிகளின் பெயர்கள் உட்பட அனைத்து அடையாளங்களையும் டி.வி. ஒளிபரப்பு ஒன்றில் வெளியிட்டிருக்கிறது!
“லெபனானில் வேறு பெயர்களில் தங்கியிருந்து உளவு பார்க்க அனுப்பி வைக்கப்பட்ட சி.ஐ.ஏ. உளவாளிகளின் நிஜமான பெயர்கள் இவை” என்று அறிவிப்போது இந்த விபரங்களை லெபனான் டி.வி. சேனல் ‘அல்-மனார்’ வெளியிட்டிருக்கின்றது.
அல்-மனார், ஹிஸ்பொல்லா அமைப்புடன் நெருக்கமான சேனல் என்பது சர்வதேச மீடியாக்களிடையே பிரசித்தம். இதனால், இந்த விபரங்களை வெளியிட்டு அதிர்வை ஏற்படுத்துவதற்காக ஹிஸ்பொல்லாவின் உளவுப் பிரிவுதான் முழு விபரங்களையும் அல்-மனாருக்கு வழங்கியுள்ளது என்பதில் ரகசியம் ஏதுமில்லை.
லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இருந்த Pizza Hut உணவகத்தை ரகசிய சந்திப்பு இடமாக வைத்திருந்து, சிக்கிக் கொண்ட உளவாளிகள் இவர்கள் இவர்களை ரகசியமாகக் கண்காணித்து, லெபனானில் சி.ஐ.ஏ. வைத்திருந்த உளவு நெட்வேர்க்கை முழுமையாக கைப்பற்றி விட்டதாக ஹிஸ்பொல்லா அறிவித்திருந்தது.
அல்-மனார் டி.வி. சேனல் உளவாளிகளின் பெயர்கள் மற்றும் அடையாளங்களை வெளியிட்ட டி.வி-ஷோவில், சிக்கிக் கொண்ட உளவாளிகளின் போட்டோக்கள் ஏதும் காண்பிக்கப்படவில்லை. மாறாக, அனிமேஷன் முறையில் கிராஃபிக் காட்சிகளாக, அவர்கள் கதையே காண்பிக்கப்பட்டது. அவர்கள் சி.ஐ.ஏ.-யினால் லெபனானுக்கு அனுப்பி வைக்கப்பட்டது, லெபனானில் தமக்கு தகவல் கொடுக்க லோக்கல் இன்ஃபோமர்களை தேடியது, Pizza Hut ஃபாஸ்ட்-ஃபூட் உணகத்தில் ரகசியமாக சந்தித்து தகவல் பரிமாற்றம் செய்தது, என்று விலாவாரியாக காட்டப்பட்டது.
இந்த டி.வி-ஷோ ஒளிபரப்பு சி.ஐ.ஏ.-க்கு கடும் அழுத்தங்களை ஏற்படுத்தியுள்ளது. சி.ஐ.ஏ. பெண் பேச்சாளர் ஜெனிஃபர் யங்பிளட், “தீவிரவாத அமைப்புகள் வெளியிடும் தகவல்கள் குறித்து ஏஜென்சி (சி.ஐ.ஏ.) கருத்து தெரிவிப்பது வழக்கமல்ல. ஹிஸ்பொல்லா அமைப்பு ஒரு தீவிரவாத இயக்கம் என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்க முடியாது. அவர்களது பிரச்சார மீடியாதான் அல்-மனார் டி.வி. சேனல் என்பதும் பலருக்கும் தெரிந்ததுதான். அதனால், அந்த சேனலில் வெளியிடப்பட்ட விபரங்கள் தொடர்பாக நாம் கருத்து வெளியிட முடியாது” என்று நழுவிக் கொண்டார்.
“அல்-மனாரில் வெளியிடப்பட்ட பெயர்களில் சி.ஐ.ஏ. உளவாளிகள் லெபனானில் இருந்தனரா?” என்ற கேள்விக்கும் பதில் கொடுக்க மறுத்துவிட்டார் ஜெனிஃபர்.
உளவு வட்டாரங்களில் விசாரித்தவரை, அல்-மனார் வெளியிட்ட பட்டியலில் உள்ள பெயர்களில், பெய்ரூட் சி.ஐ.ஏ. சீஃப்-ன் பெயர் மற்றும் அடையாளங்கள் துல்லியமானவை என்றே தெரிகின்றது. அவரது பெயர் சரியாக உள்ளதால், மற்றைய பெயர்களும் நிஜமான பெயர்களாக இருக்கவே சான்ஸ் உள்ளது. அந்த வகையில் இந்த ஒளிபரப்பு சி.ஐ.ஏ.-க்கு நிச்சயம் ஒரு பெரிய அவமானம்தான்.
அல்-மனார் ஒளிபரப்பில் வெளியிடப்பட்ட பெயர்கள், சட்ட நடைமுறைகளுக்கு அமைய விறுவிறுப்பு.காமில் வெளியிடப்படவில்லை.
|
No comments:
Post a Comment