Monday, December 12, 2011

குழந்தை வரம் வேண்டி கோயிலில் பள்ளிகொள்ளும் பெண்கள்.

வேலூர் அருகேயுள்ள விரிஞ்சிபுரம் மார்கபந்தீஸ்வரர் கோயிலில் குழந்தை வரம் வேண்டி நள்ளிரவில் சிம்மக்குளத்தில் பெண்கள் நீராடி ஈரத் துணியுடன் கோயில் வளாகத்தில் படுத்து உறங்கினர்.

வேலூர் மாவட்டம், விரிஞ்சிபுரத்தில் மரகதாம்பிகை & சுயம்பு மார்கபந்தீஸ்வரர் கோயில் உள்ளது. ஆண்டுதோறும் கார்த்திகை கடைசி ஞாயிறு அன்று இங்குள்ள சிம்மக்குளம் திறக்கப்படும்.

குளத்தில் நீராடும் பெண்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். பேய், பிசாசு, பில்லி, சூன்யம், வலிப்பு போன்றவை நீங்கும் என்பது நம்பிக்கை.

குழந்தை வரம் வேண்டும் பெண்கள் சிம்மக்குளத்தில் நீராடி ஈரத்துணியுடன் கோயில் வளாகத்தில் இரவு தூங்க வேண்டும். அப்போது அவர்களது கனவில் சுவாமி தோன்றி பழம், பூ, பாலாடை கொடுப்பதும், அடுத்த ஆண்டே அவர்கள் குழந்தைபேறு அடைவார்கள் என்பதும் பக்தர்களின் நம்பிக்கை.

வேண்டுதல் நிறைவேறியவர்கள் கோயிலுக்கு வந்து தொட்டில் கட்டிச் செல்வார்கள். அதன்படி, இந்தாண்டு கடைசி ஞாயிறு விழா நேற்று நடந்தது.

இதையொட்டி நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணிக்கு ரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள், கலவை சச்சிதானந்த சுவாமிகள் ஆகியோர் சிம்மக்குளத்தை திறந்து வைத்தனர்.

அப்போது ஏராளமான பெண்கள் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் குழந்தை வரம் வேண்டி சிம்மக்குளத்தில் நீராடினர். பின்னர் ஈரச் சேலையுடன் கோயில் வளாகத்தில் படுத்து உறங்கினர்.

நேற்று காலை 6.30 மணிக்கு பிரம்மகுளத்தில் தீர்த்தவாரியும், பாலகனான பிரம்மாவுக்கு உபநயன சிவதீட்சையும், சுவாமி வீதி உலாவும், பகலில் அபிஷேகமும் நடந்தது.

மாலையில் அபிஷேகம், மகா தீபாராதனை, இரவு சுவாமி திருவீதி உலா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பக்தியுடன் வழிபாடு செய்தனர்.

No comments:

Post a Comment